1925 ஜூலை 15 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்து, 2011 மே 13 ஆம் தேதி கொல்கத்தாவின் அரசு மருத்துவ மனைக்குத் தன் சடலத்தைத் தானமாக வழங்கிய பாதல் சர்க்காருக்கு இந்த 15 ஆம் தேதி 86 வயது பிறக்கிறது. ’மூன்றாம் அரங்கம்’ என்னும் கருத்துருவை விதைப்பதற்காகச் சிறியதும் பெரியதுமான பயிலரங்குகள் பலவற்றை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இங்கிலாந்திலும் பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் நடத்தியிருக்கிற பாதல் சர்க்கார், கட்டுமானப் பொறியியல் படித்துவிட்டு, அதை வெறுத்து, அதிலிருந்து வெளிவருவதற்காகவே நகர நிர்மாணவியல் படித்துக் கல்கத்தாவின் தலைமை நகர நிர்மாணகராகப் பணியாற்றி, அதிலிருந்தும் தன் 52ஆவது வயதில், 1977 இல், வம்படியாக ஒருகட்டத்தில் தானாக வெளியேவந்தவர். ஆயின் கல்லூரி நாளிலிருந்து வாழ் நாளின் இறுதிவரையும் நாடகத்தை மட்டும் விடாது தொடர்ந்து கொண்டிருந்தவர். பாதல் சர்க்கார் என்கிற நாடகக் கலைஞரைப் பற்றி ஒற்றைவரியில் சொல்வதாயிருந்தால், அவர் ‘தோப்பாய் நின்ற தனிமரம்’!

pathal_sarkar_301வீதி நாடக இயக்கம் இந்திய மண்ணில் வேர்விட்ட பகுதி களெங்கும், பாதல் சர்க்கார் அதன் அடியுரமாய் நிச்சயம் பேசுபொருளாயிருந்திருப்பார். அரசியல் கட்சித் தளத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாதிருந்து, சமூகச் செயல்பாட்டுத் தளத்திற்கு நாடகத்தைக் கொண்டு வருவதில் உறுதியுடன் இருந்த பாதல் சர்க்கார் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். 1963 இல் பாதல் சர்க்கார் எழுதிய ‘ஏவம் இந்திரஜித்’ என்னும் இருத்தலிய நாடகம் மூலம் நவீன இந்திய நாடக ஆளுமைகளில் ஒருவராக அறியப்பட்டவர். 1968 இல் சங்கீத நாடக அகாடமி விருது, 1972 இல் பத்மஸ்ரீ விருது, 1992 இல் மத்தியப் பிரதேச அரசால் காளிதாஸ விருதும் பெற்ற இவருக்கு 2010 இல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டபோது அதைத் தன்னடக்கத்தோடு மறுத்தவர்.

ஜூன் 1971 முதல் மே 1973 வரையிலான இரண்டாண்டு காலம், ஜவஹர்லால் நேரு ஆய்வுத் தகைமையாக அவர் மேற்கொண்டிருந்த ‘கிராம-நகர ஒருங்கிணைப்பு இழைவரங்கப் பட்டறை’யின் (Workshop for a Theatre of Synthesis as a Rural-Urban Link) ஆய்வு முடிவுதான் ‘மூன்றாம் அரங்கம்’ என்பது! ஆய்வுத் தகைமையாகச் செயல் படுவதற்கு முன்பே அவருக்குள் உந்துவிசையாய் இத்திட்டம் இயங்கிக் கொண்டிருந்தது என்று கொள்ளுவதே சரி. 1957 முதல் 1959 வரை இரண்டாண்டுக் காலம் இங்கிலாந்தில் இருந்தபோது இவருக்கு நாடக ஈர்ப்பைத் தந்திருந்த குரோட்டோவ்ஸ்கியின் ஏழ்மை அரங்கும் (Poor Theatre), ரிச்சர்ட் ஷெக்னரின் சூழலிய அரங்கும் (Environmental Theatre) இவருக்குள் ஊறிக் கிடந்ததன் பக்குவம்தான், இந்த ஆய்விற்கும் இவரின் புத்தாக்க நாடக முயற்சிகளுக்கும் இவரைக் கொண்டுவந்து சேர்த்தது. இதுவே, இவர் காலத்திய வங்க நாடக ஆசிரியர்களான சம்புமித்ரா, உத்பல் தத் போன்றோரிட மிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டியது. இவரின் ‘மூன்றாம் அரங்கம்’, நகரச் சிந்தனையில் இறுகிப் போயிருந்த சட்டக அரங்கை இடம் நகர்த்தி விலக்கி வைத்தது.

கல்கத்தாவின் பாரம்பரியக் கலையான ‘ஜாத்ரா’ இவருக்குள் நாடகியமாகச் செயல் பட்டது போலவே காலனிய ஆதிக்கத்தின் உள்நுழைவால் உருவான புதிய சிந்தனைகளும் இவரைக் கட்டிப் போட்டன. இரண்டின் இணைப்பில், அதனதன் பலத்தைக் கொண்டு உருவான செயல்முறைக் கலைப் படைப்பே ‘மூன்றாம் அரங்கம்’. இந்தியாவில், கிராமம்-நகரம் என்னும் பிளவமைப்பில் சமூகநிலையில் பட்டிக்காட்டான்/ நவநாகரிகன்; பொருளாதாரநிலையில் வறுமை/ செழிப்பு; பண்பாட்டுநிலையில் தாய்மொழிக்கல்வி/ ஆங்கிலவழிக்கல்வி என்பதாகவெல்லாம் அமைந்து, படைப்பாளிகளின் படைப்புகளில் அவை வெளிப் படுகின்றன. இந்த இரட்டமைகளின் பலம், பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றின் பலங்களின் இணைப்பில், பார்வையாளர் பங்குபெறலுக்கு முன்னுரிமை தந்து, தோற்றமயக்கங்களை விலக்கிய ஒன்றாக, பாரம்பரிய ’முதல் அரங்’கிலும் மேற்கத்திய ‘இரண்டாம் அரங்’கிலும் கொள்ளுவன கொண்டும் தள்ளுவன தள்ளியும் புதிய அரங்காக அமைந்திருப்பதே ‘மூன்றாம் அரங்கம்’; ஆகும்.

ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவலான ‘ஸ்பார்ட்டக’ஸைத் தான் நீண்ட நாட்கள் மனசுக்குள் பதுக்கிப் போட்டு, ‘மூன்றாம் அரங்கு’ கொடுத்த சாத்தியத் துணிச்சலால் 1972 சனவரியில் நாடகமாக எழுதி, 1973 சனவரியில் நாடகமாக நிகழ்த்தினார் பாதல் சர்க்கார். ஜவஹர்லால் நேரு ஆய்வுத் தகைமையாக அவர் மேற் கொண்ட திட்டத்தின் பருண்மையான வெளிப்பாடு தான் ‘ஸ்பார்ட்டகஸ்’. ரோம் சாம்ராஜ்யம் அடையாளங் காட்டிய அடிமைகளின் எழுச்சியின் பெயர் ‘ஸ்பார்ட்டகஸ்’. 1919 ஜூலை 11 ஆம் தேதி, ஸ்வேந்திவோவ் பல்கலைக் கழகத்தில் வி.இ. லெனின் ‘அரசு’ பற்றி உரை நிகழ்த்துகையில், இவ்விதம் குறிப்பிட்டார்:-

‘ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அடிமைகளின் மிகப் பெரிய எழுச்சி ஒன்றின் மிகமிகப் பிரபலமான தலைவனாகத் திகழ்ந்தவனின் பெயர் ஸ்பார்த்தகஸ்... பார்வைக்கு எல்லா வல்லமையும் கொண்டதுபோல் தோன்றிய ரோமப் பேரரசு, முழுக்கவும் அடிமைமுறையின் அடிப்படையில் அமைந்திருந்த ரோமப் பேரரசு, ஸ்பார்த்தகஸ் தலைமையின் கீழ் ஆயுதமேந்தி ஒரு மாபெரும் படையாக ஒன்று திரண்ட அடிமைகளின் மாபெரும் எழுச்சியின் தாக்குதலுக் குள்ளாகிப் பல்லாண்டுகள் வரையில் அதிர்ச்சிகளுக்கும் அடிகளுக்கும் உள்ளாயிற்று. இறுதியில், அவ்வடிமைகள் தோற்றுச் சிறைபிடிக்கப்பட்டு, ஆண்டைகளால் சித்திரவதை செய்யப்பட்டனர். வர்க்க சமுதாயம் பற்றிய வரலாறு முழுவதிலும் இத்தகைய உள்நாட்டுப் போர் களைக் காணலாம். அடிமைமுறையின் காலகட்டத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர்களில் மிகமிகப் பெரிதான ஒன்றையே நான் இப்பொழுது ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டேன்’ என்று!

வரலாற்றில், அடக்குமுறைக்கு எதிரான எழுச்சியின் அடையாளமாக லெனினால் மேற்கோள் காட்டப் பெற்றவர், ‘ஸ்பார்ட்டக’ஸாகும். பாதல் சர்க்காரின் இந்த நாடகமும், அதையே, பொறுப் புடனும் சமூக அக்கறையுடனும் பதிவு செய்கிறது. ஸ்பார்ட்டகஸ் உயிருடன் இருக்கிறானா இல்லையா அல்லது வேறு எந்த அடிமை வேண்டுமாயினும் இன்னொரு ஸ்பார்ட்டகஸாக உருவாகி விடலாமோ என்கிற ரோம் சாம்ராஜ்யத்தின் அச்சமும் அடிமைகளின் எழுச்சியுமே நாடக நகர்வாகியிருக்கிறது. நாடகம் தொடங்குகிற இடத்திலேயே கட்டியக்காரனின் கூற்றில், ’இந்திய சமூகத்தில் பண்பாட்டுநிலையில் உழலும் இரட்டமையும் ரோம் சாம்ராஜ்யத்துடன் ஏதோ ஒருவகையில் இணைக்கப் பார்க்கிற ஒருமைத் தன்மையும் அடிச்சரடாய் இணைந்திருக்கிறது என்பது முக்கியம். கட்டியக்காரன் பார்வையாளரை நோக்கிப் பேசும், நாடகத்தின் முதல் உரையாடல் இது. அதில் இப்படி வருகிறது;- ‘...ரோம் சாம்ராஜ்யம் அழிந்து விட்டது. அடிமைமுறையும் ஒழிந்துவிட்டது இல்லையா? இப்பொழுது இருபதாம் நூற்றாண்டு.... நாகரிகமான மனிதர்கள்.... நாகரிகமான சமூகம். அப்படித்தான் இல்லையா? எனக்குத் தெரியாது... நமக்குத் தெரிய வழி யில்லை. அதனால்தான் எங்கள் நாடகம் தொடங்குகிறது... நாம் யார்... நாம்தான் ஆண்டைகள்....நாம்தான் அடிமைகள்... இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்துவுக்கு முன் எழுபத்தொன்பது.... ரோம் சாம் ராஜ்யம்... பாரததேசம்’ என்பதாய்! அடிமைகளையும் நம்மைப் போன்ற நாகரிகமான சமூகத்தினராய் நம்மால் கருதப்படுபவரையும் இணைத்துப் பார்க்க வைக்கிற, ரோம் சாம்ராஜ்யத்தையும் பாரத தேசத்தையும் பொருத்திப் பார்க்க வைக்கிற கூற்றை, மூன்றாம் அரங்கு கட்டியக் காரன் மூலம் மிக எளிமையாக ஒரே தளத்தில் செய்து விடுகிறது. கிராமம் - நகரம் என்பதன் இணைப்பாய், அடிமைகளையும் நாகரிகமானவர்களையும் பெரும் வேறுபாடுகள் ஏதுமற்ற நாடகநிகழ் தளத்தில் ஒன்று படுத்திப் பார்க்க வைக்கிறார் பாதல் சர்க்கார். ரோம் சாம்ராஜ்யத்தையும் பாரத தேசத்தையும்கூட!

