திராவிட இயக்கம் எளிய மக்களைச் சென்றடைவதற்குப் பயன்படுத்திய முக்கியமான வடிவம், நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள். எழுத்து மற்றும் பேச்சு வடிவிலான பரப்புரைகள் மக்களிடையே ஒரு சாராரைச் சென்றடைந்து கொண்டிருந்த வேளையில், காட்சி வடிவிலான நாடகமும், திரைப்படமும் வெகுமக்களிடையே திராவிட இயக்க அடிப்படைகளைக் கொண்டு சேர்க்கப் பேருதவி புரிந்தன. ஆனாலும் நாளடைவில் இதுபோன்ற முயற்சிகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டபோதும், ஒன்றிரண்டு திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. திராவிட இயக்கத்தின் போராட்டங்கள் பலவற்றைத் திரைப்படங்களாக ஆவணப்படுத்தாதது ஒரு பின்னடைவே. இதற்கு வணிக ரீதியான திரைப்படங்களே களத்தை முடிவு செய்தது ஒரு முக்கியமான காரணம். இந்நிலையில் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் வெளியாகியுள்ள திரைப்படம் பராசக்தி ஓர் ஆறுதல்.
ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பால் பொதுமக்களும், மாணவர்களும் பாதிக்கப்படுவதையும், அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டக்களம் காண்பதையும் கதையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பொள்ளாச்சியில் நடந்த படுகொலையையும், ஒன்றிய அரசின் அடக்குமுறையையும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, மாணவர்கள் கையெழுத்து இயக்கம் மூலம் தீர்வு காண்பதாகவும் கதை முடிகிறது. இறுதிக் காட்சியில், மொழிப் போராட்டத்திற்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த பேரறிஞர் அண்ணா, இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கை என்று சட்டப்பேரவையில் அழுத்தந் திருத்தமாக அறிவிக்கிறார்.
தற்காலத்திற்கான திரைப்படத்திற்கே உரிய வணிகரீதியான விஷயங்கள் இடம் பெற்றிருந்தாலும், மொழிப் போராட்டத்தை ஆவணப்படுத்தியிருப்பதற்காகவும், மொழி உரிமையின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பதற்காகவும் பராசக்தி திரைப்படத்தை வரவேற்கலாம்.
என்றாலும், கையெழுத்து இயக்கம் ஒரு மாநிலத்தின் மொழியுரிமைக்கான தீர்வா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழி சார்ந்த உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டுள்ளது. இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதோடு, இந்தியை வளர்ப்பதற்கான உறுப்பையும் அரசியலமைப்புச் சட்டம் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 351ஆவது உறுப்பானது பின்வரும் சொற்றொடரைக் கொண்டுள்ளது.”It shall be the duty of the Union to promote the spread and of Hindi language” - அதாவது இந்தியைப் பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்பது இதன் பொருள். இந்தியா போன்ற பல மொழிகள் பேசுகின்ற நாட்டில் ஒரு மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வுறுப்பு மொழிச் சமத்துவத்திற்கு, மொழி நிகர்மைக்கும் எதிரானது. இந்த உறுப்பு அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்கும் வரையில், இந்தியை வளர்ப்பது என்ற பெயரில் ஏதாவது ஒரு வகையில் இந்தித் திணிப்பு நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கும். எனவே மொழி உரிமைக்கான சரியான தீர்வைக் கொடுக்கும் வகையில் இன்னும் அழுத்தமாக, திரைப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கலாம்.
கதாநாயகி வெறும் அலங்காரப் பாத்திரமாகவே அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதைக்குப் பொருத்தமாக இல்லை. அகில இந்திய இந்தி எதிர்ப்பு அமைப்பின் செயலாளராகத் தன்னை அறிவித்திருக்கும் நாயகி, பெரும்பான்மைக் காட்சிகளில் அதற்கான ஆளுமையை வெளிப்படுத்தவில்லை. கலைஞரின் பராசக்தி நாயகியைப் போன்ற ஓர் ஆளுமையை நாயகியின் கதாபாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கலாம்.
இந்தித் திணிப்பிற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் இணைந்து போராட வேண்டும் என்ற இயக்குநரின் கற்பனை பாராட்டத்தக்கது. இதுவரை நடைபெறாவிட்டாலும் இனிமேலாவது அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது, இந்தியாவில் தேசிய இனங்களுக்கான பாதுகாப்பினைத் தரும்.
திராவிட இயக்கத்தின் களங்களை ஆவணப்படுத்துவது என்பது நிகழ்கால, வருங்கால தலைமுறைகளுக்கான வரலாற்றை நினைவுபடுத்தும் முயற்சி. அம்முயற்சியில் இப்படம் வெற்றிபெற்றுள்ளது. வணிகரீதியாகவும் இத்திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் இன்னும் பல வெளிவருவதற்கு உந்துதலாக இருக்கும்.
- வெற்றிச்செல்வன்