கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நூல்களைப் படிக்கும்போது, அவரின் நகைச்சுவை எழுத்துகளால் சில சமயம் என்னை அறியாமல் சிரித்திருக்கிறேன்-.

இந்த நூலைப் படிக்கும் போது என்னை அறிந்தே என் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டேன்.

நூலின் பெயர் - ‘பெரியார்’ மறைந்தார், பெரியார் வாழ்க.

அப்படி ஒன்றும் இந்த நூல் ஓர் ஆய்வு நூல் இல்லை. ஒரு தொகுப்பு நூல்தான். ஆனால், ஒரு தொகுப்பு நூலைக்கூட ஒரு வரலாற்று நூலாக எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டி இருக்கிறார், திராவிடர் கழகத் தலைவரும், இந்நூலின் தொகுப்பாசிரியருமான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘பெரியார்’ மறைந்தார் பெரியார் வாழ்க என்ற நூலின் தலைப்பே முரணாக அல்லவா இருக்கிறது. மறைந்தவர் எப்படி வாழமுடியும்?

அறிஞர் அண்ணா மறைந்த பொழுது, தந்தைபெரியார் அவர்கள் எழுதித்தந்த இரங்கல் செய்தியின் தலைப்பு ‘அண்ணா மறைந்தார், அண்ணா வாழ்க’ என்பதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் அவர்கள் இப்படி விளக்குகிறார் &

“இங்கிலாந்து நாட்டில் உள்ள அரசர்கள் மறைந்த போது வழமையாகக் கூறப்படும் மொழி  அரசர் மறைந்தார், அரசர் வாழ்க. இதன் தத்துவம், அரசர் பொறுப்பில் இருந்த அரசர் (தனி மனிதர்) மறைந்தார், ஆனால் அரசர் என்ற அமைப்பு நிலையானது, அது தொடரும். அதற்கு முடிவே இல்லை.”

ஆசிரியரின் மேற்கோளும், விளக்கமும் நூல் தலைப்பில் ஒளிந்திருக்கும் முரண் மயக்கத்தை உடைப்பதோடு, பெரியார் தனி மனிதர் அல்ல, அவர் ஓர் இயக்கம், ஒரு சகாப்தம் அது தொடருமே அல்லாமல் முடிவு பெறாது என்பதைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்நூல்.

ஆசிரியர் தன் எழுத்துக்களை  அதிகம் நுழைக்காமல் மற்ற தலைவர்களின் செய்திகளை முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்பது சிறப்பான அணுகுமுறை.

பொதுவாக தந்தை பெரியாரை நேர்முகமாகத்தான் அறிமுகம் செய்வார்கள். இந்நூலில் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் எதிர்மறையாக அறிமுகம் செய்கிறார். அழகான சிற்பியில் விளைந்த முத்தாக, வித்தியாசமான அறிமுகம்.

1973 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 24ம் நாள் காலை 7.22 மணிக்கு, வேலூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் தந்தை பெரியார்.

அன்றைய சூழல், மக்கள், மக்களின் ஆற்றாமை, நிலைகுலைந்த தமிழகம், தலைவர்கள், அவர்களின் செய்திகள் இறுதிப்பயணம் என தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூல் அந்த நாளுக்கே நம்மைக்’ கொண்டு செல்கிறது.

அன்றைய காலத்தில் வெளிவந்த விடுதலை, முரசொலி, தென்னகம், நவமணி, ஜனசக்தி, தினத்தந்தி, அலைஓசை, நவசக்தி, தமிழ் மரசு, மக்கள் குரல் போன்ற இதழ்களின் பெரியார் குறித்த செய்திகள், ஓர் ஆவணமாகக் காண முடிகிறது.

கவுதம புத்தருக்குப்பின் வந்த சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர், தென்னகத்தில் முதன்முதலாக சமதர்மக் கருத்துக்களை அறிமுகம் செய்தவர், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் பாதுகாவலர், திராவிடர் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் என்று சொல்லும் கலைஞர், ஐயாவின் மறைவைச் செல்லும் போது “நடக்கக் கூடாதது நடந்து விட்டதே! சீர்திருத்தப் போரின் நாயகனின் புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே” என்று தோழர்களும், தாய்மார்களும் கதறியதாகச் சொல்லும் வரிகள் நெஞ்சை உலுக்கிப் போடுகிறது.

“நிர்வாணமாக நின்ற தமிழ் சமுதாயத்திற்கு, அவன் தன்மான ஆடை தரித்தான். அதற்காக அவன் நிர்வாணம் ஆக்கப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

ஆனால் இன்றைக்கு எவர் கோட்டைக்கு வரினும் அவரின் பள்ளியில் படித்த பிள்ளைகளே அவர்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது” என்றும், “தேசிய விடுதலை இயக்கமா? அவனே முதல்வன், பொதுவுடமை இயக்கமா? அவனே முன்னவன்.

சுயமரியாதை இயக்கமா? அவனே முன்னவன், மொழி காக்கும் இயக்கமா? அவனே முதல்வன்... அதோ மனித இனத்தின் தூதன் போகிறான்.!” என்றும் பெரியாரின் மறைவை சொல்கிறார் சோலை.

இவர்கள் போன்று பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்களில் வரிகளை இந்நூல் பதிவு செய்திருக்கிறது.

தந்தை பெரியாரின் வாழ்வில் அவரின் இயல்பான வாழ்க்கைச் செய்திகள், சமூகத் தொண்டுகள், களம் கண்ட போராட்டங்கள், பயணங்கள், நகைச்சுவைகள் போன்ற பல்வேறு வகைப்பட்ட செய்திகள்- 

பெருந்தலைவர் காமராசர், கலைஞர் நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம், மண்ணை நாராயணசாமி, பேராசிரியர் அன்பழகன் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் சோகமான அஞ்சலிப் புகைப்படங்கள் - இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் ஆகிய காட்சிகளைப் படங்களாகத் தொகுதிருக்கும் பாங்கே, இந்நூலை ஒரு வரலாற்று ஆவணமாகக் காட்டுகிறது.

328 பக்கங்கள் கொண்ட இந்நூலின் ஒரு பக்கம் கூட தவிர்க்க முடியாதது. பெரியார் மறைந்தார், பெரியார் வாழ்க. அருமையான நூல், படிக்க வேண்டிய நூல், இன்றைய காலத்தின் இளைய சமுதாயம் அறிய வேண்டிய செய்திகள் அடங்கியது இந்நூல்.

தொகுப்பாசிரியர்:

கி.வீரமணி

வெளியீடு : திராவிடர் கழகம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை -7

தொலைபேசி : 044--26618163

Pin It