‘ஏவம் இந்திரஜித்’ நாடகத்திற்குப் பிறகு, அவருக்கு மிகப்பெரும் புகழைத் தேடித் தந்த நாடகம் ‘ஸ்பார்ட்டகஸ்’. சென்னை, பண்பாடு மற்றும் மக்கள் தொடர்பகமும் திருச்சி நாடக சங்கமும் திருச்சியில் 1989 செப்டம்பரில் நடத்திய பாதல் சர்க்கார் நாடகவிழாவில், என் விருப்பத் திற்காகவே, நான் கேட்டதற்காகவே எனக்காகக் கோ.ராஜா ராம் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பியது தான் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம். திருச்சி தூய வளனார் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அந்தவிழாவில் நான் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறேன். அந்த நிகழ்த்தல் அனுபவம், அதுகொடுத்த பேரின்பம், இன்னொரு நாடகக்காரருக்கு இவனளவு வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே! விடிகாலை 6 மணிக்கு நாடகம் முடிந்த வரலாறுகள் நம்மிடம் நிறையவே உண்டு.. ‘கூத்தாடி கிழக்கே பார்ப்பான்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்’ என்ற சொலவடையே அதைச் சொல்லும். ஆனால் செப்டம்பர் 23 ஆம் தேதி விடிகாலை 6 மணிக்கு, வானம் தூறிக் கொண்டிருக்க, மைதானத்தைச் சுற்றிலும் பார்வை யாளர்கள் நாடகம் பார்க்கிற முகமையுடன் அமர்ந்திருக்க, நாடகம் திறந்தவெளியில் தொடங்கியது. நடிகர்கள் மண்ணில் விழுந்தும், எழுந்தும், பாய்ந்தும், படிந்தும், ஆடியும், ஓடியும் உணர்ச்சிச் சிதறல்களை அள்ளிவீச, மொத்தப் பார்வையாளரும் நிலைகுத்தி நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அனுபவமும், நாடகம் முடிந்ததும் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில், நேற்றைய விவாதங்கள், கேள்விகள் எல்லாவற்றுக்குமான பதிலாய் அமைந்துவிட்டது மு.ராமசாமியின் ‘ஸ்பார்டகஸ்’ நாடகம்; மு.ராமசாமியின் மேலான எல்லாக் கேள்வி களுக்குமான பதிலாக ‘ஸ்பார்டகஸ்’ அமைந்து விட்டது. இனி பேசுவதற்கு எதுவுமேயில்லை; எல்லாவற்றுக்கு மான பதிலை ‘ஸ்பார்டகஸ்’ நாடகம் சொல்லிவிட்டது’ என்பதாகக் கருத்தரங்கில் பேசப்பட்ட அனுபவமும், இன்னமும் மறக்க முடியாமல், இவைபோன்ற மறக்க முடியாத நாடக அனுபவங்களில், முதல் வரிசையில் அமர்ந்து இனிமை பரப்பிக்கொண்டேயிருக்கின்றன.

1989 செப்டம்பர் தொடங்கி 2000 மார்ச் வரையு மான 10லு ஆண்டுகளில் ஏறக்குறைய 20 தடவைகள் நான் ஸ்பார்ட்டகஸை நிகழ்த்தியிருக்கிறேன். தமிழகத்தின் வடகோடியான சென்னையில் லயோலாக் கல்லூரிக் கால்பந்தாட்ட மைதானத்தில் ‘அகன்ற தரையில்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு, ஐகஃப் சார்பிலும், தமிழகத்தின் தென்கோடியான பூதப்பாண்டியில், ஜீவா பிறந்தநாள் விழாவில் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 18-08-1991-இலும் ஸ்பார்ட்டகஸை நிகழ்த்தி யிருக்கிறேன். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஸ்பார்ட்டகஸை நான்கு முறைகள் நிகழ்த்தி யிருக்கிறேன். தமிழகச் சூழலில் ‘ஸ்பார்ட்டகஸ்’ நிகழ்த்தப்பட்ட கால கட்டத்தில், நாடக சபாக்கள் எதனின் ஆதரவுமின்றி, வணிகச் சூழலுக்கு எதிரான நிலையில், உடன் நடிக்கும் நடிகர்களின் உந்துதலை மட்டுமே கொண்டு, திறந்தவெளியில் நிகழ்த்தப்படும் ஒரு நாடகம், இத்தனை முறைகள் நிகழ்த்தப்படுவ தென்பதே பெரிய விஷயம்தான்!

10-02-1992 இல் கோமல் சுவாமிநாதன் முன் முயற்சி எடுத்து நடத்திய ‘சுபமங்களா நாடக விழா’ வில் சென்னை தியாகராயநகர் கிருஷ்ணகான சபாவின் வெளியே, திறந்தவெளியில் என்னால் இது நிகழ்த்தப் படும்போது, முன்வரிசையில் தரையில் அமர்ந்து அனுபவித்துப் பார்த்தவர் பாதல் சர்க்கார்! அவர் மனம் மிக உவந்து, நாடகம் மிகச் சரியாகவும், சிறப்பாகவும் அமைந்திருந்ததாக என் கையைப் பிடித்துக் கூறியது, எனக்குக் கிடைத்த வரம்! நாடக ஆசிரியரும் நெறி யாளருமான புகழ்பெற்ற ஒருவரின் படைப்பாக வெளித் தெரிய வந்த ஒன்றை, தன் கீழ்ப் பயிற்சி பெற்ற ஒருவனின் நெறியாளுகையில், சிற்சில மாற்றங்களுடன் உருவாகி யிருப்பதை, அவரே ஒரு ‘க்கு’ கூடப் போடாமல் மனந் திறந்து பாராட்டுவதென்பது அத்தனை இயல்பான ஒன்றல்ல.

