முப்பத்தைந்து ஆண்டு காலமாக தெலுங்கு மண்ணில் துலங்கி வந்த ‘விப்லவ ரசயிதல சங்கம்’ (புரட்சிகர எழுத்தாளர் சங்கம் - ‘வீராசம்’) அமைப்பை ஆந்திர அரசு தடை செய்துள்ளது. எழுத்தையும் எழுத்தாளர்களையும் தனது இருப்பிற்கு அச்சுறுத்தலாக நினைத்து அடக்கு முறைகளை அவிழ்த்துவிடுவது அரசுகளுக்குப் புதிதல்ல. எழுத்தாளர்களைக் கைது செய்தல், பொய் வழக்குப் போடுதல், மோதல் என்ற பெயரில் கொல்லுதல், எல்லாவற்றிற்கும் மேலாக தான் எழுதியதையே தன்னுடையதல்ல எனச் சொல்ல வைத்தல்... இப்படி எத்தனையோ கொடுமைகளை எழுத்தாளர்கள் சந்தித்து வந்துள்ளனர். முதல் முறையாக ஒரு எழுத்தாளர் அமைப்பையே சட்ட விரோதம் எனத் தடை செய்த பெருமையைச் சூடிக் கொண்டுள்ளது ஆந்திர மாநில காங்கிரஸ் அரசு.

சென்ற ஆகஸ்டு 17 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்கிற அமைப்பை (முன்னாள் மக்கள் யுத்தக் குழு) மீண்டும் தடை செய்தாக சுதந்திர அரசு அறிவித்தது. அத்துடன் புரட்சிகர மாணவர் சங்கம், புரட்சிகர இளைஞர் சங்கம் முதலான ஏழு முன்னை அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. இந்த முன்னணி அமைப்புகளில் ‘வீராசமும்’ (எழுத்தாளர் சங்கம்) அடக்கம். தனக்கென தனி கொள்கை அறிக்கையுடன் செயல்படும் ஒரு எழுத்தாளர் அமைப்பை ஒரு கட்சியின் முன்னணி அமைப்பாக ஆந்திர அரசு பிரகடனம் செய்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கொஞ்சகாலமாகவே பேச்சுவார்த்தைகள் முறிந்துபோய் மாவோயிஸ்டுகளுக்கும் அரசுக்குமான உறவு சீர் கெட்டு வந்தது. இருதரப்பிலும் கொலைகள் நடந்து வந்தன. சென்ற ஆகஸ்டு 15 அன்று சட்டமன்ற உறுப்பினர் நந்திரெட்டி, அவரது மகன் மற்றும் எட்டுப்பேரை மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தினர். இதை ஒட்டியே அரசு தடையை அறிவித்தது. ‘ஆந்திரஜோதி’ இதழில் ஆசிரியர் பக்கக் கட்டுரை ஒன்றில் இக்கொலைகளைக் கண்டித்து எழுதினார் ‘வீராசம்’ அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான வரவராவ். கட்சியின் கொள்கைகளையும், செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதே முன்னணி அமைப்புகளின் வேலை. ஆனால் இங்கே புரட்சிகர எழுத்தாளர் சங்கம் இவ்வாறு அப்பாவி மக்களும் சேர்ந்து கொல்லப்படுவதைக் கண்டித்து எழுதும் அளவிற்குச் சுயேச்சையுடன் செயல்பட்டுள்ளது. அப்படி எழுதிய வரவரராவையும் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற நாவலாசிரியருமான ஜி. கல்யாண ராவையும் அரசு கைது செய்து இன்று சிறையில் அடைத்துள்ளது. வரவராவ் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி விட்டு ‘பிரஸ் கிளப்’பிலிருந்து வெளியே வரும்போது கல்யாணரராவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபின்பு மாவோயிஸ்டுகளின் மீதான முந்தைய அரசின் தடையை நீக்கிப் பேச்சு வார்த்தை தொடங்கியதை அறிவோம். மாவோயிஸ்டுகளின் தூதுக்குழுவில் வரவராவும் கல்யாணராவும் இருந்ததை கைதுக்கான காரணமாய்ச் சுட்டுகிறது அரசாங்கம். உலக அளவில் இயக்க வரலாறுகளைப் பார்த்தால் இது போன்ற சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் முக்கிய இடைநிலையாளர்களாகப் பங்கு வகித்ததை அறிய முடியும். நக்ஸல்பாரிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட புகழ்பெற்ற கலைஞர்களான கத்தார், வரவரராவ், கல்யாண ராவ் முதலியோர் தவிர இந்தப் பணியை வேறு யார் செய்திருக்க இயலும்? பேச்சுவார்த்தைகள் தோற்றுப்போவது வருத்தத்திற்குரியது. ஆனால் தோற்றுப் போனதற்கு மாவோயிஸ்டுகளை மட்டுமே காரணமாகச் சொல்ல இயலாது.

