திருவண்ணாமலையில் அமையவிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவச்சிலைக்குத் தடை கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தால் சில நாட்களுக்கு முன்னர் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படும், நீர்நிலைகளுக்குப் பாதிப்பு, பட்டா இல்லை என்று இல்லாத காரணங்களைக் கூறித் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அவ்வழக்கு.

தலைவர்களின் பிறந்த அல்லது நினைவு நாட்களில் அவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்துவது, அவர்களின் சித்தாந்தங்களை நினைவூட்டுவதற்காகவும், அவற்றின்வழி நடப்பதற்காகவுமே. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கும், சிலைகளுக்கும் நெடிய வரலாற்றுத் தொடர்பும், மரபும் உண்டு. ஆனால் வெறும் கல்லால் ஆன சிலைகளைக் கண்டு காவிகள் கலங்குவது தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சிலைகளை உடைப்பேன் என்று கூறுவது, பின்னர் எதிர்வினையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவது, காவி வண்ணம் பூசுவது என்று பெரியாரின் சிலையைக் கண்டு அவர் இறந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிறபோதும் அஞ்சுகின்றனர் கோழைகள். தற்போது வழக்குத் தொடுத்திருப்பதும் அதனோடு சேர்ந்ததுதான். ஆனால் கலைஞர் சிலை குறித்தே ஒரு வரலாறு எழுதப்படும் அளவுக்குப் பெருமிதம் உடையது அவரின் சிலை வரலாறு.

attack on karunanidhi statue1971-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24-ம் தேதி பெரியார் திடலில் அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தந்தை பெரியார், ”யார் யாருக்கோ சிலை இருக்கிறது. செயற்கரிய செயல்களைச் செய்த முதல்வர் கலைஞருக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என இரண்டாவது முறையாகக் ’கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை மேடையில் அமர்ந்திருந்த குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பலர் ஆமோதித்தனர்.

சிலை அமைப்புக்குழுவையும் பெரியார் அதே மேடையில் அறிவித்ததோடு, முதல் நபராக நன்கொடை கொடுத்துப் பணியையும் ஆரம்பித்து வைத்தார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராகப் பெரியார் இருந்தார். தலைவராகக் குன்றக்குடி அடிகளார் இருந்தார். துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இருந்தார்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு 21.9.1975 அன்று எல்.ஐ.சி அருகில் சிலை திறந்து வைக்கப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமையில் குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இறந்தபோது, அ.தி.மு.க.வினர் சிலரால் அச்சிலை உடைக்கப்பட்டது. அப்போது கலைஞர் எழுதினார்.

 உடன்பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத் தம்பி

என் முதுகில் குத்தவில்லை,

நெஞ்சிலேதான் குத்துகிறான்

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!

இந்தப் பெருந்தன்மைதான் திராவிடப் பெருந்தகையாளர் பண்பு. கொள்கைக் குண்றாக் கலைஞரின் மாண்பு. அதனால்தான் அத்தகைய கொள்கையாளரின் சிலையை அண்மையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு திறந்து வைத்தபோது, அதற்கு அவர் பொருத்தமானவர்தானா என்ற கேள்வி கலைஞரை நேசிப்பவர்களிடம் எழுந்தது.

சிலைகள் நமக்கு சித்தாந்தத்தைச் சொல்லிக் கொடுக்கின்றன. சிலருக்கோ அவை அச்சமூட்டுகின்றன. அவ்வளவுதான் வேறுபாடு.

- வெற்றிச்செல்வன்

Pin It