ருஷ்ய நாடக உலகில் இருபெரும் உச்சங்களாக விளங்கிய ‘ஆண்டன் செக்காவ்’, ‘ஸ்தானிஸ் லாவ்ஸ்கி’க்குக் கிடைத்த அனுபவங்கள் இதற்கு நேர்மாறானவை! ‘நாடகம் நல்லாருக்கு.... ஆனால் என்னுடைய கதாபாத்திரங்கள்தான் இதில் எதுவுமில்லை’ என்று ஸ்தானிஸ்வாவ்ஸ்கியிடம் ‘செக்காவ்’ சொல்லிச் சென்றிருப்பதை வரலாறு சொல்லிக் காட்டியிருப்பது நினைவில் இல்லாமல் இல்லை. ஆனால் இங்கு, மனந்திறந்து பாராட்டியதோடன்றி அதைப் பகிரங்கப்படுத்தியும் மற்றவர்களிடம் பேசி யிருப்பதைப் பின்னாளில் நான் தெரிந்துகொண்ட போது, மனசு பாதல் சர்க்காரின் முகம் தேடி மெல்லிதாகப் பறக்கத் தொடங்கியது. மதுரையில் 07-08-1993 முதல் 12-08-1993 வரை நடைபெற்ற உயர்நிலை வீதிநாடகப் பயிற்சிப் பட்டறையின்போது, ‘சாதா காலோ’ (Sada Kalo) நாடகம் நிகழ்த்த வந்திருந்த அவருடைய மூவர் குழுவினரிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர் பார்த்த என் ஸ்பார்ட்டகஸின் நினைவு வழுக்கலின்றிப் பெருமையுடன் அதைப் பேசியதையும், என்னைச் ‘சக்தி நிறைந்த உணர்வுபூர்வ நடிகன்’ என்று மனசை மறைக்காமல் அவர்களிடம் கூறியதையும், என் உடலின் சக்தி குறைந்திருக்கிற இப்பொழுது நினைத்துப் பார்க்கையில், இதைவிடவும் ஒரு நடிகன் அடைகிற மிகப்பெரும் கொள்வினை வேறு எதுவாய் இருந்துவிட முடியும்? என்று தோன்றுகிறது.

1980 செப்டம்பரில் சென்னை வீதிநாடக இயக்கம் முன்முயற்சி எடுத்து நடத்திய 10 நாட்கள் நாடகப் பட்டறையில், நான் அவரின் ‘10 நாள்’ மாணவன். மாணவன் படைப்பை ஆசிரியர் புகழ்வதென்றால்? அன்றுதான் (10-02-1992) தேசிய நாடகப் பள்ளியின் தமிழ்நாட்டு முதல் மாணவர் கோபாலியும் என்னைத் தேடி வந்து என்னை வாழ்த்தியபடியே எனக்கு அறிமுக மாகிறார். அப்பொழுதுதான் தெரிகிறது, 1977 இல் காந்திகிராமத்தில் பேரா. இராமானுஜம் மற்றும் கலைஞர் சீநிவாசன் ஆகியோர் முன்முயற்சி எடுத்து நடத்திய 7 நாட்கள் நாடகப் பட்டறையில் எனக்கு வகுப்பெடுத்த கோபாலிக்கும் நான் ஒருவகையில் மாணவன்தான் என்பது! நடந்துபோகும் தூரத்திலிருந்த அவருடைய வீட்டிற்கு, ஸ்பார்ட்டகஸ் நாடகம்பற்றிப் பேசியபடியே போகிறோம். இணைந்து நாடகம் செய்வோம் என்கிறார். இதுவரையும் அது சாத்தியப் படவே இல்லை என்பது எனக்கு வருத்தம்தான்! ஆயினும் ‘இந்த நாடகத்தை எழுதியதால் எனக்குக் கிடைத்த மனத்திருப்தி மூன்று மூலநாடகங்கள் எழுதி யிருந்தாலும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே’ என்று கூறிய பாதல் சர்க்காரின், நாடக வகுப்பெடுப்பதில் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக நான் கருதுகிற கோபாலியின், இன்னும் நினைவில் சறுக்கிச் சென்று விடுகிற, முகம் பதியாத எண்ணற்றோரின் ஸ்பரிசங்கள் இன்னமும் எனக்குள் பசுமையாய்த் தங்கியுள்ளன. இதற்கான சாத்தியங்களை எனக்குத் தந்தது ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம்.

என்னையே நான் ‘ஸ்பார்ட்டக’ஸாகப் (அடிமையாகப்) பார்த்துக்கொண்டதும் இந்த நாடக நிகழ்த்தல்களின் காலகட்டத்தில் எனக்குள் உள்முகமாய் நிகழ்ந்திருந்தது. நாடகக்காரன் என்று மட்டுமில்லாது, எதற்கும் அஞ்சாத சமூக ஊழியன் என்கிற பெருமிதம் முகமெங்கும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது என்னிடம்! நாடகம் மனரீதியில் அப்படியரு மாற்றத்தை எனக்குள் கொண்டு வந்திருந்தது. நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எல்லா அடிமைகளுக்குள்ளும் (நடிகர்களுள்ளும்) இதே உணர்ச்சி உள்முகமாய் ஓடிக்கொண்டிருந்ததை அவர் களின் புறச் செயல்கள் உணர்த்திக் கொண்டேயிருந்தன. நாடகம் அந்த உணர்ச்சியைக் கொடுத்திருந்தது. ‘அடிமைகளே இந்த நாடகத்தின் நாயகர்கள், ‘ஸ்பார்ட்டகஸ்’ அல்ல. மூல நாவலிலும் இப்படித்தான் இருந்ததாக நான் எண்ணுகிறேன்’ என்று பாதல் சர்க்கார் கூறியிருந்ததன் உண்மையை என்னால் அப்பொழுது உணர முடிந்தது.

