”நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் – நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று இது ஜாதிவாதம் என்று கூறி, கேலி செய்யப்படுகிறது.

வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர்…..அம்முறைப்படி, பிறருக்கு ஞானம் வழங்குவதன்மூலம் அந்தணன் புகழ் பெறுகின்றான் எனில், பகைவனை அழிப்பதினால் சத்திரியன் புகழுடையோனாகப் போற்றப்படுகிறான் என்றும், தனது வாணிபத்தாலும், விவசாயத்தாலும் வளம் பெருக்கிய வைசியன் எந்த விதத்திலும் புகழ் குறைந்தவனாகக் கருதப்படுவதில்லை. அதுபோன்றே தனது கைத்திறனால் சமுதாயத்திற்குச் சேவை செய்து வந்த சூத்திரனும் புகழ் மிக்கவனாய்க் கருதப்பட்டு வந்தான்” (ஞான கங்கை – எம். எஸ். கோல்வால்கர், பக்கம் 162 – 163) என்று தனது நூலில் எழுதியவர் ஆர். எஸ். எஸ். அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான எம். எஸ். கோல்வால்கர்.

rss saga 607அந்த அமைப்பின் நூற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அஞ்சல் தலையும் நாணயமும் வெளியிடுகிறார் பிரதமர் மோடி.

சூத்திரன் எப்போது புகழ் மிக்கவனாகக் கருதப்பட்டான்? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொல்லி வளர்க்கப்பட்ட சமூகமல்லவா இது. மற்ற மூன்று வருணத்திற்கும் அடிமை சேவகம் செய்வதற்காகவே பிறந்தவன் சூத்திரன் என்றுதானே மனுதர்மம் சொல்கிறது.

அப்படி இருக்கும்போது, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றும் ஒரு அமைப்பிற்கு அரசாங்கமானது நாணயமும், அஞ்சல் தலையும் வெளியிடுவது நியாயமானதா?

ஆர். எஸ். எஸ். அமைப்பே வருணாசிரம அமைப்பைப் பின்பற்றும் அமைப்புதானே! அதன் நூறாண்டு கால வரலாற்றில் ராஜேந்திர சிங் என்ற ஒருவரைத் தவிர அனைத்துத் தலைவர்களும் பார்ப்பனர்களே. அதுமட்டுமல்ல, ‘சுயம் சேவக்குகளாகப் பெண்களை நூறாண்டுகளாக ஏற்க மறுக்கும் அமைப்புதானே ஆர்.எஸ்.எஸ்.

காந்தியடிகளின் கொலையில் ஆர். எஸ். எஸ். அமைப்பின் பங்கு ஊரறிந்த ரகசியமாயிற்றே! மூன்று முறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கலவர அமைப்பு. கடந்த நூறு ஆண்டுகளாக எந்த ஒரு சட்டத்தின்கீழும் பதிவு செய்யப்படாத அமைப்புதான் ஆர். எஸ். எஸ். எந்த வரிவிதிப்பும் இந்த அமைப்பை நெருங்க முடியாது. திரட்டப்பட வேண்டிய நன்கொடைகளை அறிவிக்க வேண்டிய தேவை இல்லை. இதன் சொத்துகளுக்கும் வருமானத்திற்கும் தணிக்கையும் கிடையாது. இப்படிப்பட்ட ஓர் அமைப்பிற்குத்தான் பிரதமரின் பாராட்டும் புகழாரமும்.

அதே நேரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்குச் சரியானதொரு எதிர் வினையை ஆற்றியுள்ளார். “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி!” என்பது காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று X தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் வரிகள்.

இந்த நாட்டில் ஜாதியவாதத்திற்கும் மதவாதத்திற்கும் ஆதரவாய் இயங்கும் அமைப்புகளை இனம்கண்டு தோலுரிப்போம். தமிழ்நாட்டை நச்சரவ ஆர்.எஸ். எஸ். அமைப்பிலிருந்து பாதுகாப்போம்.

- வெற்றிச்செல்வன்