மனிதர்களே!
மாடுகளைக் கொன்று
உங்கள்
வயிற்றில் புதைக்காதீர்கள்.
உங்களைவிட
பசுமாடு என்பது
பலமடங்கு உயர்ந்தது.
நீங்கள்
தொட்டால் தீட்டு
உங்களைத்
தொட்டாலும் தீட்டு
பசுவின் பீ நறுமணம்
அதன் மூத்திரம் மங்களம்.

மனிதர்களே
(தாழ்த்தப்பட்டவர்களே)
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
உதாரணம் போல்
இந்தியா முழுக்க
பரவலாக பல ஊர்களில்
உங்கள் உடைமைகளைக்
கொளுத்தியிருக்கிறோம்
உயிர்களைக் குடித்திருக்கிறோம்
உண்மையைச் சொல்லுங்கள்
உங்கள் மாடுகளை நாங்கள்
மாய்த்திருக்கிறோமா?

மனிதர்களே
(இஸ்லாமியர்களே)
பிரிவினையின்போதும் சரி
குஜராத்திலும் சரி
கர்ப்பிணியின் வயிறு கிழித்து
உங்கள் குழந்தையின்
உயிர் கிழித்தோம்
நெஞ்சில்
கை வைத்து சொல்லுங்கள்
உங்கள் கன்றுக்குட்டிகளை
நாங்கள் காயப்படுத்தினோமா?

மனிதர்களே
(பிற்படுத்தப்பட்டவர்களே)
மனிதர்களே
(பிற சாதிக்காரர்களே)
மனிதர்களைக் கொன்றாவது
மாடுகளைக் காப்பாற்றுங்கள்.

Pin It