ஆட்சியின் காலம் முடியப் போகும் நேரத்தில், குறிப்பாக 2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல், எதிர்க் கட்சிகளிடம் பேசாமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் திடீரென்று ‘President of Bharat ‘ என்று ஜி20 உச்சி மாநாடு தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் விருந்து அழைப்பிதழில் அச்சிட்டு இருக்கிறது மோடி அரசு.

சில நாள்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் “நாம் இனிமேல் நம் நாட்டை பாரத் என்று தான் சொல்ல வேண்டும். இந்தியா என்று சொல்லக் கூடாது” என்று நாக்பூரில் பேசினார்.president of bharatஅடுத்த சில நாள்களில் அவசர அவசரமாக இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றி குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழை அரசு வெளியிடுகிறது. அப்படியானால் இது இந்தியாவா? பாரத்தா?

வேதத்தில், புராணங்களில் இந்நாட்டைக் குறிப்பிட்டு இது இந்தியா அல்லது பாரத் (பாரதம்) என்ற பெயர்கள் எங்கும் காணவில்லை.

துஷ்யந்தன் – சகுந்தலைக்குப் பிறந்த மகன் பரதன் ஆண்ட நாடு ‘குருநாடு’, பாரத நாடு இல்லை.

தம்பி பரதன், தன் அண்ணன் இராமனை நெஞ்சில் ஏந்தி ஆட்சி செய்த நாடு கோசலம், தலைநகர் அயோத்தி, அது பாரத நாடு இல்லை. புராண, இதிகாசங்களின் படி பரதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஆண்ட நாடு பாரத் அல்லது பாரதம் என்பதற்கு சான்று இருப்பதாகத் தெரியவில்லை.

 முகமது கோரி கி.பி.1100 ஆம் ஆண்டை ஒட்டிப் படையெடுத்தபோது அவர் ‘சிந்து’ என்ற நதியைக் கடந்து வந்தார். அரபு - ஈரானிய மொழியில் ‘சி’ என்ற ஒலி ‘இ’ என்று மாறுவதால் சிந்து நதி என்பது இந்து நதி என்று மாறி அதுவே இந்தியா என்று மாறிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். இச்சொல் நேரடியாக இந்தியாவைக் குறிப்பதாக இல்லை.

ஆனால் கிருஸ்து பிறப்பதற்கு முன் அதாவது கி.மு.302 ஆம் ஆண்டு சந்திரகுப்தன் அரசவைக்கு வந்து, 6 ஆண்டுகள் தங்கி, கி.மு. 296 ஆம் ஆண்டு கிரேக்கம் திருப்பினார் செல்யூக்கஸ் நிகேடரின் தூதுவர் மெகஸ்தனிஸ்.

இந்த 6 ஆண்டுகளில் இந்தியாவைப் பற்றி அவர் எழுதிய நூலின் பெயர் ‘இண்டிகா’. இது சிந்து நதியாகிய ‘இண்டஸ்’ நதியின் கிரேக்க உச்சரிப்பு. ‘இண்டிகா’ என்ற பெயரை பெளத்தத்துடன் இணைத்துப் பாகியான் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே இண்டிகா என்பது இந்தியாவைக் குறிக்கும்.

இது வரலாற்றுச் செய்தி.

இப்பொழுது இந்தியாவா, பாரத்தா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. காரணம் நம் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1 என்பது “இந்தியா அதாவது பாரத் ( பாரதம்) மாநிலங்களின் கூட்டமைப்பாக இருக்கும் “ என்று கூறுகிறது. எனவே இந்தியா என்றும் பாரத் என்றும் அழைக்கலாம்.

இந்தியாவை ‘பாரத்’ என்றுதான் அழைக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், யு.யு. லலித் அமர்வும், அதே போன்று 2020 ஆம் ஆண்டு தொடுத்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்பே அமர்வும் சட்டப் பிரிவு 1 இன் படி இந்தியா - பாரத் என்று எப்படியும் அழைக்கலாம் என்று மனுக்களைக் தள்ளுபடி செய்தனர்.

இந்த முடிவு 1949 ஆம் ஆண்டு விவாதம் நடத்தி அம்பேத்கரால் எடுக்கப்பட்ட முடிவு.

இவைகளை எல்லாம் கணக்கில் எடுக்காமல் திடீரென்று பிரதமர் மோடி இந்தியா என்ற பெயரை இருட்டடிப்பு செய்ய முயல்கிறார் என்றால் ‘I.N.D.I.A என்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணி தான் அவருக்கும் சங்கிகளுக்கும் புளியைக் கரைத்து விட்டது.

முதலில் கூட்டணி சேராது என்றும், சேர்ந்தால் ஒன்றாய் இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லித் திரிந்த அவர்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய ஒன்றியத்தின் பண்பாட்டைக் கூட்டணியிலும் நடைமுறைப்படுத்தி, இந்தியா கூட்டணி களம் கண்டு நிற்பதைப் பார்த்து மிரளுகிறார் மோடி.

‘இந்தியா’ என்ற எதிர் கட்சிகளின் பெயரைப் பார்த்து ‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரையே மறைக்க முயலுகிறார் என்றால், அவருக்குத் தேர்தல் பயம் வந்துவிட்டது என்பது தெளிவாகிறது.

இப்பொழுது ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் சொல்கிறார் இந்தியா என்ற பெயரை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று.

இதுவே இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அறிகுறி.

ஆனாலும் 2024 இல் பா.ஜ.கவை வீட்டுக்கு அனுப்புவதில் மக்கள் சோர்ந்து விடக்கூடாது.

- எழில்.இளங்கோவன்

Pin It