இருப்பு
வற்றிய முலைகளைச்
சப்பியபடியே
அயர்ந்து தூங்கிவிட்டது
குழந்தை
பால் சுரக்காத மார்புகளோடு
ஒருக்களித்துப் படுத்திருப்பாள்
ஒருத்தி
தன் சதையைப் பிய்த்துத் தின்னும்
சண்டாளனுக்குப் பயந்து
காமத்தின் கொடிய
இரவுகளில்
எழுதப்படுகிறது
உயிர் வதைக்கும் ஒரு கவிதை
எவருக்கும் தெரியாதபடி
வீசும் காற்றின்
வெப்பப் பெருமூச்சில்
உருகிப்போய்
பாதியாய்த் தேய்ந்து கிடக்கிறது
பால் நிலவு
இருட்டின் வெளிச்சத்தில்
கண்ணயர முடியாத
புரண்டு படுக்கும்
பூமி பார்த்து
நட்சத்திரங்களும்
தூரப் போயின
பாழடைந்த
மனப் பிரகாரத்தின்
உள் வெளிகளில்
நினைவின் வெளவால்கள்
பறந்தபடியிருக்க
எங்கும் நிசப்தம்
எல்லாம்
அதனதன் இயல்பில்
அதன்படியே இருக்க
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
விடிகிறது பகல்
ஒவ்வொரு நாளும்
ஒரே சூரியனைச் சுமந்தபடி.
மூன்றாவது கண்
யாருடையதாய்
இருக்கும்
உடல் மொழிகளற்று
ஊமையாகிப் போன
அடுப்பங்கரை
அகலிகை
முற்றிய கதிரென
அறுவடை செய்ய ஆளின்றி
முற்றத்தில் தவம் கிடக்கும்
அனல் மூச்சின்
மெழுகுச் சிற்பம்
இரவின்
நெடு நேர யாமத்தில்
எவருக்கும் தெயாது
வந்துபோய்
மென்முலை அமுதம்
தந்து போகும்
நெருஞ்சிப் பூ
முன்பிருந்த காலத்தின்
உதிரம் நனைத்த துணிகளை
ஒளித்து வைத்து
அதே நினைவில்
அப்படியும் இப்படியுமாய்
நடந்து போன
ஒருத்தி
யாருடையதாய்
இருக்கும்
இதற்கும் முன்பு
இருந்திருந்த
வாடகை வீட்டின்
குளியல் அறை சுவல்
ஒட்டி வைத்திருக்கும்
இந்த
வட்ட நிலா.
மனித ஊத்தை நீ...
நீ...
உயர்ந்தவனென்று
சொல்லிக் கொள்கிறாய்.
வயது முதிர்ந்த
என் தாத்தாவை
டேய்... என்கிறாய்
நடை தளர்ந்து
நரை முதிர்ந்த
என் பாட்டியை
ஏட்டி... என்கிறாய்.
முதியோரை
மதிக்கும் பண்பில்
உயர்ந்தவனா நீ...?
என்
அப்பனில்லாத நேரத்தில்
என் அம்மாவிடம்
அளவு மீறுகிறாய்.
காமாந்திரக் கண்களால்
என் சகோதயின்
பருவமளக்கிறாய்.
பிறன்மனை விரும்பா
பேராண்மையில்
உயர்ந்தவனா நீ...?
கூலி...
கேட்டதற்காகக்
கோபப்படுகிறாய்...
ஏழ்மையைச் சொல்லி
இரங்கிப் பேசியதை
எதிர்த்துப் பேசுவதாய்
கன்னத்தில் அறைகிறாய்...
காலால் உதைக்கிறாய்.
ஏழைக்கு இரங்குவதில்
உயர்ந்தவனா நீ...?
அனாதரவானவர்களை
அறற்றி ஒடுக்குகிறாய்...
வெறுங்கையர்களை
வீச்சரிவாளால் மிரட்டுகிறாய்.
குடிசையைக் கொளுத்திக்
கொள்ளையடிப்பதில்
குறியாய் இருக்கிறாய்.
ஆயுதமிழந்தவனிடம்
போருக்கு நிற்கும் நீ
வீரத்தில் உயர்ந்தவனா...?
வீரப்படை நடத்தி
போரில் பகை முடித்து
கங்கை கொண்டு
கடாரம் வென்று
ஆண்ட பரம்பரையென
மீசை முறுக்குகிறாய்.
அரசியல் பிழைப்புக்கு
கையைப் பிடித்து
காலில் விழுந்து
மண்ணைக் கவ்வும் நீ
மானத்தில் உயர்ந்தவனா...?
ஏனென்று கேட்டு
எடுத்துரைக்கும் என்மேல்
கோபப்படுகிறாய்...
குமுறிச் சிவக்கிறாய்...
சாதி சொல்லித் திட்டி
சண்டைக்கு நிற்கிறாய்.
உயர்வு தாழ்வு பேசி
ஒதுங்கிப் பழிக்கும் நீ
பகுத்தறிவில் உயர்ந்தவனா...?
உன் தோள்மீதிருப்பவனின்
சூதறியாமல்
என் தோளில்
பாதம் பதிக்கிறாய்...
மனிதருணர்வை
மதிக்கத் தெரியாத நீ
மனிதல் உயர்ந்தவனா...?
வெட்கம்... வெட்கம்...
மனித ஊத்தையே
மருகச் சிந்தி.
போரிடு பெண்ணே!
பெண்ணே...
நீ பெண்ணாயிரு.
முடியோ...
புடவையோ...
பூவோ...
பொட்டோ...
இளக்காரமல்ல
என்பதுணர்.
கூந்தலைக் குறைப்பதும்
சேலையைத் தவிர்ப்பதுமே
மீறல் என்றெண்ணாதே.
அடங்க மறுப்பதும்
ஆளுகை புரிவதும்
உடைமை பெறுவதும்
உளமை துறப்பதும்
மீறலென்றெண்ணு.
சமைப்பதும்
துவைப்பதும்
பெறுவதும்
உற்றார்க்கேயல்லாமல்
உற்பத்தியோடு இணை.
சகலமும் சமமென்று
சண்டைக்கு நில்...
அதிகாரம் பறிக்க
ஆர்த்தெழு... பெண்ணே...
ஆணுக்கு நிகரென்று போடு.