இனப் படுகொலை நடத்திய அரசாக இலங்கை அரசினை அறிவிப்பதே தமிழ்நாட்டில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையின் முதல் அரசாணையாக இருக்க வேண்டும்!

ஐ.நா.சபையின் நிபுணர் குழு இலங்கை அரசினை மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதாச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துவந்த இனப்படுகொலை குறித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான் என்று ஐ.நா. நிபுணர் குழு இன்று ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அறிக்கையை அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டின் அரசுகள் வரவேற்றிருக்கின்றன.தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை அரசினை சர்வதேச நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.ஆனாலும் மத்திய அரசு இதுகுறித்து மௌனம் காத்து வருகிறது.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியானது தமிழர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் கொடூரமான் படுகொலை நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஒளிப்பட ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆனாலும் நாஜி ஜெர்மானியர்களை விடக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட சிங்களர்கள் தமிழ்நாட்டிற்குள்ளும், இந்தியாவிற்குள்ளும் எவ்வித பிரச்சினைகளுமின்றி வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றுவரை இந்திய, தமிழக அரசுகள் பாதுகாப்பும் வழ்ங்கி வருகின்றன.

2010 டிசம்பர் 5 ஆம் தேதியன்று சி.பி.ஐ.கட்சியின் தலைவர் டி.ராஜா ராஜ்யசபையில் இலங்கை அரசினை இனப்படுகொலை நடத்திய அரசென்று கூறியபோது “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு அவைத்தலைவர் உத்தரவிட்டார். தமிழ் மக்களை அவமானப்படுத்தும் இந்தப் போக்கினை இன்றுவரையிலும் மத்திய அரசு கடைப்பிடித்தே வருகிறது.

கொடூரமான போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசினைத் தண்டிக்கும் வகையாக 2010 டிசம்பர் 17 அன்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பின்னலாடைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச்சலுகையை அந்த ஆணை அடியோடு ரத்து செய்தது. இதுபோன்ற எந்த ஒரு ந்டவடிக்கையையும் இந்திய, தமிழக அரசுகள் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. மாறாக, நாஜிகளிவிடக் கொடூரமான இலங்கை அரசிற்கு அவை பலவித பொருளாதார மற்றும் அரசியல் உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலை இனியும் தொடர வேண்டுமா? ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கும் இன்றைய தேதியில் இருந்தாவது தமிழர்களை இழிவு படுத்தும் மத்திய - மாநில அரசுகளின் இந்தப்போக்கு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.

அதன் முதல் அடியாக, புதிதாக அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையானது இலங்கை அரசினை இனப்படுகொலை செய்த அரசென்று அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட வேண்டும். அவ்வாறு அறிவித்த பின்னர், தமிழ்நாட்டில் இயங்கிவரும் இலங்கை அரசின் அனைத்து நிறுவனங்களையும் தமிழ்கத்தில் இயங்க முடியாதவாறு தடை செய்யவேண்டும். 

இந்த நடவடிக்க்கைகளுக்கு மத்திய அரசு தெரிவிக்க வாய்ப்புள்ள அனைத்து எதிர்ப்புகளையும் புதிய அரசானது தமிழ் மக்களின் உதவி கொண்டு வெற்றி கொள்ள வேண்டும்!
- ஆர்.ஆர்.சீனிவாசன்