“மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களைப் பலப்படுத்தவும், அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்டவும் கலை என்கிற கருவியால் மட்டுமே முடியும்’’ என்பார் மாவோ. “என்னைக் கலைஞன் என்று குறிப்பிட வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நான் நடிகன் மட்டுமே’’ என்ற முன்னுரையோடு பதிலளிக்கத் தொடங்கினார் நடிகர் நாசர். ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில்...

75 வருட தமிழ் சினிமா இதுவரை என்ன சாதித்திருக்கிறது?

Automobile, Textile போன்ற எல்லா துறைகளைப் போலவே தமிழ் சினிமாவும் முன்னேறிப் போய்க்கொண்டுதான் இருக்கிறது.

இவ்வளவு வருட அனுபவமிக்க தமிழ் சினிமா ஏன் இன்னமும் உலக சினிமாக்களோடு போட்டி போட முடியாமல் ஒதுங்கியே நிற்கிறது?

காரணம் என்னன்னா, தமிழ் சினிமா முழுக்க முழுக்க வியாபாரிகள் கையிலதான் இருக்கு. அப்புறம் கதாநாயகர்களை மையப்படுத்தி மட்டுமே இந்தத் துறை நகர்ந்துட்டு இருக்கு. இங்க யாரும் கதை, கருத்து பற்றி யோசிக்கிறதல்ல. கோட்பாட்டு ரீதியா இது கலை, ஊடகம்னு சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா ஊடகமாகவும் இருந்ததல்ல, கலையாகவும் இல்ல.

மற்ற மொழி சினிமாக்களில் இல்லாத அளவுக்கு தனிமனித வழிபாடு இங்கு அதிகமா இருக்கே, ஏன்?

தமிழ் சினிமாவிலே வியாபாரிகள் ஒரு மனுஷனை பிரபலப்படுத்தி அவன் முதுகுல சவாரி செய்வதன் விளைவுதான் இது.
உலகம் முழுக்க இந்தப் பிரச்னை இருந்தாலும் இங்க கொஞ்சம் அதிகம்தான். இந்தித் திரைப்படத்துறைகூட இந்த விஷயத்துல இப்ப நிறைய மாறியிருக்கு.

இந்த விஷயம் இருக்கக்கூடாதுன்னுதான் நான் நெனக்கிறேன். தனி மனித வழிபாட்டை எப்படி மக்களுக்கு திருப்பி நல்ல வழில குடுக்குறதுங்கிறது அவங்க கையிலதான் இருக்கு. இது அந்த தனி நபர் மனப்பான்மையைப் பொறுத்து மாறிக்கிட்டேதான் இருக்கு. இது மாறணும். உதாரணத்துக்கு இந்தில ஷாருக்கானின் ‘ச்சக்தே இந்தியா’வ சொல்லலாம். ஹீரோயிசம் இல்லாம முயற்சி பண்ணியிருக்காங்க. நல்ல விசயம். பாராட்டலாம்.

நம்மைவிட பல விஷயங்கள்ல பின்தங்கியிருந்த மேற்கு வங்கத்துல ஒரு சத்யஜித்ரே உருவாகியிருக்கும்போது இங்க முடியலயே ஏன்?

நாம, இங்க இப்பவரை வெகுஜன சினிமாவை தான் வளர்த்துகிட்டு வந்திருக்கோம். ஆனா, கேரளால அடூர் கோபாலகிருஷ்ணன் மாற்று சினிமாப் பாதையிலே இன்னமும் பயணிச்சுட்டுத்தான் இருக்கார். இந்தியைப் பொறுத்தவரைக்கும் ஷ்யாம் பெனகல், மிருணாள் சென் இவங்க மாற்று சினிமாவுக்கு நிறைய முயற்சிப் பண்ணாங்க. ஆனா தமிழில் மட்டும்தான் அரசும் சரி, மற்ற எல்லா அமைப்புகளும் சரி, வெகுஜன சினிமாவத்தான் ஆதரிச்சுட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட சினிமாவத்தான் பார்க்குற மாதிரி மக்களை நிர்ப்பந்திக்கிறாங்க. மற்ற மொழிகள்ல மாற்று சினிமாங்கிறது இலக்கியத்தோட பயணிக்கிற விஷயம். உதாரணத்துக்கு சத்யஜித்ரே திரைப்பட இயக்குநர் மட்டுமில்லே, நல்ல இலக்கியவாதியும் கூட. ஆனா, இங்க அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சிக்காக, தொலைநோக்குப் பார்வையோடு உருப்படியாக எதுவும் செய்ததாக தெரியலையே?

