முதல் சோசலிச நாடான சோவியத் யூனியன் சென்று பார்த்து மகிழ வேண்டும் என நீண்ட நாட்களாக விருப்பம் இருந்தது. சோவியத் யூனியனில் பின்னடைவு ஏற்பட்டது. எனவே மிகப் பெரிய சோசலிச நாடான மக்கள் சீனத்திற்கு செல்ல வேண்டுமென்று ஆவல் பிறந்தது. சமீப காலங்களில் சீனாவின் வளர்ச்சி பற்றி வருகின்ற தகவல்கள் சீனாவை பார்க்க வேண்டுமென்ற ஆவலை மேலும் தூண்டியது. தற்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா பற்றிய செய்திகள் வந்தவுடன் அங்கு செல்ல வேண்டுமென்று முடிவு செய்து தனியார் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் 11 நாட்கள் சீனா சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.

11 நாட்கள் சுற்றுலாவாக சென்று மக்கள் சீனம் போன்ற மிகப் பெரிய நாட்டின் அரசியல், சமூக, கலாச்சார அம்சங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இயலாது. மக்கள் சீன அரசு, கட்சி பிரதிநிதிகளுடன் விரிவாக கருத்துப் பரிமாற்றம் செய்தால் தான் மக்கள்சீனம் குறித்த முழுமையான நிர்ணயப்பு செய்ய இயலும்.

ஒரு சுற்றுலா பயணியின் பருந்து பார்வையில் சில விவரங்களை பகிர்ந்து கொள்வோம்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டம்

தமிழ்நாட்டிலிருந்து சீனா செல்பவர்கள் சென்னையிலிருந்து ஹாங்காங் தீவு சென்று அங்கிருந்து சீன நாட்டின் பிராதான நிலப்பகுதிக்கு செல்வது வழக்கம்.

ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியவுடன் வானுயர்ந்த கட்டிடங்களை பார்க்க முடிந்தது. சுற்றுலா வழிகாட்டி அப்பொழுது கூறிய ஒரு தகவல் மிகவும் வியப்பளிப்பதாக இருந்தது. நீங்கள் இப்போது கடலின் மேல் நிற்கிறீர்கள் என்றார். விமான நிலையத்தை விரிவு செய்ய போதிய நிலப்பரப்பு இல்லாததால் கடலை மேவி விமான நிலையம் விரிவாக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை கூறினார்.

சமீப காலங்களில் சீனாவை பற்றி அதன் மகத்தான சாதனைகளை பற்றி பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எதையும் பிரம்மாண்டமாக செய்து மக்களுக்கு அர்ப்பணிக்கும் போது அதைப்பற்றி செய்திகளை வெளியிடுவார்கள். உலகமே வியந்து நிற்கும்.

உலகிலேயே மிக நீளமான கடல் பாலம் கட்டி முடிக்கப்பட்ட செய்தி சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. பீக்கிங் நகரத்தில் இருந்து திபத்திற்கு உலகிலேயே மிக நீளமான, உயரமான ரயில் பாதையை அமைத்தார்கள்.

மக்கள் சீனத்தை பல ஆண்டுகளாக அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையும் அங்கிகரிக்கவில்லை. மக்கள் சீனம் நீண்ட நாட்களாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளாமல் தடுக்கப்பட்டது. காலப்போக்கில் அமெரிக்காவும் ஐ.நா.வும் மக்கள் சீனத்தை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. சீனா உடனடியாக கலந்து கொள்ளவில்லை. அமைதியாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டது. பிறகு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பல நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி அதிக தங்கப்பதக்கங்களை வென்று உலக மக்களை வியக்க வைத்தது.

ஷாங்காய் நகரத்தில் இருந்து விமானநிலையம் செல்ல அதி வேக காந்தரயில் அமைக்கப்பட்டுள்ளது. 30 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் அந்த ரயில் கடக்கிறது. தற்போது ஷாங்காய் நகரத்தில் இருந்து பீஜிங் செல்ல அதிவேக புல்லட் ரயில் அமைக்கப்பட்டுள்ளது. 1300 கி.மீ தூரத்தை 4 மணிநேரத்தில் அந்த ரயில் கடக்கிறது.

எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பாலங்கள், பிளைஓவர்கள் அனைத்தும் பிரம்மாண்டம்.

ஹாங்காங்

ஆங்கிலேயர்கள் 1840ல் ஹாங்காங் தீவுக்கு வந்தார்கள். ஹாங்காங் தீவி தெற்கு சீனக் கடலில் உள்ள இயற்கை துறைமுகம். மீன்பிடித் தொழில் செய்யும் கிராமங்களே அங்கு இருந்தது. இப்போதும் மீன்பிடி தொழில் நவீன முறையில் அபர்தீன் கிராமப் பகுதியில் நடைபெறுகிறது. அன்றைய சீன அரசுக்கு சொந்தமான ஹாங்காங் தீவை 1898ல் 99 வருட குத்தகைக்கு ஆங்கிலேயர்கள் பெற்றார்கள். அந்தப் பகுதியின் சிறந்த துறைமுகமாக தொழில் நகரமாக ஆங்கிலேயர்களால் ஹாங்காங் தீவு உருவாக்கப்பட்டது. 1997ல் குத்தகை முடிந்தவுடன் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து மக்கள் சீன அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சோசலிச நாடான சீனா ஹாங்காங்கில் உடனடியாக அடிப்படை மாற்றங்கள் செய்யாமல் "ஒரு நாடு, இரு சமூக அமைப்பு" என்ற கோட்பாட்டில் அடிப்படையில் படிப்படியாக சோசலிசத்தை நோக்கி மாற்றங்கள் செய்து வருகிறது. நிலப்பரப்பு குறைவாக இருப்பதால் மிக உயரமான மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான இந்தக் குடியிருப்புகளில் அரசு ஊழியர்கள் மற்றும் இதர பகுதியினர் வாடகை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். வியாபாரம், தொழில் செய்யும் தனியார் நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் சொந்தமாக கட்டிடங்கள் வைத்துள்ளனர். சீன நாட்டில் குறைந்த கூலியில் மனித உழைப்பு கிடைப்பதால் பல தொழில்கள் சீனாவுக்கு சென்று விட்டன. ஷாங்காய் சர்வதேச துறைமுகம் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் சிங்கப்பூர், ஹாங்காங் துறைமுகங்கள் பின்னுக்கு போய்விட்டன.

 சுற்றுலா தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சீன அரசு 1998ல் துவங்கி மிகப்பெரிய டிஸ்னி லேன்ட் உருவாக்கி 2003ல் திறப்பு விழா நடைபெற்றது. உலகத் தரம் வாய்ந்த டிஸ்னி லேன்ட்டாக அது திகழ்கிறது. அதே போல் ஷாங்காய் நகரத்திலும் மிக பிரம்மாண்டமான, நவீனமான டிஸ்னி லேன்ட் கட்டப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று இலக்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மாலை வேளைகளில் ஹாங்காங் துறைமுகத்தையொட்டி சொகுசு கப்பல் சவாரி தினமும் நடைபெறுகிறது. உயர்ந்த கட்டிடங்களில் வண்ண மின்விளக்குகள் ஒளிரும் காட்சிகளை பார்த்து மகிழலாம். ஹாங்காங்கின் மிக உயரமான விக்டோரியா பீக் என்ற இடத்திற்கு இழுவை ரயிலில் சென்று தீவின் முழு அழகையும் பார்த்து மகிழலாம். பிரபல சினிமா நடிகர் ஜாக்கிசான் ஹாங்காங்கை சேர்ந்தவர் என்பதை பெருமையோடு பேசுகிறார்கள். அவரது வீட்டை அருங்காட்சியகமாக வைத்து சுற்றுலா பயணிகளுக்கு காட்டுகிறார்கள்.

