தமிழகம், இந்திய துணைக்கண்டம், உலகம் எங்கேயும் மதம் அமைதியை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

வன்முறையும், சகிப்பின்மையும் மதங்களின் அடித்தளமாக இருக்கிறது.

சாதி, மத எதிர்ப்புகளை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் அறிஞர்கள் கொல்லப்படுவதற்கும் மதம் காரணமாக இருக்கிறது.

அமைதியைச் சொன்ன சமணத் துறவிகளைக் கழுவில் ஏற்றிக் கொன்றது மதம். கொலை என்றாலே ஆயுதக் கலாச்சாரம்தான்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். வன்முறையை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அரை ‘டவுசர்’ போட்டு, கையில் தடி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி கொடுக்கும் அமைப்பு அது.

கடந்த ஆயுத பூசையின் போது கோவையில் கத்தி, வாள், துப்பாக்கியுடன் ஆயுத பூசை செய்து இருக்கிறார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்.

அதுமட்டும் அல்லாமல் அதைப் படமாக எடுத்து முகநூலில் வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு வார்த்தைக்குச் சொன்னால் கூட பூசை செய்வதற்கு வேறு எந்தப் பொருளும் கிடைக்கவில்லையா அவருக்கு-?

இதுபோன்று வாள், கத்தி, துப்பாக்கி வைத்து பூசை செய்வதால் இவர் ஆயுத கலாச்சாரத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர் என்பது தெரியவருகிறது.

அவர் வாழும் கோவையில்தான் மதக் கலவரங்களும், பதற்றச் சூழலும் நிலவுகின்றன.

இது குறித்து அர்ஜூன் சம்பத் சொல்லும்போதும், அந்த துப்பாக்கி அவருடையது இல்லை, அவரின் மகனுடையது அதுவும் பயிற்சி துப்பாக்கிதான் என்று சொல்கிறார்.

அப்படி ஆனால் அவர் மகன்தான் அதை பயன்படுத்த வேண்டும். இவர் ஏன் இவருடைய வாள், கத்திகளுடன் அந்தத் துப்பாக்கியை பூசை செய்ய வேண்டும்.

அர்ஜூன் சம்பத் அந்த துப்பாக்கி தன் மகனுடையது என்று சொல்லித் தப்பிக்க முயல்கிறார். துப்பாக்கியுடன் பூசை செய்தவர் அர்ஜூன் சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அந்த ‘ஆயுத’ பூசை படத்தை சமூக வளைத்தளத்தில் அவரே போட்டுப் பரவச் செய்து இருக்கிறார்.

இது அமைதியை குலைக்கும் செயல் மட்டுமன்று, வன்முறைக்கு வித்திடுவதாகவும் அமைகிறது.

மீண்டும் வன்முறை நிகழாமல் இருக்க இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரங்களை தடுத்து நிறுத்த, அர்ஜூன் சம்பத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை.

Pin It