ஒரு 'கர்ச்சீப்'பை வைத்து 'ஒத்தல்லோ' என்ற புகழ்பெற்ற நாடகக் காவியத்தை எழுதினார் சேக்ஸ்பியர். அங்கே டெஸ்டிமோனோ, யாகோ, எமிலியா போன்ற பாத்திரத்திரங்கள் நாடகத்தில் சுவை சேர்த்து மெருகேற்றினார்கள்.
இங்கே நம்முடைய எதிர்கட்சித் தலைவருக்கும் ஒரு வெள்ளை கர்ச்சிப் கிடைத்திருக்கிறது.
திடீரென்று டில்லிக்குப் புறப்பட்டுப் போனார் எடப்பாடியார். அமித்ஷாவைச் சந்தித்தார், அரைமணிநேரம் பேசினார், வெளியே வந்தார்.
அங்கு என்ன நடந்ததோ? காரில் ஏறிய எடப்பாடியார், அந்த வெள்ளைக் கர்ச்சிப்பால் முகத்தை மூடிக்கொண்டு சர்ர்ர் என்று போய்விட்டார், செய்தியாளர்களைக் கூடச் சந்திக்காமல்.
உள்கட்சிப் பிரச்சனையைத் தீர்க்க, வெளிக்கட்சித் தலைவர் அமித்ஷாவிடம் பஞ்சாயத்துப் பண்ண வேண்டி செங்கோட்டையன் சந்தித்த பின்னர்தான் இந்த எடப்பாடியின் 'கர்ச்சிப்' சந்திப்பு நடைபெற்று இருக்கிறது.
அங்கு என்ன நடந்திருக்கும் என்பது குறித்து ஆராய வேண்டியதில்லை. ஆனால் நான் கர்ச்சிப்பால் முகத்தைத்தான் துடைத்தேன், இந்த ஊடகங்கள் கர்ச்சிப்பை வைத்து ஏன் முகத்தை மூடினார் என்று ஊதிப்பெருக்கி விட்டது என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஐயோ பாவம், "இனி 'ரெஸ்ட்ரூம்' போவதானாலும் கூட ஊடகங்களிடம் சொல்லிட்டுத்தான் போகனும் போல'' என்று நொந்து பேசியிருக்கிறார் அவர், எடப்பாடியில்.
அது சரி, அங்கே என்ன நடந்திருக்கும்? "2029 தான் எங்க இலக்கு, 2026 நீ ஜெயித்தால் என்ன, தோத்தா என்ன உன் கட்சி அதோகதிதான். அதன்பிறகு செங்கோட்டையன் கையில சின்னதா ஒரு ரெட்டை இலையைக் கொடுத்து 2029 ஐ நான் பாத்துக்கிறேன்" என்று யாராவது சொல்லி இருப்பாங்களோ, என்னவோ!
யாருக்குத் தெரியும்? கர்ச்சிப் என்றால் சும்மாவா? சேக்ஸ்பியர் ஒத்தல்லோ மூலம் டெஸ்டிமோனோவிடம் கொடுத்த கர்ச்சிப் சோகத்தில் முடிந்தது. இங்கே எடப்பாடியிடம் ஒரு கர்ச்சிப் சோகத்தில்தான், கதை இருக்கிறது.
கர்ச்சிப் என்னவோ பரமர ரகசியமாகத்தான் இருக்கிறது.
- கருஞ்சட்டைத் தமிழர்