களைவெட்டு
காலம் வந்தால்
களை கட்டும் காடு.
களக்கட்டு தோளில் தொங்க
வேவிச்ச மொச்சையோ
ஊறப்போட்ட புளியங்கொட்டைகள்
மடியில் தொங்க
கேலிகள் கொறித்தபடி
அவர்கள் வருவதே கவிதை.
முதுகில் தாங்கிய மூங்கிலால்
மெனை பிரித்துப்போகும் நான்
கொஞ்சம் தள்ளாடினாலும்
அண்டராயரைக் கொஞ்சம்
இறுக்கித்தான் தக்கிறது .....
என்கும் முறைமைகள்.
எவனுக்கெல்லாம்
தொடுப்பு உண்டு
எவளுக்கெல்லாம்
சேர்மானம் உண்டு
கலைத்தது - பிரித்தது...
சுளை சுளையாய் அவிழ்ப்பாள்
நைனம்மா கிழவி.
சொசேட்டுல சீமெண்ணெ
எப்ப ஊத்துறான்னு தெரியில
வெளிமாடத்துல வச்சிட்டு வந்தேன்
(படுக்கையில் கிடப்பதற்கு)
பூனை உருட்டுச்சோ என்னமோ
நாளைக்கு ஊர்லருந்து
விருந்து வருது
என்பவைகளுக்கிடையில்
ஒக்கரைத்தெரியுதா பாரு என
வம்புக்கிழுக்க
எவடி அவ, வேலக்காரனுது
வெளியகெடந்தா என்ன
உள்ள கெடந்தா என்ன ....ம்பா
வரப்பிலிருந்து.
குந்துனா ஒரு கதை
குசுவுட்டா ஒரு கதையென
கதையும் வெடியுமாய்
சிரித்துச் சீமாண்டுபோகும் காடு.
நிலப்பரனை கிழங்கு மென்று
சுக்காம்பழம் தின்று
பசலைக்கீழை மடியிழுக்க
வேலை கலையும் நேரத்தை
பொழுது சொல்லும்.
ஒதுக்க வேண்டியதை ஒதுக்கவேணும்
தப்புப்புல் கூடாது
சிலதை ஓங்கிப் போடவேண்டும்
சிலதை வேர்வரை வெட்ட வேண்டும்.
எந்த வயலானாலும்
களையெடுப்பது அவசியமானது
தவிர்க்க முடியாதது
கீழத்தெரு சித்தம்பலம் மட்டும்
நக்கலிப்புக்கு உள்ளாகிறான்
எப்போதும்
பொட்டாச்சி செய்யிற
வேலக்காரப் போறமென்
கீற்றில் தேட...
கதைசொல்லி - ஆகஸ்ட் 2006
களை
- விவரங்கள்
- கார்முகில்
- பிரிவு: கதைசொல்லி - ஆகஸ்ட் 2006