pathal_sarkar_ramasamy

18-08-1991 அன்று பூதப்பாண்டியில் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம். அது, பொதுவுடைமைப் பூங்கா ஜீவாவின் ஊர்! பசுமையால் பக்குவம் செய்யப்பட்ட இயற்கையின் வனப்பிற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் அழகிய சிற்றூர் அது! ஊரைச் சுற்றியும் வளைய மிட்டிருக்கும் அழகிய மலை, தாடகை என்கிற அரக்கியின் தோற்றத்தில் அமைந்திருப்பதால் அது தாடகை மலை! ஒவ்வொருவரின் கற்பனைக்கேற்பவும் அது இன்னொன்றாகவும் இன்னொன்றாகவும் வெவ்வேறு படிமமாய் விரியக்கூடிய வீரியம் கொண்டிருந்தது. யாரோ ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் கற்பனையில் உருக்கொண்டிருந்த ஒருபடிமம் தாடகையை நினைவு படுத்த, அது தாடகை மலை என்றாகிப் போயிருக்க வேண்டும். ஊரின் மேற்கிலும் கிழக்கிலும் அவ்வூரின் பெருமை சொல்லித் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தன, பழையாறும் புத்தனாறும்! புத்தனாறில் குளிக்கச் சென்றோம். ஆற்றின் ஓட்டத்தில், புதியவர்களான எங்களைப் பார்த்த பேருவகை ஒன்று கூடுதலாகத் தெரிந்தது. அல்லது ஆற்றின் புத்துணர்ச்சி எங்கள் முகங்களில் பேருவகையை ஏற்றியிருக்கக்கூடும். எனக்கு நீச்சல் தெரியாது. சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. புதியவர்கள் என்பதால் எங்களை ஊரும் ஆச்சரியம் கொட்டிப் பார்த்திருந்தது. ஆயினும் அடிமை ஸ்பார்ட்டகஸ் உள்ளளியாய் எங்களுக்குள் நிரம்பியிருக்கையில், கரையில் நின்றுகொண்டு ஆழத்தைப் பற்றியும் வேகத்தைப் பற்றியும் யோசித்துக்கொண்டு, வேடிக்கை பார்த்திருக்க யாராலும் முடியவில்லை.

நாடக உரையாடல்களை நண்பர்கள் சத்தப்படுத்திக் கொண்டு ஊர்க்காரர்களுக்குத் தாங்கள் நாடகக்காரர்கள் என்பதையும், ஸ்பார்ட்டகஸ் செய்ய வந்திருந்த பெருமிதத்தையும் ஒருசேர விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஸ்பார்ட்டகஸ் உரை யாடலை ஒருவர் சொன்னார்: ‘வீதி வீதியாய்க் கிராமம் கிராமமாய்ப் போகிற இடமெல்லாம், அடிமைகளை விடுதலை பண்ணுவோம். கூடச் சேர்த்துக்குவோம். படை வந்தா யுத்தம் பண்ணுவோம்’. இன்னொருவர், ‘ஆயுதம்?’ என்கிறார். மற்றொருவர், ‘பிடுங்கிச் சேர்ப்போம். அப்புறம் தயார் பண்ணுவோம்’. என்று நீரில் குதிக்கிறார். அடுத்தவர், ‘அப்படீன்னா ரோம் நம்மோட யுத்தம் பண்ணுமே!’ என்று தண்ணீருக்குள் குதிக்கிறார். ‘அப்படீன்னா நாம் ரோமோட யுத்தம் பண்ணுவோம்’ என்கிறேன் நான், கால்களைத் தண்ணீரில் அலையவிட்டபடி! ‘என்ன ரோமோட யுத்தம் பண்ணுவோமா?’ என்கிறார் நீருக்குள்ளிருந்து ஒருவர். ‘ஆமாம்... ரோம் அழியலைன்னா நமக்கு எங்கேயும் இருக்க இடம் கிடையாது’ என்கிறேன் நான், கைகளால் கொஞ்சம் தண்ணீரை அலைந்தபடி! ‘ரோமை அழிக்க நம்மால முடியுமா, ஸ்பார்ட்டகஸ்?’ என்கிறார் தரையில் பல்துலக்கிக் கொண்டிருந்த ஒருவர். ‘முடிஞ்சு தான் ஆகணும்’ என்று நீருக்குள் குதிக்கிறேன், மிகுந்த தன்னம்பிக்கையுடன்!

ரோமின் பெரும்படையை எதிர்கொள்ள, கொஞ்சம் பின்வாங்கி, வெசுவியஸ் மலையின் செங்குத்துப் பள்ளத்தாக்கில் உயிரைப் பணயம் வைத்துக் குதித்து, ஒளிந்தபடியிருந்து, பிற்பாடு ‘அடிமைகள் செத்தொழிந்தார்கள்’ என்று திரும்பிய ரோமின் படையைப் பின்னிருந்து தாக்கிச் சின்னாபின்ன மாக்கிய ஸ்பார்ட்டகஸையும் அவன் தோழர்களையும் மனதில் நினைத்துக் கொள்கிறேன் அப்பொழுது! நண்பர்கள் எல்லோரும் ‘ஸ்பார்ட்டகஸ்’ என்று பெருங்குரலெடுத்துக் கத்துகின்றனர். நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளிக்கிறேன் மூச்சுத் திகட்டலுடன்! அதையும் பெருங்குரலெடுத்து வெளிக்காட்டிக் கொள்ளாமல்! நண்பர்கள் என்நிலையைப் புரிந்துகொண்டு ‘ஸ்பார்ட்டகஸ்’, ‘ஸ்பார்ட்டகஸ்’ என்கின்றனர். நான் திக்குமுக்காடத் தொடங்குகிறேன். நண்பர்கள் நெருங்கிவந்து கை கொடுக்கின்றனர். கைகளைப் பற்றியபடி மூச்சுமுட்டக் கரைக்குப் போகிறேன், ஏதோ விளையாடிக் கொண்டிருக் கிறார்கள் என்று ஊர்க்காரர்கள் நினைத்துக் கொள்ளும் படி, சமாளித்துக் கரையேறுகிறேன். பயத்தை மறக்க வைத்து, இந்தத் தெம்பைக் கொடுத்தது ஸ்பார்ட்டகஸ்.