குயிலின்

ஹாங்காங்கிலிருந்து அருகில் உள்ள மக்காவு நகரத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் குயிலின் நகரத்திற்கு சென்றோம். இது பசுபிக் மகா சமுத்திரத்தில் உள்ள கடற்கரை நகரம். இங்கு நான்குமணி நேர படகு சவாரி நடைபெறுகிறது. அரசுக்கு சொந்தமான படகுகளில் சுற்றுலா துறையினர் அழைத்துச் செல்கின்றனர். படகுகளில் அரசின் செங்கொடி பறக்கிறது. கடற்கரையோரம் உள்ள செங்குத்தான பாறைகளையும் இயற்கைக்காட்சிகளையும் காணலாம். படகிலேயே மதிய உணவும் வழங்கப்படுகிறது. கடலில் மீன்பிடித்து சமைத்து வழங்குவதும் ஒரு சிறப்பு அம்சம். ஆங்காங்கே படகுகள் நிற்கும் போது கடற்கரையோரம் கிராம வாசிகள் பழங்களை வியாபாரம் செய்கின்றனர். விளை நிலங்கள் முழுவதும் அரசுக்கு சொந்தம். விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு பழம் உள்ளிட்ட விலைப் பொருட்களை வியாபாரம் செய்கின்றனர்.

இங்கு சுற்றுலாப் பயணிகள் பொருட்கள் வாங்க சிறிய சிறிய கடைகள் உள்ள மார்கெட் உள்ளது. சீன மக்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகளிடம் விற்கின்றனர். பேரம் பேசி வியாபாரம் நடைபெறுகிறது. மொழி தெரியாவிட்டாலும் பேப்பரில் விலையை எழுதிக் காட்டி பேரம் செய்கின்றனர்.

 மாலை நேரத்தில் அங்குள்ள பூங்காங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. ஆற்றங்கரையோரம் மக்கள் கூடி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர்.

குயிலின் நகரப் கடல்பகுதியில் அரசு சார்பில் முத்துக்குளிக்கும் பணி நடைபெறுகிறது. அரசுக்கு சொந்தமான தொழிற்சாலையில் முத்துகள் பட்டை தீட்டப்பட்டு அழகான அணிகலன்கள் உருவாக்கப்படுகின்றன. விற்பனை மையத்தில் இளம் பெண்கள் நகைகளை அணிந்து பேஷன் ஷோ போல காட்சி நடத்தப்படுகிறது. விற்பனையும் நடைபெறுகிறது. ஆபாசம் இல்லாமல் இந்த விற்பனை நடைமுறையில் உள்ளது.

சீன அரசின் தொல்லியல் துறை சார்பில் பழமை வாய்ந்த குகையும் சுண்ணாம்பு பாறையும் பாதுகாக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றிய ஆமைகளும் காட்சிப் பொருளாக உள்ளது.

சுற்றுலா துறையின் சார்பில் தங்குவிடுதிகள், உணவு விடுதிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சார்பிலும் விடுதிகளும் உணவங்களும் நடத்தப்படுகின்றன.

வழிபாட்டு தலங்கள் எதுவும் காணப்படவில்லை. புத்தர் கோவில்கள் நகரத்தில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே காணப்படுகிறது. அங்கு வரும் மக்கள் கூட்டமும் மிக குறைவு. வழிபாடுகளும் வேண்டுதல் காரணமாக சிவப்பு துணிகளை நம்நாட்டில் போல் மரங்களில் கட்டும் பழக்கமும் இருக்கிறது. வழிப்பாட்டுத் தலங்களில் உடல் ஊனமுற்ற சிலர் உதவி கேட்டு நிற்பதை காணமுடிகிறது.