வன்முறைக்கு இருதரப்புமே காரணமாயுள்ளனர். மாவோயிஸ்டுகளின் வன்முறையே பெரிதுபடுத்தப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வன்முறைகளைப் போலீஸ் மட்டுமின்றி போலீஸ் ஆதரவு குண்டர் படைகளும், மாஃபியா கும்பல்களும் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. சரணடைந்த முன்னாள் நக்சலைட்டுகள் அடங்கிய அமைப்புகள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஏவப்படுகின்றன. பிரஜாபந்து, பச்சைப்புலிகள், சிவப்புப் புலிகள், பல்நாடு புலிகள், நர்சா நாகங்கள், காகதீய நாகங்கள், நல்லமல நாகங்கள், ஜிராந்திசேனா நல்லதண்டு என்பன இவ்வாறு மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள குண்டர் படைகளில் சில. மனித உரிமைப் போராளிகளான ஆசிரியர் கனகாச்சாரியை ஆகஸ்டு 24 அன்றும், மன்னே தய்வபிரசாத்தை செப்டம்பர் 10 அன்றும் இவர்கள் கொன்று குவித்துள்ளனர். ஹரகோபால், பாலகோபால், வரவரராவ், கல்யாண்ராவ், கத்தார், பினாகபாணி, புன்னாகராவ், பத்மகுமாரி என இன்னும் 30 மனித உரிமைப் போராளிகள் இவர்களின் பட்டியலில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தெலுங்கு மகாகவி சிரீசிரீயால் 1970 ஜூலை 4 அன்று ஹைதராப்பாத்தில் தொடங்கப்பட்ட ‘வீராசம்’ அமைப்பில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் குடும்பராவ், விஸ்வநாத சாஸ்திரி, கே.வி.ஆர். எனப்பலரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். நெருக்கடி நிலை அமுலில் இருந்த இரண்டாண்டுகள் தவிர ஆண்டு தோறும் மாநில மாநாடுகளையும் இலக்கியப் பயிலரங்குகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேச பொதுப் பாதுகாப்புச் சட்டத்(APPS, 1992) தின்படி இந்தத் தடை அமுலாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் 12வது பிரிவின்படி பாதிக்கப்பட்டவர்கள் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக உரிமையுண்டு. ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லாமல் பத்திரிகைகளில் செய்தி வருவதற்கு முன்னதாகவே வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேச்சு வார்த்தைகளுக்காக வந்தவர்களைக் கைது செய்வது என்பது ஒரு மோசமான முன் மாதிரி. எதிர்காலத்தில் யாரும் இந்த அரசை நம்பிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதைத் தடுப்பதற்கே இது வழிவகுக்கும். ஒரு எழுத்தாளர் அமைப்பை இவ்வாறு தடை செய்திருப்பதையும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கைது செய்திருப்பதையும் நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

- அ.மார்க்ஸ்

Pin It