இங்கிலாந்து நாட்டின் பிரதமராக அண்மையில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக் பொறுப்பேற்று இருக்கிறார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக வெளியேறி, ஆப்பிரிக்கா சென்று அங்கு இந்தியர்களுக்கு எதிரான படுகொலையில் இருந்து தப்பித்து அகதிகளாக இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், இன்று இங்கிலாந்தின் பிரதமர் ஆகியிருக்கிறார். அவர் வெள்ளை நிறத்தைச் சாராதவர். இந்து மதத்தைச் சார்ந்தவர். சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர். இங்கிலாந்தில் இந்த அடையாளங்களுடைய ஒருவர் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பணியாளாக “domestic servants” மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று மரபுவழி சிறுமான்மையினரான ஒருவர் பிரதமராகி இருப்பது இங்கிலாந்து அடைந்திருக்கும் சமூக அரசியல் மாற்றங்களைக் காட்டுவதாக “The Guardian” செய்தி வெளியிட்டது.rishi sunakஉலக அளவில் வெளியிடப்பட்ட செய்திகளில், பன்மைத்துவம், சிறுபான்மையினருக்கு அதிகாரம், நிறவெறிக்கு எதிரான நகர்வு ஆகிய கருத்துகளைப் பிரதிபலிக்கும் தலைப்புகள் மற்றும் உப தலைப்புகள் இடம்பெற்றன.

இங்கிலாந்து அந்த அளவிற்கு சமூக மாற்றம் அடையவில்லை. இன்னும் நிறவெறி அங்கு வேரூன்றி இருக்கிறது என்றும், அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஒபாமா அதிபர் பதவியேற்றளவிற்கு எழுச்சியானது இல்லை என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் ஆர் எஸ் எஸ் - சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், “நம்மை ஆண்டவர்களை நாம் ஆளுகிறோம்” என்பது போன்ற கருத்துகளைச் சொல்லி வருவதைப் பார்க்க முடிகிறது. “இது தாண்டா இந்திய மாடல் Revenge” என்றும் இங்குள்ள பார்ப்பனர்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

சில இந்திய ஆங்கில ஊடகங்கள், ரிஷி ராஜ்ஜியம் என்பதாகச் செய்தி வெளியிட்டார்கள். அதாவது ‘ரிஷி’ என்கின்ற சொல்லின் மூலம் அவர்கள் மறைபொருளாக இந்து மதத்தின் ரிஷிகளைக் குறித்தனர்.

அகதியாய்ச் சென்ற இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் இங்கிலாந்து பிரதமராவதை, அப்படியே நேரெதிராக, இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியர் ஆட்சியல் அமர்வதைப் போல் சித்தரித்து இப்படி வீண் பெருமை எதற்காகப் பார்ப்பனர்களால் பேசப்படுகிறது?

உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் எப்படி தங்களுடைய பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள, திரித்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டத்திலேயே கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் உலக அளவிலான ஒரு செய்தியைப் பொய்யாகத் திரித்து அவர்களால் வெளியிட முடிகிறது என்றால், கடந்த காலங்களில் எவ்வளவு பொய்களை வரலாறாக்கி இருப்பார்கள்?

இந்தியாவை வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து விடுவார்கள், சிறுபான்மை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து விடுவார்கள் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி அரசியல் செய்யும் பார்ப்பனர்கள், தற்போது இன்னொரு நாட்டில் ‘இந்து’ ஒருவர் பிரதமராகியிருப்பதைக் கொண்டாடுவது, அவர்கள் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

தான் ஒரு இந்து என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஒருவர் இங்கிலாந்தில் பிரதமர் ஆகியிருப்பதை இங்குள்ள பார்ப்பனர்கள் கொண்டாடுவதை நாம் வெறும் செய்தியாகக் கடந்து போக முடியாது. அதிகாரம் எங்கெங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பார்ப்பனியம் முடிந்த அளவிற்கு எவ்வளவு தரம் தாழ்ந்த செயல்களைச் செய்தும் அருகே சென்றுவிடும்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, முதலில் அவர்களிடமிருந்து ஆங்கிலத்தையும், கல்வியையும், அறிவியலையும் கற்றுக்கொண்டது பார்ப்பனர்கள்தான். அவர்கள்தான் முதன்முதலில் பல்வேறு மேற்கத்திய நாடுகளில் சென்று குடியேறினர். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதிகார வர்க்கத்திற்கு அருகில் அமர்ந்து கொண்டு சனாதனத்தை, பார்ப்பனியத்தைப் பரப்பி வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் சங் பரிவார அமைப்புகளுக்குப் பெரும் பொருளுதவி செய்து வருகின்றனர்.

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகியிருக்கிறார். இங்கிலாந்து பொருளாதாரம் வளர்ச்சியடையுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பொருளாதாரம் ஒளிமயமாகத் தெரிகிறது.

- மா.உதயகுமார்

Pin It