தந்தை பெரியார் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாகக் கடைப்பிடித்து அதற்குரிய உறுதி மொழியை இனி ஏற்போம் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில மேதாவிகள் மோடியே சமூக நீதிப் போராளி என்று கதறிப் பார்த்தார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் முடியவில்லை. சமூக நீதி இருக்கட்டும். முதலில் அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்காவது நேர்மையாக இருக்க வேண்டும்.

சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை நாளும் உயர்வு, வேளாண்மையை அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு, மக்களின் அன்றாடப் பயன்பாட்டின் முக்கிய அங்கமாக விளங்கும் இரயில்வே, விமான நிறுவனங்கள், நெடுஞ்சாலைகள், எல்.ஐ.சி நிறுவனம், தபால் நிலையம், பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு என்று ஐம்பது ஆண்டுகளாக அரசுடைமை ஆக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் அம்பானி, அதானி, டாடா குழுமங்களுக்கு விற்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் சமூக நீதியா? அல்லது இது மக்களுக்கான ஆட்சியா?

பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் இன்னமும் தங்கள் உரிமைக்காகப் போராடி வருகிறார்கள். இது குறித்து மனித உரிமை ஆணையம் கூட கேள்வி எழுப்பியிருக்கிறது.

ஆனால் கிணற்றுக்குள் விழுந்த கல்லைப் போல அசைவற்று இருக்கிறார் பிரதமர் மோடி. தவறியும் கூட ஒரு ஆறுதலுக்காகக் கூட இந்த வேளாண் மக்களை இவர் இன்று வரை பார்த்ததில்லை, பேசியதில்லை. இந்த ஓன்றிய அரசின் ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று இருக்கப் போகிறது.

பா.ஜ.க வின் மோடி அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் கூடிப்பேசி எடுத்த முடிவின்படி அவர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அகில இந்திய வேளாண் சங்கம் வரும் 27 ஆம் தேதி கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

போராட்டம் என்பது எதிர்ப்பின் அடையாளம். அதை விட வலிமையான ஆயுதம் மக்களிடம் இருக்கிறது. இனி பாஜக அரசு நாட்டை ஆளக்கூடாது என்று நாட்டு மக்கள் ஒற்றுமையாகச் சேர்ந்து இந்த ஆட்சியை அகற்ற வேண்டும். அடுத்த தேர்தலில் பாஜகவை அகற்ற மக்கள் உறுதி ஏற்க வேண்டும்.

அதற்கானப் பணிகளை இப்போதிருந்தே தொடங்க வேண்டும். இது காலத்தின் தேவை.

Pin It