ஷாங்காய்

சீனாவின் மிகப் பெரிய வர்த்தக நகரம் ஷாங்காய். இந்தியாவிற்கு மும்பை போல சீனாவிற்கு ஷாங்காய் நகரம் என்று கூறப்படுகிறது. ஆனால் மும்பையை விட பல மடங்கு வளர்ச்சியடைந்த சர்வதேச நகரமாக ஷாங்காய் உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச பொருட்காட்சியை முன்னிட்டு பல விரிவாக்கங்களும் புதிய கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்ட்டுள்ளன. விமான நிலையத்தைச் சென்று இறங்கிய உடனேயே பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாலைகளும், மேம்பாலங்களும், பிளைஓவர்களும் கட்டப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங் போலவே மிக உயர்ந்த கட்டிடங்களும் பெருமளவில் உள்ளன.

சீனா பட்டுக்குப் பெயர்போனது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் பட்டு உலகப் புகழ் பெற்றது. அரசுக்குச் சொந்தமான பட்டு உற்பத்தி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டோம். பட்டுப் புழு வளர்த்து அங்கேயே பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது. பலவண்ண பட்டு ஆடைகள் நெய்து விற்பனை மையத்தில் வைத்துள்ளனர். ஒரு மீட்டர் பட்டுதுணி இந்திய மதிப்பில் சுமார் 1500 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. உயர்தரப் பட்டுத்துணிகள் இங்கு வாங்கமுடியும்.

மக்கள் சீனம் தற்பொழுது கடைப்பிடித்து வரும் பொருளாதார கொள்கைகளுக்கு மையமாக இருப்பது ஷாங்காய் தொழில் நகரம் தான். அந்நிய கம்பெனிகள் இயங்கி வரும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இங்கு மிகப் பெரிய அளவில் உள்ளன. இந்தப் பகுதியின் முதல் தர துறைமுகமாக ஷாங்காய் துறைமுகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

மக்கள் சீனத்தில் புரட்சி வெற்றி பெற்ற உடன் தோழர் மாவோ தலைமையில் புதிய ஜனநாயக அரசு உருவானது. நிலப் பிரபுத்துவம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு சோசலிச பாதையில் வளர்ச்சி பெற்றது. சீனப் பொருளாதாரத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல பாய்ச்சல் வேக வளர்ச்சி என்ற அறைகூவல் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கலாச்சார புரட்சிக் காலத்தில் பல தவறுகளும் ஏற்பட்டன. தோழர் டெங்சியோ பிங் தலைமையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. சோசலிச கட்டுமானப் பணிகள் நீண்டகாலம் எடுக்கும். உற்பத்தி சக்திகளை வளர்த்து உற்பத்தி திறனை பெருக்கி சீன நாட்டின் அனைத்து மக்களுக்கும் தேவையான உற்பத்தியை பெருக்க வேண்டியதின் அவசியம் உணர்த்தப்பட்டது. மிக பிரம்மாண்டமான பெரிய பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டுமென்று உணரப்பட்டது.

சீன மக்கள் அனைவருக்குமான உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போது சீன நாட்டின் மிகப் பெரிய சந்தை அன்னிய பகாசுர கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாறும். அல்லது அரசே முன்முயற்சி எடுத்து அன்னிய கம்பெனிகளுக்கு அனுமதி அளித்து சீன அரசின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் உற்பத்தியை பெருக்கி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த இரண்டாவது வழி முறையைத்தான் சீன அரசு தற்போது பின்பற்றி வருகிறது. சீனப் பொருளாதாரம் சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. உலகிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியை உறுதிப்படுத்திய நாடு சீனா மட்டுமே. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா அந்த இடத்துக்கு வந்துள்ளது. மிக விரைவில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை பின்னுக்கும் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோவியத் யூனியனில் பின்னடைவு ஏற்பட்ட பின்னர் 21ம் நூற்றாண்டில் சோசலிசம் எத்தகைய சவால்களை சந்திக்க நேரிடும் என்பதை உலக கம்யூனிஸ்ட் இயக்கம் விவாதித்து வருகிறது. மக்கள் சீனத்தின் அனுபவம் இதில் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கலாம்.

