பாதை முழுவதும்
சிலுவைகளும் முள்கிரீடங்களும்
சிப்பியின் உள்ளே நாய்க் குடைகள்
விழுதென்று தொண்டால் பாம்புகள்
விதை என்று எடுத்தால் மலம்
கை கொடுப்பவனே
காலில் அடிக்கிறான் லாடம்
தோள் கொடுப்பவனே மூட்டுகிறான்
தலையில் தீ
நம் கோப்பையில் தேனீர் குடித்தவனே
குடிக்கிறான் நம் ரத்தமும்
ஒவ்வொரு 'டைசோ ஃபார்'மிலும்
தூக்கம் ஒளிந்திருப்பதாய் போட்டு பார்க்கிறோம்
ஒவ்வொரு புல்தரையிலும்
அமைதி மறைந்திருப்பதாய் அமர்ந்து பார்க்கிறோம்
ஒவ்வொரு 'காஃபி கார்ன'ரிலும்
நிம்மதி கைக்குட்டை கிடைக்கும் என்று நுழைகிறோம்.
மான்களை சிநேகித்தால் கழுகுகள் சீறுகின்றன
முயல்களுடன் கைகுலுக்கினால் மான்கள் உதைக்கின்றன
எல்லா நிஜங்களுக்குப் பக்கத்திலும்
ஒரு பொய் இருக்கிறது
எல்லா வார்த்தையிலும் ஒரு வாள் இருக்கிறது
எல்லாச் சிரிப்பிலும் இருக்கிறது ஒரு துளி நெருப்பு
வாழ்க்கை முகமூடிக்குள் நுழைந்து கொண்டு
பார்க்க முடிவதில்லை நம் முகத்தை நாம்
கடுகு கூட்டத்தில் காணாமல் போன
நம் வீட்டுக் கடுகை எங்கே காண்பது?