“ஒரு சமுதாயம் நிம்மதியாய் உறங்குவதற்காக சிலராவது விழித்திருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை நியதி’’ இந்த இயற்கை நியதியை இலட்சியமாகக் கொண்டுதான் களம் இறங்கி இருக்கிறோம். சமீப காலமாக தமிழில் ஏராளமான இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் மக்களுக்கான இதழ்களின் எண்ணிக்கைதான் மிகக்குறைவாக உள்ளது.

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களையே அவர்களின் இடத்தைவிட்டு விரட்ட ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது ஓர் அரசு.

விமர்சிக்க வேண்டியவர்களெல்லாம் இங்கு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் விநோதம். தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களோ சாமரம் வீசி சமரசம் செய்துவைத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சமுதாயம் தடுமாறும்போது தாங்கிப் பிடிப்பதும், தடம் மாறும்போது சரியான வழியை நிர்ணயித்துக் கொடுப்பதும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையின் முதல் கடமை. இந்தக் கடமையைச் செய்யத் தவறியதால்தான், இங்கு செல்லரித்துப் போய் நிற்கிறது ஜனநாயகத்தின் எல்லா தூண்களும்.

இங்கு எந்த ஓர் ஊடகமும் தான் சார்ந்திருக்கிற களத்தைவிடவும், தான் சார்ந்திருக்கிற கட்சியையோ இயக்கத்தையோ அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இக்காலச் சூழலில், மக்களுக்கான விடுதலைக்கு மக்கள் அதிகம் சார்ந்திருக்கிற ஊடகத்தின் விடுதலைதான் உடனடி தேவை. அத்தகைய உடனடி தேவைக்கு உதவுங்கள்; உங்கள் சிந்தனைகளும் படைப்புகளும் இந்த விடுதலையை வழிநடத்த உதவட்டும்.

சமுதாய வளர்ச்சிக்கு, உங்கள் கையிலிருப்பது கொஞ்சம் புழுதியாகக்கூட இருக்கலாம்; ஆனால், அது ஆதிக்க சக்திகளின் கண்களில் சாகசம் செய்யும் வல்லமையுடையது.

நம்பிக்கையுடன்
ஆசிரியர்

Pin It