இது ஒரு துரதிஷ்டமான விசயந்தான். ஆனா இங்க சாதிச்சவங்க எல்லாம் அந்த வெற்றியும் சாதனையும் மேல இருந்து வந்த மாதிரியும், தன்னோட ஜாதகத்துல இருக்குறதாகவும்தான் பார்க்குறாங்க. குறைந்தபட்சம் அவங்க உழைப்பையாவது எழுத்தில் பதிவு பண்ணி யிருக்கலாம். சித்தாந்தரீதியா சொல்லணும்னா ‘கலையை பயிற்றுவிக்கும் முறை’ என்கிற சிந்தனை இந்த நூற்றாண்டிலேதான் வந்தது. ரெண்டாவது, தமிழ்ச் சினிமாவ இங்க யாரும் கலையாய் பார்க்கிறதில்லே. அதுதான் பிரச்னை. வரும் காலங்கள்ல அவங்க உழைப்பையும் திறமையையும் பதிவு பண்ண வேண்டியது அவசிய குது. அப்படி நடக்கும் என்று நம்புகிறேன்.

எல்லா காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் நிலவுகிற ஆணாதிக்க மனோபாவம் பற்றி உங்க கருத்து .?

இது வருந்தத்தக்க விஷயம்தான். ஏன்னா, ஆணாதிக்கவாதிகளின் கைகளில்தான் தமிழ் சினிமா இருக்கு. இந்த நிலைமை கண்டிப்பா மாறணும். இதுக்கு, ஆணாதிக்க மனோபாவம் நம்ம எல்லார்கிட்டேயிருந்தும் மாறணும். மகேந்திரன், பாலுமகேந்திரா காலத்துல பெண்களைப் போராளியாகக் காட்டாவிட்டாலும் அவங்களை மையப்படுத்தி எடுத்தாங்க. ஆனா, இப்பதான் பெண்கள் நிலைமை மோசமா ஆயிடுச்சு.
இன்னிக்கு நடிகர்கள் சிலர் கட்சி ஆரம்பிச்சு பெண்களுக்கு அரசியல்ல 33 சதவீதம் இடஒதுக்கீடு கேட்குறாங்க. அவங்க இருக்கிற சினிமா துறையில அத செஞ்சாங்களா? எனக்கு செஞ்ச மாதிற தெரியலை.

தமிழ் சினிமாவுல வன்முறைக் காட்சிகள் இப்போ கொஞ்ச நாளா அதிகமான மாதிரி தெரியுதே?

இது கொஞ்சம் சீரியசான விஷயம்தான். ஆனா, சினிமாவுல வன்முறைக் காட்சிகள் காட்டுறதால நடைமுறை வாழ்க்கையிலே வன்முறை அதிகமாகுதுன்னு என்னால ஏத்துக்க முடியாது. வன்முறைக் காட்சிகள் சினிமாவிலே ரொம்ப யதார்த்தமா எடுக்கிறதால, உண்மையான வன்முறைகளைக் கூட மக்கள் சினிமா மாதிரியான உணர்ச்சியில் பாக்குற சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. எனக்கு வன்முறைக் காட்சிகள்ல உடன்பாடு இல்லை.

எவ்வளவோ விஷயங்களைப் பற்றி பேச வாய்ப்பு இருந்தும்கூட, தமிழ் சினிமா 90 சதவீதம் ‘காதல்’ என்கிற ஒரு விஷயத்தைப் பற்றியே நிறைய பேசியிருக்கே ஏன்?

நீங்க சொல்றது சரி. ஆனா, மக்களோட வாழ்வியலைப் பற்றி இங்க யாரும் சரியா கவனம் செலுத்தறதில்லே. இப்போ இந்த நிலைமை மாறிட்டு இருக்கு. உதாரணத்துக்கு இந்தில இப்போ ‘காதலை’ மையப்படுத்தாம நிறைய படங்கள் வந்துகிட்டு இருக்கு. வந்து வெற்றியும் பெறுது. அது மட்டுமில்லாம இங்க காதலையே கொச்சைப்படுத்துறாங்க. உதாரணத்துக்கு சமீபத்தில தமிழ்ல இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பொருட்செலவுல எடுக்கப்பட்ட படத்துல கூட, வெளிநாட்டுல இருந்து வந்த ஒரு சாஃப்ட்வேட் இன்ஜீனியருக்கு ஒரு பெண்ணுகிட்டே எப்படி காதலை சொல்றதுன்னுகூட தெரியாத அளவுக்கு தமிழ் சினிமா காதலைக் கேவலப்படுத்தியிருக்காங்க. இங்க காதல் பிரச்சினையில்லை. இங்க நிஜமான காதலை எப்படி சுவாரசியமாக் கொடுக்கிறது அப்படிங்கிறதுலதான் தவறிடுறோம். இந்த நிலைமையை மாத்தணும். ஆனா, யார் மாத்துவாங்கன்னு தெரியலை.

1990களுக்குப் பிறகு வந்த தமிழ் திரைப்படங்கள்ல, சாதி, மத ரீதியிலான திணிப்புகள் அதிகமிருப்பதாகச் சொல்லப்படுதே? உதாரணத்திற்கு தீவிரவாதிகளாக இஸ்லாமியப் பெயர்களையும், கதாபாத்திரங்களையும் உருவாக்குவது!

