இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் "கரூர் கொடுந்துயர் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெறுவர். இந்த இருவரும் தமிழ்நாடு பிரிவு ஐ.பி.எஸ் அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம், பாதிக்கப்பட்டவர்களான பன்னீர்செல்வம், பிரபாகரன், செல்வராஜ் மற்றும் பா.ஜ.க வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். த.வெ.க கோரியது சி.பி.ஐ விசாரணை அல்ல. நீதி விசாரணை மட்டுமே. மற்ற நான்கு மனுதாரர்கள் சி.பி.ஐ விசாரணை கோரியிருந்தனர். இந்நிலையில் இரண்டு கோரிக்கைகளையும் இணைத்து இப்படி ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சி.பி.ஐ விசாரணை பற்றி உச்சநீதிமன்றமே கேட்டறிய வாய்ப்பு இருக்கும் போது இடையில் மூவர் குழு நியமிக்கப்படுவதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கரூர் நெரிசலில் பலியான ஒன்பது வயது சிறுவன் ப்ரீத்திக்கின் தாயார் ஷர்மிளா "சிறுவனின் தந்தையான பன்னீர்செல்வம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மனைவியையும், குழந்தையையும் பிரிந்து வாழ்வதாலும், பலியான சிறுவனின் இறுதிச்சடங்குக்குக் கூட அவர் வரவில்லை என்பதாலும், பணத்திற்காகவே அவர் தற்போது இதில் தலையிட்டுள்ளார் என்பதாலும் அவருக்கு இது குறித்து வழக்கு தாக்கல் செய்ய உரிமையில்லை" என்று உச்ச நீதிமன்றத்திலேயே காணொளி மூலம் தனது ஆட்சேபணையைத் தெரிவித்துள்ளார். அதே போன்று பலியான சந்திராவின் கணவர் செல்வராஜ் தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் தன்னிடம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் போலியாகக் கையெழுத்தைப் பெற்றதன் மூலம் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற விசாரணையில் காணொளி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கூட்ட நெரிசலில் தனது தங்கை மற்றும் மாப்பிள்ளையை இழந்த பிரபாகரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது முதல் தற்போது வரை தான் மனுவில் கையெழுத்திட்டது குறித்து மாற்றி மாற்றிப் பேசி வருகிறார். பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணிக்கு இந்த வழக்கைத் தொடர எந்த அடிப்படையும் இல்லை. ஆகவே சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த இந்த நான்கு மனுதாரர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்பதால் அவற்றின் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால உத்தரவு நீடித்து நிலைக்கத்தக்கதல்ல.
தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு காரணமாக தனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்து இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த செண்பகம் துரைராஜன் உண்மையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பிக்கவே இல்லை என்பது பிறகு தெரிய வந்தது. அதே போல் இந்த வழக்கும் போலியாகத் தொடரப்பட்டிருக்கிறது என்று தெரிந்த பிறகும் உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. தேவைப்பட்டால் மோசடியான மனுத்தாக்கல் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறுகிறது உச்சநீதிமன்றம். சி.பி.ஐ விசாரணை கோரிய மனுக்களே மோசடியானவை எனும் போது அதை சி.பி.ஐ விசாரிப்பது எவ்வாறு நேர்மையானதாக இருக்கும்.
சி.பி.ஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான அஜய் ரஸ்தோகி இந்தியாவின் மிகப்பெரிய கொடூரமான கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்கான பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்பை வழங்கியவர் என்பதும், பின்னர் அவர் வழங்கிய தண்டனை குறைப்பு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டதும் அவர் தலைமையிலான இந்த விசாரணை மீது நம்பிக்கை இழக்க செய்கிறது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மிகவும் தவறானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் பணி அதிகாரிகளின் கண்ணியத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் இந்த உத்தரவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஜராத்தைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த குஜராத்தை சேர்ந்த ஒரு நீதிபதியின் தலைமையில் குழுவை அமைத்து விட்டு, அக்குழுவில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை நியமிக்க கூடாது என்று கூறுவது வியப்பிற்குரியது.
சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது. அக்குழுவின் விசாரணையில் பாரபட்சம், உண்மையை மறைப்பது, பழி வாங்கும் நடவடிக்கை போன்ற ஏதேனும் தவறு நேர்ந்தால் அக்குழுவை கலைக்கலாமே தவிர தற்போது அவ்வாறு செய்வது தவறானது.
சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட இருப்பதால் தமிழ்நாடு அரசு நியமித்த நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தேவையற்றது என்று கூறி அதையும் கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரே நேரத்தில் சி.பி.ஐ விசாரணையும், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையும் நடைபெற்ற முன்னுதாரணம் இருக்கும் பொழுது இப்போதைய உத்தரவு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
சி.பி.ஐ விசாரணை குறித்து ஒவ்வொரு மாதமும் அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதன் மூலம் இந்த வழக்கு விசாரணையை மாதக் கணக்கில் இழுத்தடிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய உச்சநீதிமன்ற உத்தரவு நீதியின் மீதான நம் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. "நீதிமன்றத்தை ஏமாற்றி மோசடியாக ஒரு தீர்ப்பு பெறப்பட்டுள்ளது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் நிலையில் அந்த தீர்ப்பு ரத்து செய்யப்படும்" என்று பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரியவை மோசடி மனுக்கள் என்று அடுத்தடுத்த விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால் இந்த இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. நீதி நெடுநாள் உறங்காது !!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து