தமிழ்நாட்டில் தந்தை பெரியார் விதைத்தது, இப்போது கேரளாவில் முதல் அறுவடையைத் தந்துள்ளது.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி, பார்ப்பனர் அல்லாதோர் 36 பேரை அர்ச்சர்களாக நியமித்துள்ளது இடதுசாரிக் கேரள அரசு. மாநில அறநிலையத் துறையின் கீழ் இயங்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 26 பார்ப்பனர்களோடு, பார்ப்பனர் அல்லாத 36 பேரும் அர்ச்சகர்களாகப் பணியாற்ற இருக்கின்றனர். அவர்களுள் 6 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இந்து மதத்தின் சனாதனத் திமிரைக் காலில் போட்டு மிதித்தபடி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யேடு கிருஷ்ணன் மணப்புரம் சிவன்கோவிலுக்குள் அர்ச்சகராக நுழைந்து பூசைகளைச் செய்துள்ளார். மலையாள மண்ணில் மனுநீதிக்கு மரண அடி கொடுத்துள்ள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலில் நம்முடைய பாராட்டும், வாழ்த்தும்.

pinarayi vijayan 320இந்து மதத்தின் வேர் சாதியில் உள்ளது. சாதியின் பாதுகாப்பு கோவில் கருவறையில் உள்ளது. வருணசாதி அடுக்குகளைத் தங்கள் சுயநலத்துக்காகக் கட்டிக்காக்கத் துடிக்கும் ஒரு கூட்டத்தார், அந்த இடங்களைத் தக்க வைத்துக்கொள்வதில், அதி தீவிரத் தன்மையுடன் இயங்கிவருகின்றனர். அதனால்தான், சாதி ஒழிப்பை முதன்மைச் செயல்பாடாக முன்னெடுத்த தந்தை பெரியார், சாதி அடுக்குகளைப் பாதுகாக்கும், கோவில் கருவறையில் கை வைத்தார்... அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

1970, சனவரி 26ஆம் நாள் கருவறை நுழைவுப் போராட்டம் என அறிவித்தார் பெரியார். முதலமைச்சராய் இருந்த பெரியாரின் மாணவர் கலைஞர், ‘நடப்பது உங்கள் ஆட்சி, இதற்காக நீங்கள் போராடலாமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக நானே ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறேன் எனக் கூறியதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைத்தார் பெரியார். தான் உறுதியளித்தபடி, 1970 டிசம்பரில் அறநிலையத் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டு வந்தார் கலைஞர்.

அதுவரை, மணியடிப்பதற்கும், கற்பூரத் தட்டை ஏந்துவதற்கும் ஏகபோக உரிமை கொண்டாடி வந்தவர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, தங்களின் புகலிடமான உச்சநீதிமன்றத்தை நோக்கி ஓடினர். சில ஜீயர்கள் உள்பட 12 பேர், திமுக அரசு கொண்டு வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். 1972, மார்ச் 14இல் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது... ‘ஆகமங்களை முறைப்படி படித்திருந்தால், எந்தச் சாதியினராக இருந்தாலும் அர்ச்சகராகத் தடையில்லை. ஆனால், மரபுகள், பழக்க வழக்கங்கள் மீறப்படக் கூடாது என்று வழக்கம் போல் புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பைப் பற்றி பெரியார் சொன்னார், ‘அறுவை சிகிச்சை வெற்றிதான். ஆனால் நோயாளி இறந்துவிட்டாரே. இது என் நெஞ்சில் தைத்த முள்ளாகிவிட்டது’ என்றார். இதுபோன்று தீர்ப்புகளில், மத நம்பிக்கைகளில் சட்டம் குறுக்கிடக் கூடாது என்று சொல்லும், அரசியல் சட்டப்பிரிவு 25, 26 ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

1982இல் நீதிபதி மகராஜன் குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஆகமக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, விருப்பமுள்ளவர்களுக்கு ஆகமக் கல்வி வழங்கப்பட்டது. 2006இல் திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும், மே 23ஆம் நாள் முதலமைச்சர் கலைஞர் ஓர் அரசாணை வெளியிட்டார். 1972 மற்றும் 2002ஆம் ஆண்டு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, “இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உள்ள அனைத்துச் சாதியினரும் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது” என்றது அந்த அரசாணை. வழக்கம்போல், அய்யோ...சாஸ்திரங்கள் போய்விடும், சம்பிரதாயங்கள் அழிந்துவிடும், மனம் புண்பட்டுவிட்டது எனக் கூவிய சிறு குழுவின் கூச்சலுக்கு செவிசாய்த்தே பழக்கப்பட்டுப்போன உச்சநீதிமன்றத்தின் கட்டிடத்தில் இருந்து, 2008இல் தடையாணை வெளிவந்தது.

2012, டிசம்பர் 13இல் நடந்த இறுதி விசாரணையில், இந்தப் பிரச்சினையைத் தாங்களே பார்த்துக் கொள்வதாகக் கூறி கால அவகாசம் கோரியது அதிமுக அரசு. அதன் பிறகு அதனை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. பிறகு 2015 டிசம்பரில் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சமூகநீதிச் சட்டம், கேரளாவில் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. இங்கோ ஒரு கூட்டம் குறுக்கே விழுந்து தடுத்துக் கொண்டிருக்கிறது. திமுக அரசு பிறப்பித்த ஆணைப்படி, அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைத் தமிழ்நாட்டில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய மதவாத பாஜக அரசுக்குக் காவடி தூக்கும் அதிமுக அரசு அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க முன்வருமா?

கோவிலுக்கு வெளியே ஒரு சாதி, கோவில் வாசல் வரை ஒரு சாதி, கொடி மரம் வரை ஒரு சாதி, கருவறையின் வெளிப்பகுதி வரை ஓரு சாதி என்றிருந்த நிலை, திராவிட இயக்கத்தின் தொடர் போராட்டங்களால், மாறிப்போனது. ஆனால் கருவறைக்கு மட்டும் ஒரே சாதி என்ற மனுநீதி நிலைபெற வைக்கப்பட்டது. கருவறையில் மணியடிப்பதும், கற்பூரம் காட்டுவதும், ஒரு வேலை மட்டுமல்ல. தாங்கள்தான் உயர்வானவர்கள், மற்றவர்கள் தாழ்வானவர்கள் என்ற பார்ப்பன சமூக ஆதிக்கத் திமிரின் குறியீடு. அதனைத் தகர்த்தெறிவதுதான் சமூகநீதியின் எல்லைக்கோடு.

Pin It