பல பன்னாட்டுக் கம்பெனிகள் ஷாங்காய் நகரத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஷாங்காய் நகரத்தின் விற்பனை மையங்களில் வைத்துள்ளனர். நோக்கியா, சோனி, கேனன், ரோமேக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் குறைந்த விலையில் மக்களுக்கு விற்கப்படுகிறது. ஷாங்காய் நகரத்தின் பிரதான வீதிகளில் அமைந்துள்ள பிரம்மாண்ட விற்பனை கூடங்களில் சீன மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களையும், ஆடைகளையும் வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது.

ஜன்னலைத் திறக்கும்போது காற்றோடு சேர்ந்து சில அழுக்கும் வரக்கூடும் என தோழர் டெங்சியோ பிங் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும். ஷாங்காய் நகரத்தின் பிரம்மாண்ட வீதிகளில் அமைந்துள்ள உணவு விடுதிகள், பொழுது போக்கு மையங்கள் இவற்றை நமக்கு நினைவூட்டுகின்றன. மக்கள் சீன அரசு இவற்றை கணக்கில் கொண்டு செயலாற்றி வருகிறது.

கல்வி - மருத்துவம்

135 கோடி மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் பல ஆண்டுகளாக 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கோட்பாடு அமலாக்கப்பட்டதால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். சுற்றுலா இடங்களிலும், விற்பனை கூடங்களிலும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் வருவதை பார்க்க முடிகிறது. குடும்ப வருமானம் பெருகி வாழ்க்கை தரம் உயர்ந்து சீனக் குழந்தைகள் சிறந்த கல்வியை பெருகிறார்கள். பள்ளிச் சிறுவர்கள் விமானத்தில் சுற்றுலா செல்வதை பார்த்தோம். சுற்றுலா வழிகாட்டி ஒரு செய்தியை சொன்னார். 70ம் ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியிருந்த நிலையில் அவர் படித்தபோது இருந்த அனுபவங்களையும் தற்போது குடும்ப வருமானம் பெருகி பள்ளிக்குச் செல்லும் தன் மகனுக்கு 'ஐ-பேடு' வாங்கித் தந்து இருப்பதையும் பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.

சீன இளைஞர்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வார்த்தெடுத்தது போல் இருக்கிறார்கள். பெண்கள் அரைக்கால் சட்டை மேல் சட்டை அணிந்து காணப்படுகிறார்கள். ஆண்கள் சிலர் முழுக்கால் சட்டையும், சிலர் அரைக்கால் சட்டையும் அணிந்து காணப்படுகிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பொருளாதார நிபுணர் 'மால்தூசியன் கோட்பாடு' ஒவ்வொரு குழந்தையும் 'ஒரு வாயுடன் மட்டும் பிறப்பதில்லை இரண்டு கைகளுடன் பிறக்கின்றன' என்பது சீனாவில் நிரூபனம் ஆகியுள்ளது. சீன மக்கள் சுறுசுறுப்பாக கடும் உழைப்பில் ஈடுபட்டிருப்பதை பார்க்கும் பொழுது அபினுக்கு அடிமையாகி கிடந்தவர்கள் இவர்களா? என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

அக்கு பஞ்சர், மசாஜ் போன்ற வைத்திய முறைகள் சீனாவில் நீண்ட நாட்களாக உள்ளன. தற்போதும் இந்த சிகிச்சை முறை பெருமளவில் நீடிக்கிறது. குயிலின் நகரில் மசாஜ் சிகிச்சை முறை கற்பிக்கப்படும் பயிற்சி மையத்திற்குச் சென்று பார்த்தோம். சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் செய்து மருந்துகளை விற்பனை செய்கின்றனர்.

அதே போன்று ஆங்கில மருத்துவ முறையும் அமலில் உள்ளது. ஷாங்காய் நகரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கான பிரிவில் நவீன கருவிகளுடன் உயர்தர சிகிச்சை தரப்படுகிறது. அங்கு ஆங்கிலம் தெரிந்த மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.

