எங்களின் உழைப்பைத் திருடிய முதலாளியே!
எங்களை அடிமையாக்கிய அரசியல்வாதியே!
நான் சொல்கிறேன்...
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக்கூடத்துக்கு!

வன்கொடுமைகளுக்கு...
ஆளாகி விட்ட தலித்துகள் நாங்கள்
பஞ்சம் வந்து எங்களின் வாசலைத் தட்டலாம்
அவன் படிப்பதை-
நான் பார்த்தே ஆக வேண்டும்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!

உனது கிழிந்த ஆடைகளுக்கு
ஒட்டுப் போட்டு கொடுப்பேனென உறுதியளிக்கிறேன்
என் ஆடைகளுக்கு
என்னிடமுள்ள ஊசியே கருவியாகும்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!

என் ஆடைகள் கிழிந்து போகட்டும்
நான் கவலையும் துன்பமும் படமாட்டேன்
ஆனால்-
ஆடையின்றி என் பிள்ளை நடமாடக் கூடாது
நகை ஆபரணங்களால் எனக்கென்ன பயன்?
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!

இந்தச் சமூகத்திடம்
எதையோ அவன் பெற்றிருக்கிறான்
இந்த மக்களிடம் இந்த மண்ணிடம் பெற்று விட்டதைத் திருப்பித் தருவதற்கு
அவன் படித்தே ஆக வேண்டும்
அவன் வழக்குரைஞர் ஆகலாம்
யாருமே இங்கு மூடர்கள் அல்லர்
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு!

கவி வாமனின்
மோசமான கவிதை வகளைப் போல்
நீர்த்துப் போக மாட்டான் என் பிள்ளை
'என் பிள்ளைக்குக் கல்வி இல்லையென்றால்....?’
இது உங்கள் மீது ஆணை
அனுப்பி வையுங்கள் என் பிள்ளையைப் பள்ளிக் கூடத்துக்கு'
Pin It