நாடகம் தோழர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது எனக்குப் பெரிய செய்தியாயில்லை. அதைவிடவும் எங்களை ரசிக்க வைத்தது, காலையில் சிற்றுண்டிக் கடைக்காரர், இட்லியைக் கவனமாக எண்ணி எண்ணி வைத்தும் நுணுக்கி நுணுக்கிச் சாம்பாரையும் சட்னியையும் ஊற்றியதால் முணுமுணுத்திருந்த நாடக நண்பர்களுக்கு, நாடகம் முடியவும் இரவு உணவிற்குப் போகும்போது வாளி நிறையச் சாம்பார், சட்னியையும் இட்லி அண்டா வையும் எங்கள் முன்வைத்துவிட்டு வேண்டியதை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என்றதுதான்! அது, ஸ்பார்ட்டகஸ் நாடகம் அந்தக் கடைக்காரருக்குக் கொடுத்திருந்த திருப்தி, எங்களுக்குப் பரிமாறும் சாப்பாட்டில் வெளிப்பட்டதாயிருந்தது! இந்தப் பெருமித அனுபவத்தையும் தந்தது ‘ஸ்பார்ட்டகஸ்’. இதேபோல், வேடம் கட்டி நடித்த என்னுடைய பிற நாடகங்களான ‘துர்க்கிர அவலம்’, ‘சாபம்! விமோசனம்?’ போன்றவற்றைச் சின்ன வயசிலேயே கிண்டல் பண்ணிக் கொண்டிருந்த என் பையன் அபுவிற்கு என்மீது ஒரு மரியாதையைத் தெளிக்க வைத்ததும் ’ஸ்பார்ட்டகஸ்’ தான்!

‘ஸ்பார்ட்டக’ஸைப் பார்க்கத் தன் தோழிகளை எல்லாம் அழைத்து வந்து, அவர்களுடன் குழுமி, தரையில் முன்வரிசையிலிருந்து, எனக்குத் தன் பூரிப்பால் புதுத் தெம்பு தந்து கொண்டிருந்த என் செண்பகத்திற்கு நான் நாடகக்காரன், அதிலும் வீதி நாடகக்காரன் என்று அடையாளம் சொல்வதில் பெருமை உண்டு. ஆனால் அபுவிற்கு ஸ்பார்ட்டகஸ் தான் அந்த உணர்வைத் தந்திருக்க வேண்டும். நிஜநாடக இயக்கத்தின் 12 ஆம் ஆண்டு நாடகவிழாவில், எவ்வித வேடங்களையும் அணியாமல் தரையில் விழுந்தும் எழுந்தும் நடிக்க, மதுரை குப்தா அரங்கின் வெளியே வீதியில் 1990 மார்ச் 10 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட அந்நாடகம், 10 வயதுச் சிறுவனான அவனுக்குள் என்மேலான ஒரு மரியாதையைத் தந்திருந்ததை என்னால் உணரமுடிந்தது. நாடகம் என்கிற கணக்கில் வீதியில் புரண்டு எழுகிற ஒரு நடிகனுக்கு-ஒரு தகப்பனுக்கு இதைவிடப் பெரிதாக வேறென்ன வேண்டியிருக்கிறது? இந்த அனுபவம் கைகூடக் காரணமாயிருந்தது பாதலின் ‘ஸ்பார்ட்டகஸ்’. இது ‘ஸ்பார்ட்டக’ஸ§க்குக் கிடைத்த பெருவெற்றி!

இதற்கு எதிர்நிலையில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவம் தஞ்சையில் கிடைத்தது. திருச்சியில் நடைபெற்ற பாதல் சர்க்கார் நாடகவிழாவில், 1989 செப்டம்பர் 23 இல் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம் நிகழ்த்தப்பட்டு, அது பரவலாக எல்லோராலும் பேசப்பட்ட நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் இராம.சுந்தரம் முன்முயற்சி எடுத்து நடத்திய அறிவியல் கருத்தரங்கின் முதல் நாள் (07-10-1989) மாலையில், மழைக்காலம் என்பதால், மொழிப்புலத்தின் நடைபாதையில் உருண்டு, திரண்டு ‘ஸ்பார்ட்டக’ஸை நிகழ்த்தினோம். மறுநாள், அன்றைய துணைவேந்தர் முனைவர் ச.அகத்தியலிங்கனார் என்னை அழைத்திருந்தார். முந்தைய நாள் நாடகத்தைப்பற்றிய விமர்சனம் என்பதை விடவும் அவரின்கீழ்ப் பணியாற்றும் கல்விசார் ஊழியர் ஒருவரின் நடிப்புச் செயல்பாடுகளைப் பற்றிய ஆதங்க மாயிருந்தது. ’என்னப்பா அது நாடகம்...எனக்குக் கொஞ்சமும் புடிக்கல. கொஞ்ச நேரத்லயே எந்திரிச்சி வந்திட்டேன். அதென்ன... ஒம்மேல ஒருத்தன் ஏறி உக்காந்திருக்கான்... நல்லாவா இருக்கு... நீ இங்க இப்ப இணைப்பேராசிரியர்... கொஞ்ச நாள்ல பேராசிரியராவே... வயசு என்னா? (சொல்லுகிறேன்) இன்னும் மேல வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கு... கீழ, தரையிலக் குட்டிக்கரணம் போடறதும் ஒம்மேல ஒருத்தன் ஏறி உக்கார்றதும்... நல்லாயில்ல..’.