குடியிருப்பு- சாலை வசதிகள்

நாடு முழுவதும் புதிய புதிய குடியிருப்புகளை உருவாக்கி அனைவருக்கும் வீட்டுவசதி ஏற்பாடு செய்துள்ளன. இவற்றில் பெரும்பகுதி அரசுக்கு சொந்தமான குடியிருப்புகள். மற்றவை தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கூட்டுறவு அமைப்புகளுக்கு சொந்தமானவை. தொடர்ந்து புதிய புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் பார்த்தோம்.

எல்லா நகரங்களையும் இணைத்து 8 வழி 6 வழி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. நகரங்களுக்குள் 4 வழிச்சாலை உள்ளது. சாலைகள் சுத்தமாக உள்ளன. போக்குவரத்து சீராக அமைந்துள்ளது. தனி நபர்கள் கார் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசே சுங்கச் சாவடி அமைத்து கார் உரிமையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்கிறது. சாலை ஓரங்களில் நிரந்தரமான விளம்பர போர்டுகள் உள்ளன. அவை சிறு அளவிலும் ஆபாசம் இல்லாமலும் இருக்கிறது.

பீஜிங் நகரத்தில் தலைநகருக்கு உரிய போக்குவரத்து நெரிசல் உள்ளது. இங்கு கார் வைத்துக் கொள்ள வரைமுறைகள் உள்ளன. அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிய பின்னரே கார் வாங்கி பீஜிங் நகரத்தில் பயன்படுத்தலாம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு மாதம் ஒருமுறை குழுக்கள் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது 60க்கு 1 என்ற விகிதத்தில் அனுமதி கிடைக்கிறது.

வரலாற்று சின்னங்கள்

சீன நாடு இந்தியா போல் ஒரு பழமை வாய்ந்த நாடு. பல சாம்ராஜ்யங்களும் மன்னர்களும் இருந்த நாடு. அவற்றுக்குரிய வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாத்து வைத்துள்ளனர். படையெடுப்பில் இருந்து நாட்டை பாதுகாக்க சீன மன்னர்கள் கட்டிய 'பெருஞ் சுவர்' உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. தினமும் அயல்நாட்டு உள்நாட்டு பயணிகள் சுவரை பார்வையிட வருகிறார்கள். இழுவை ரயில் அமைத்து சுவரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 5 இலட்சம் பேர் கூடக்கூடிய 'தியனென்மென் சதுக்கம்' அரச குடும்பத்தினர் வாழ்ந்த தடை செய்யப்பட்ட நகரம். கோடை கால அரண்மனை, மாவோ மியூசியம் முதலியன வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்களாக உள்ளன.

தற்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 90 வது ஆண்டு நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஷாங்காய், பீஜிங் நகரங்களில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் செங்கொடி பறக்கிறது. நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் விளம்பர விளைவுகள் வைத்திருக்கிறார்கள். ஷாங்காய் நகரத்தில் சுற்றுலா பயணிகள் கூடும் ஆற்றங்கரை மைதானத்தில் கம்பீரமாக மாவோ சிலை உள்ளது. தினமும் தொலைக்காட்சில் 90ம் ஆண்டு நிறைவு பற்றிய விளம்பரங்களும், செய்திகளும் ஒளிபரப்பப்படுகின்றன.

ஏராளமான செய்தித்தாள்கள் வெளிவருகின்றன. ஊசூசூ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், செய்திகளும் ஒளிபரப்பப்படுகின்றன. பம்பாய் குண்டு வெடிப்பு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் நிகழும் சம்பவங்கள் குறித்த செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன.

சீன மொழியே எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தேவையான அளவு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

மிக குறுகிய நாட்களில் மக்கள் சீனத்தில் கண்ட சில காட்சிகளை பகிர்ந்துகொண்டேன்.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் சீன நாட்டில் சோசலிசத்தை கட்டுவதற்கான போராட்டத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும், மக்களும் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துவோம்!