காலா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தமிழர் உரிமைப் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் நிலைப்பாட்டை நமக்குத் தெளிவாக மீண்டும் ஒருமுறை அறிவித்திருக்கிறது.

rajini 313தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகளும் மக்கள் போராட்டங்களும் நிலவும் இச்சூழலில், அவைபற்றி எதுவுமே வாய்திறக்காமல் தன்னுடைய படம் வெற்றி அடைய வேண்டும் என்பதை மட்டுமே மனதில் நிறுத்தித் தன்னுடைய பேச்சை நிறைவு செய்திருக்கிறார் “பத்ம விபூஷன் ஸ்ரீரஜினிகாந்த்” அவர்கள்.

போகிறபோக்கில் ‘லிங்கா’ திரைப்படத்தைப் பற்றிப் பேசும் போது தென்னிந்திய நதிகளை இணைப்பதே தன்னுடைய வாழ்நாள் கனவு என்றும் அப்படி நதிகளை இணைத்த அடுத்த நாளே தான் மறைந்தாலும் கவலையில்லை என்றும் சொல்லியிருக்கிறார். தன்னுடைய பேச்சின் நிறைவுப் பகுதியில் விசயத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் “நான் என்ன செய்வது? இன்னும் அதற்கான நாள் வரவில்லை. அப்படி ஒருநாள் வரும்போது தமிழகத்திற்கு நல்ல நேரம் பிறக்கும்” என்று குறிசொல்லி தன்னுடைய பேச்சை முடித்திருக்கிறார்.

தென்னிந்திய நதிகளை இணைப்பதே இலக்கு என்றால் அதற்கான திட்டங்கள், செயல்கள் ஏதேனும் ரஜினிகாந்திடம் உண்டா? தான் அரசியலுக்கு வருவதற்கே இன்னும் நேரம் வரவில்லை என்று சொல்லிவிட்டு நதிகளை இணைக்கப் போவதாகச் சொல்வது எவ்வளவு பெரிய முரண்?

நடக்காத விசயங்களைப் பற்றிப்பேசியே மக்களை ஏமாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. ‘நதிகளை மீட்போம்’, ‘நல்லநாள் வரப்போகிறது’ போன்ற சொற்றொடர்களைக் கேட்டு மக்கள் சலிப்படைந்து இன்று போராட்டக்களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருவதை எதிர்த்து தமிழ்நாடே கொந்தளிப்பில் இருக்கிறது. “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” என்கிற ரஜினிகாந்த் திரைப்பாடல் வரிகளைப் போல தமிழ்நாட்டின் இன்றைய தேவை எதுவென்று கேட்டால் காவிரி மேலாண்மை வாரியம் என்று சின்னக் குழந்தையும் சொல்லும். ஆனால் “மீசை வைத்த குழந்தை” மட்டும் அது தெரிந்தும் அதனைச் சொல்ல மறுக்கிறது. திரைப்படம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓட வேண்டும், விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய் இவையெல்லாம் கண் முன்வந்து போகத்தானே செய்யும்.

கொள்கைகளைக் கேட்டால் தலைதான் சுற்றும், உங்களை “வாழ வைத்த தெய்வங்களான” தமிழர் உரிமைகளுக்காகவாது குரல் கொடுத்திருக்கலாம்.

காவிரியைக் காண நாங்கள் நீதி கேட்டு வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிலரால் மட்டும் தான் கங்கையின் அழகைப் போற்றி வருணிக்க முடியும்.

Pin It