நான் சொன்னேன்:- ‘அது நாடகந்தாங்க... நெஜமாவா என்மேல ஏறி உட்கார்றாங்க... எம்மேல அவுங்கள ஏற விடும்போதுதான் அவுங்களுக்கு நாடகத்துமேல பெரிய நம்பிக்க வரும். அவுங்கமேல நான் ஏறும்போதும் அத அவுங்க மனசு ஒத்துக்கும்... நடிக்றவுங்கள்லாம் சமம்ங்ற எண்ணம் வரும்’. அவர் தொடர்ந்தார்:-’இல்லப்பா... வேண்டாம்... எனக்கு அது புடிக்கல... நீயும் யார் மேலயும் ஏற வேண்டாம்... ஒம்மேலயும் யாரும் ஏற வேண்டாம்’. இது எனக்கு இன்னுமொரு வித்தியாசமான அனுபவம். நாடகத் தையும் யதார்த்தத்தையும் பிரித்துப் பார்க்க முடியா திருந்ததற்கு, அவருக்கு நாடகத்தை விடவும் என் மீதிருந்த பிரியம் காரணமாயிருந்திருக்கலாம். அல்லது ‘மூன்றாம் அரங்கு’ அவரைத் தொல்லை செய்திருக்கலாம். ‘ஒங்க பேராசிரியர் என்ன சொன்னாரு?’ என்றார். அவர் பேராசிரியர் என்று சொன்னது, மதுரை காமராசர் பல்கலையில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து, ஓய்விற்குப் பிறகு, தமிழ்ப் பல்கலையில் பெருஞ்சொல் அகராதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் பேராசிரியர் முத்துச் சண்முகனாரை! ’அவரு நல்லாருக்குன்னு சொன்னாரு’ என்றேன். ‘அவரு ஓங்கூடச் சேந்தவரு... வேறென்ன சொல்வாரு. இனும இதுமாதிரியெல்லாம் வேண்டாம்’ என்றார். நான் மனசுக்குள் சிரித்துக் கொண்டே வெளியே வந்தேன். நான் யார்? நான் யாராயிருக்க வேண்டும்? தீர்மானமானது மனது...நான் கூத்தாடுகிற பேராசிரியர் அல்லது பேராசிரியராயிருக்கக் கூடிய கூத்தாடி!

தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பல்கலைக்கழக மானியக்குழுவினர் 17-02-1997 அன்று மாலை நாடகத்துறைக்கு வருகை தருகின்றனர். அவர் களை வரவேற்றுவிட்டு அவர்களுக்காக ’ஸ்பார்ட்டகஸ்’ நிகழ்த்துகிறேன். போட்டிருந்த சட்டையைக் கழற்றி விட்டு வெறும் கால்சராயுடன்.... அடிமையாக ஆடு களத்திற்குள் இழுத்து வீசப்படுகிறேன். எந்த சோடனை களுமின்றி, அடிமைகளின் அவதி, அடிமைகளின் எழுச்சி என்று ஆடல்வல்லான் அரங்கிற்கு முன்னுள்ள திறந்த வெளி அப்படியே ரோம் சாம்ராஜ்யமாக மாறுகிறது. நாடகம் முடியவும், சட்டையைப் போட்டுக் கொண்டு, எதிரிலுள்ள நாடகத்துறைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறேன். அவர்கள் அத்தனை பேருக்கும் அப்படி யரு ஆச்சரியம்! இதுவரையும் வெற்றுடம்புடன் குதித்து எழுந்து மல்லாடிய இவர்தான் பேராசிரியரா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நாடகக்காரனை ஆய்வுத் தளத்திலும் நிகழ் தளத்திலும் ஒருசேரப் பார்த்ததன் அதிர்ச்சியிலிருந்து விலக அவர்களுக்குக் கொஞ்சம் நேரமானது. பாராட்டு மழையில் குளிப்பாட்டினர். உடனடியாக, நாடகத் துறையை ‘நிகழ்த்துகலை மைய’மாக மாற்றுவதற்கான பரிந்துரையையும் இரண்டு விரிவுரையாளர்களைப் போடுவதற்கான பரிந்துரையையும் கட்டடத்திற்கான பரிந்துரையையும் செய்திருந்தனர். ஆனால் இவை எதுவும் இங்குள்ளவர்களால் நடக்காமல் போனதென்பது தனிக்கதை. ஆனால் பல்கலைக்கழக மானியக் குழுவினரை, எந்த நிர்ப்பந்தமும் வேண்டுதலும் இன்றி, அவர்களாகவே முன்வந்து பரிந்துரைகளைச் செய்யக் காரணமாயமைந்தது பாதல் சர்க்காரின் ‘ஸ்பார்ட்டகஸ்’. அவர்கள் கூத்தாடியாயிருக்கிற பேராசிரியரை ஒத்துக் கொண்டிருந்தனர்.

1990 ஏப்ரலில் புரிசை நாடக விழாவில் பாதல் சர்க்காரின் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம் கொடுத்த அனுபவம் இன்னமும் வித்தியாசமானது. நாடகத்தில் ‘தொடுதல்’ பற்றிய என் சிந்தனையை அனுபவரீதியில் பட்டை தீட்டிக்கொள்ள எனக்கொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அது. அதைத் ‘தமிழ் நாடகம்-நேற்று இன்று நாளை’ நூலிலும் பதிவு செய்துள்ளேன். அது இப்படிப் போகிறது:- ‘திறந்தவெளியில் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, நிஜநாடக இயக்கத்தவர் நாடகத்தை நடுவில், மண்ணில் நிகழ்த்துகின்றனர். அடிமை கிளாடியேட்டர்கள் வெற்றுடம்புடன் வெற்றுத் தரையில் தங்களுக்குள் மோதுகின்றனர். மண் தரையில் புரண்டு எழுகின்றனர். கழுவிவிட்ட தரையைப்போல் உடம்பெல்லாம் வியர்வை. வியர்வையைத் திரையிட்டு மண் துகள்கள் உடலெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அந்நாடகத்தில் நானும் ஓர் அடிமை கிளாடியேட்டர். உடலெங்கும் மண். மண் தரையில் கரணமிட்டுப் பார்வையாளருக்குள் சென்று பம்முகிறேன். தரையில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்த, எனக்கு எந்த வகையிலும் அறிமுகமற்ற, என் அருகிலிருந்த கிராமத்துப் பார்வையாளர் ஒருவர் என் முதுகிலிருந்த மண்ணைத் துடைக்கிறார்.