ஒரு விசயத்தைக் கவனிக்கணும். இங்க யாரும் சமூக சீர்திருத்தத்துக்காக படம் எடுக்கிறதில்லே. எது பரபரப்பா பேசப்படுதோ அது வியாபார மாகுது. இங்க யாரும் திட்டமிட்டு சாதி, மத விசயங்களை திணிப் தில்லை. ஆனாலும், இது பின்னாடி பெரிய விளைவுகளை ஏற்படுத்துதுங்கிறது உண்மை. அதை மறுக்க முடியாது.

அறிவியல், தொழில்நுட்பம், ஊடகம் எல்லாம் வளர்ந்த பின்பும் பிற்போக்குத்தனமான மதவெறியைத் தூண்டும் வகைச் சம்பவங்கள் அரங்கேறுவது குறித்து?

என்னைப் பொறுத்தவரைக்கும் மதமே இல்லைன்னாலும்கூட மனிதன் ஒரு நல்ல வாழ்க்கையை, அமைதியான வாழ்க்கையை வாழமுடியும். ஆனா, இன்னிக்கி காலகாட்டத்துல மதத்தை அரசியல் சக்தியா மாத்துறதுல எனக்கு உடன்பாடில்லை.

பெரியாரைப் பற்றி...?

அவர் உண்மையிலே ஒரு நல்ல சித்தாந்தவாதி. ஆனா, இப்ப அவர் சில அரசியல் கட்சிகளுக்குள் வரையறுக்கப்பட்டு அவர களுக்கு சொந்தக்காரரா சித்திரிக்கப்பட்டிருக்கார். அவரை சித்தாந்தவாதியா நான் பார்க்குறேன்.

காதல், பருத்திவீரன், கற்றது தமிழ் போன்ற படங்களில் சமூகம் சார்ந்த சித்திரிப்புகள் யதார்த்தமாக வந்திருக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து...?

யதார்த்தமான படங்கள்னு சொல்ற எல்லா படங்களுமே நல்ல படங்கள்னு சொல்லிட முடியாது. ஆனா, நீங்க குறிப்பிட்ட படங்களை நான் பார்க்காததனால அதைப்பத்தி என்னால சொல்ல முடியலை.

மக்களை கட்டிப்போடுகிற தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி?

நான் தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு நேரமுமில்லை, தொடர்களைப் பார்ப்பதுமில்லை. ஆனால், உலகம் முழுக்க ஊடகங்களை யார் கையாள்றாங்க அப்படிங்கிறது தான் முக்கியம். மற்ற பொருட்களுக்கு இருக்கிற தரக் கட்டுப்பாட்டு நிர்ணயம் அடிப்படிங்கிற விஷயம் படைப்பாளிகளுக்குப் பொருந்தாது. அதனால படைப்பாளிகள் கொஞ்சம் உணர்வுபூர்வமா தங்கள் படைப்பை வெளிக் கொணரணும்.

நீங்க நாடகத் துறையிலே இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்போ நாடகத்துறையின் நிலைமை சரியில்லையே?

இந்தச் சிதைவுங்கிறது நாடகக்கலைக்கு மட்டுமல்ல, நாட்டுப்புறக் கலை, தெருக்கூத்துன்னு எல்லா விஷயத்துலயும் இருக்கு. இதுல முக்கியமான விசயம். (சிரிப்புடன்) உலகம் முழுக்க ‘அரசு’ங்கிற எந்திரம்தான் பிரதானமா இருக்கு. அது சில அக்கறைகள் எடுத்துருக்கணும். ஆனா, தமிழ் நாட்டைப் பொறுத்த வரைக்கும் அரசியலும் சினிமாவும் ஒண்ணா கலந்துருக்கிறதனால மற்ற கலைகள் மீது அதிக கவனம் செலுத்த முடியாமப் போச்சு. ஆனா, திரைப்படங்களை துவக்கி வெச்ச ஐரோப்பிய நாடுகள்ல இன்னமும் நாடகத் துறை நல்ல நிலைமைலதான் இருக்கு. இரண்டு துறையச் சார்ந்தவங்களுக்கும் தன்னுடைய துறையப் பற்றியும், தன்னை வளர்த்த கலையைப் பற்றியும் ஒரு தெளிவான அக்கறை இருந்திருக்கணும், தவறிட்டாங்க. தவறிட்டோம்.

மாற்று சினிமா, மாற்று ஊடகம் என்கிற கனவு மெய்ப்படுமா?

மெய்ப்படாதுன்னு யார் சொன்னது? எதுவுமே முயற்சி செய்யக்கூடிய படைப்பாளிகளைப் பொறுத்தது.

எவ்விதமான நிர்பந்தமுமின்றி, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சமூகப் பொறுப்புடன் பதிலளித்து, தன்னுடைய மற்றொரு முகத்தை நிறைவு செய்தது இந்த திரைமுகம்.

சந்திப்பு : நெல்சன், ஜார்ஜ்

Pin It