எதிர்பார்த்ததுதான். மரிச்ஜாப்பி படுகொலைகளை முன்வைத்து நாம் எழுப்பிய கேள்விகளை மார்க்சிஸ்டுகள் – தங்களது கள்ள மவுனத்தாலேயே கடந்து போவார்கள் என்பதை! மரிச்ஜாப்பி படுகொலைகள் தலித் முரசின் கற்பனையில் உதித்த கதை என சிலர் நிறுவ முயல்கின்றனர். சிலருக்கு "கம்யூனிஸ்ட்டுகள்' எனப் பொதுவாக சொன்னதற்காக வருத்தம்; இன்னும் சிலருக்கு மார்க்சிஸ்ட்டுகள் எனக் குறிப்பாக சொல்லாமல் விட்டதற்காகக் கோபம்! இதில் எவருடைய கவனத்தையும் இப்படுகொலை ஈர்க்கவேயில்லை. உண்மையை உணர்ந்து கொள்வதை விடவும், தங்களின் தத்துவமும் கட்சியும் விமர்சனத்திற்குள்ளாவதைத் தாங்க முடியாத பதற்றம் மட்டுமே இவர்களை ஆட்கொண்டிருக்கிறது. கொத்துக் கொத்தாக காய்கறிகளைப் போல செத்தழுகிய மனித உயிர்களுக்காக, உலகத் தத்துவத்தைப் பயின்ற அவர்களின் மூளை சற்றும் இறங்கவில்லை.
17 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். ஆனால், மேற்கு வங்க அரசின் கடுமையான நெருக்கடிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஆய்வுகளும் இந்த எண்ணிக்கையை நோக்கியே வந்தடைகின்றன. குரல்வளை நெரிக்கப்பட்டு, சத்தமின்றி, சாட்சிகளுமின்றி தீவிற்குள் புதைக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று – சி.பி.எம். அரசு 17 ஆயிரம் பேரை கொன்றது என நாங்கள் உறுதியாக சொல்கிறோம்.
ஒரு வாதத்திற்காக, 17 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்படவில்லை என்றே வைத்துக் கொண்டாலும், வங்கதேசப் பிரிவினையில் அங்கிருந்து விரட்டப்பட்ட நாமசூத்திரர்களை – மேற்கு வங்க அரசு எங்கே குடியமர்த்தியது? அவர்களின் இப்போதைய வாழ்நிலை என்ன என்பதையாவது விளக்க முடியுமா? சி.பி.எம். கட்சி ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசு, தண்டகாரண்யாவுக்கு (இப்போதைய சட்டீஸ்கர்), பெருமளவில் அகதிகளைக் கடத்தியது எனும்போது, சி.பி.எம். அரசு பொறுப்பேற்ற பிறகு, அகதிகள் மேற்கு வங்கத்திற்கு திரும்பி வந்தார்களா? வந்தார்களெனில் – எவ்வளவு பேர் வந்தார்கள், அவர்கள் எங்கே குடியமர்த்தப்பட்டார்கள்? வரவில்லையெனில், எங்கே, எவ்வளவு பேர் இருக்கிறார்களென இதுவரையிலும் ஏன் அரசு தரப்பில் இருந்து ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. சரி, இனியேனும் நாமசூத்திர அகதிகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடும் துணிச்சல் – மேற்கு வங்க அரசிற்கோ, அதை வலியுறுத்தும் துணிச்சல் இதர இடதுசாரிகளுக்கோ இருக்கிறதா?
மரிச்ஜாப்பி படுகொலைகள் பற்றி வெளிவந்திருக்கும் ஆய்வறிக்கைகள், படுகொலையில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட பிறகு, எஞ்சியவர்கள் தண்டகாரண்யாவிற்கும் அந்தமானிற்கும் கடத்தப்பட்டனர் என்று குறிப்பிடுகின்றன. இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் 5.4.2011 நாளிட்ட "தி இந்து' நாளிதழில் ஒரு செய்திக் குறிப்பு வெளிவந்துள்ளது. சட்டீஸ்கர் (அப்போதைய தண்டகாரண்யா) முகாம்களில் வாழும் பங்களாதேஷ் அகதிகளுக்கு இன்றளவும் வாக்குரிமை கிடைக்கவில்லை. வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாததால், இன்று வரையிலும் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அகதிகளாக வந்த போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் மட்டுமே – இந்நாட்டுக் குடிமக்கள் என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் ஒரே ஆவணம். ஆனால், அதையொரு ஆதாரமாக தேர்தல் ஆணையம் ஏற்காததால், இத்தனை ஆண்டுகளாகியும் குடியுரிமை கிட்டாமல் அகதிகளாகவே வாழ்கின்றனர். இந்த அகதிகள் தீண்டத்தகாத நாமசூத்திரர்கள் என்பதிலோ, அவர்கள் இன்றளவிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில்தான் வாழ்கின்றனர் என்பதிலோ எந்த அய்யமுமில்லை.
வரலாறும் உண்மையும் உறங்கிவிடுவதில்லை. எம் தேடுதலில் கிடைக்கும் அனைத்து ஆதாரங்களையும் முன் வைக்கிறோம். இது, அடுத்தடுத்த இதழ்களிலும் தொடரும். பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களை அடுத்த இதழில் தரவிருக்கிறோம். இன்றில்லை எனினும், என்றேனும் பழிவாங்கப்பட்ட நாமசூத்திரர்களுக்கு மார்க்சிஸ்டுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். 17 ஆயிரம் உயிர்கள் என்னவாயின என்ற கேள்வி, அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் அடிநாதமாகத் தொடர்ந்து வரும்.