மனதிற்குள் ஆச்சரிய அனுபவம். பரவசம்! பரவசம் ஏற்படுத்திய சிலிர்ப்பு முக்கியமானது. உன் மகிழ்விற்காக, உன் சிந்தனைத் தீட்டலுக்காக எந்தகைய மண்ணிலும் விழுந்து புரண்டு நாடகம் செய்வேன் என்னும் சங்கற்பம் மனதிற்குள் ஒளியிடுகிறது. அந்தப் பார்வையாளனுக்கும், நமக்காகக் கலைவடிவில் காரியமாற்றும் இந்நிகழ்த்துநன் - இவர்கள் - நம்பிக்கைக் குரியவர்கள்; நாம் பற்றுவைக்கத் தக்கவர்கள் என்னும் உணர்ச்சிக் கீற்று அவர் உள்ளத்துள் எழும். இந்தப் பரிவர்த்தனை - விரல்களின் மௌனமொழி - மிக முக்கியமானது. தொடுதல் என்பது உயர்ந்தவன்/ தாழ்ந்தவன், பெரியவன்/ சிறியவன், ஆண்/ பெண், நகரத்தவன்/ கிராமத்தவன், மூளை உழைப்பாளி/ உடல் உழைப்பாளி என்னும் பேதங்களை மாற்றி மனநிலைச் சமன்பாட்டை அக்கணத்தில் உருவாக்கி விடுகிறது. நிகழ்த்துநர் பார்வையாளரை நாடகீயமாகத் தொடு கையில், பார்வையாளர் நிகழ்த்துநரை யதார்த்தமாய்த் தொடத்தூண்டும் சந்தர்ப்பங்களை அதுவே உருவாக்கும்; உருவாக்கும் சந்தர்ப்பங்களை உண்டுபண்ணித் தரும். தொடர்ந்து பல்வேறு வாழ்வியல் நிலைகளில் பொருத்திப் பார்க்கையில் இந்தத் தொடுதலின் மந்திர சாகசம் மெல்லமெல்ல விடுபடத் தொடங்கியது. ஒருவருக்கு ஒருவர் துணை; தோழமை உணர்வு; இணைந்த முயற்சி; சமத்துவம்; சமூகமயமாக்கல் - இவை அத்தனையும் தொடுதல் உணர்வின் அதிர்வு அலை உருவாக்கும் சங்கேதங்கள்.

வருணாசிரம, சாதிய, மதவாதக் குளறுபடிகளால் மன அளவில் பிளவுண்டிருக்கும் இன்றைய சமூகத்தை, ’நாளைய நாடகம் தன் அளவில் சமனப்படுத்த இத்தொடுதல் உதவும்.... பருண்மையாகத் தொடுதல் என்னும் உணர்வை எந்தக் கலைவடிவமும் தரமுடியாத நிலையில் நாடகம் பருண்மையாகத் தொடுதலைத் தரும்..... நாடகப் பயிற்சியில் முதலில் பயிலுநர்களை ஈடுபடுத்தும் ‘சக்திப் பரிமாற்றம்’ பயிற்சியானது, தொடுதலின் அத்தனை சாரங்களையும் உள்ளடக்கியது’. இதை அனுபவரீதியில் உணர்ந்து, ‘நாளைய நாடகம்’ இந்தத் தொடுதலைத்தான் தன் உள்ளுணர்வாய்க் கொண்டிருக்க வேண்டும் என்னும் சங்கற்பத்தை எனக்குள் ஏற்படுத்த, ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம் உதவியிருக்கிறது. அதன்பின் நிகழ்ந்த, எங்களின் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடக நிகழ்த்தல்களில் ‘தொடுதல்’ முக்கிய இடம்பெறும்படி நாடக நிகழ்த்தல் அமைப்புகளில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது. 03-09-1993 அன்று ஆசிரியர்-பணியாளர் கூட்டமைப்பினர் நடத்திய ‘சிறைநாள்’ முதலாமாண்டு நினைவில் ‘ஸ்பார்ட்டகஸ்’ நிகழ்த்தப்பட்டது. தொழிற்சங்கக் கொண்டாட்டத்தில் அந்த நாடகம் கொடுத்த புதுப்பொருள் - புது சக்தி இன்னமும் அங்குள்ளோரால் பேசுபொருளாயிருக்கிறது. 1990 இல் புரிசையில் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகம் எனக்குள் கொண்டு சேர்த்திருந்த ‘தொடுதல்’ என்னும் புது அனுபவம் நாடகத்தின் நிகழ்திறனையே மாற்றியிருந்தது. ’தொடுதல்’ பல்வேறு தளங்களில் செயல்பட்டு நாடகத்தின் முகத்தையே இன்னொன்றாக மாற்றியிருந்தது.

இப்போதைக்கு இது போதுமானது. ‘ஸ்பார்ட்டக’ஸின் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு புதுப் புது அனுபவத்தை அள்ளித் தெளித்தபடியே உள்ளது. நாடகம் இயல்பிலேயே அதைச் செய்யக்கூடியதுதான்! நாடகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் புதிதாவதுபோல், அந்நிகழ்வுகளை நினைக்க நினைக்க நாமும் புதிதாகிக் கொண்டேயிருக்கிறோம். வாழும் வரையும் அந்த அனுபவங்கள் புதிய கதை களைப் பேசிக்கொண்டேயிருக்கும். புதிய சக்தியைத் தந்துகொண்டிருக்கும். அந்த சக்திக்குள் எங்கும் ஸ்பார்ட்டகஸைப் போலவே பாதல் சர்க்காரும் நிறைந்திருப்பார்.

Pin It