தூத்துக்குடி மக்களின் உரிமைப் போராட்டம், 13 பேர்கள் சுட்டுக்கொலை, அமைதியற்ற சூழலில் மக்கள்.

இந்நிலையில் கையாலாகாத எடப்பாடியும், அவரின் அரசும் காவிரிப் பிரச்சனையைக் கைகழுவிக் கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் ‘ஆணையம்’ ஆகி, அதை 9 பேர் கொண்ட குழு செயல்படுத்தும் என்று மத்திய மோடி அரசு உச்சநீதி மன்றத்தில் கூறியது.

அந்த ஆணையத்தை ஜூன் முதலாம் தேதியான தென் மேற்குப் பருவக் காலத்திற்கு முன்பு அமைத்து, அரசிதழில் வெளியிட்டுத் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என உச்சநீதி மன்றம் ஆணையிட்டது.

ஆனால் இதுவரையும் ஆணையம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் ‘‘பிரதமர் வெளிநாட்டுப் பயணம் சென்றுள்ளதால் ஆணையம் அமைப்பது பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

மோடிக்கு இந்தியாவில் வேலையே இல்லை. எப்போதும் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணி அவர். இந்த ஒரு மனிதரின் ஊர் சுற்றும் செயலுக்காக ஒரு மாநில மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பது என்பது என்ன நியாயம்?

இப்படிப்பட்ட சூழலில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கவிருக்கிறது. அப்படித் தொடங்கிவிட்டால் கேரளா, கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பிவிடும்.

அதற்குள் காவிரி ஆணையம் அமைத்தால், அதன் மூலம் தமிழகத்திற்குத் தண்ணீர் கேட்கலாம். கர்நாடகம் முழுமையாகத் தர மறுத்தாலும் இல்லை என்று சொல்ல முடியாமல் ஓரளவாவது கொடுக்க வேண்டிய நிலை அதற்கு ஏற்படும்.

இதுவரை ஆணையம் அமையவில்லை என்பதனால் இந்தப் பருவ மழையின் பயனாக நிரம்பப் போகும் நீர் முழுவதையும் கர்நாடகம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்.

தமிழக டெல்டா பகுதி முழுவதும் மேலும் வறண்டு போகும் அபாயம் கண்முன் வந்து நிற்கிறது.

இப்படி ஒரு நிலை ஏற்பட்டுத் தமிழர்கள் ‘சோமாலிய’ மக்களின் நிலைபோல் ஆக வேண்டும் என்பதுதான் மோடி அரசின் திட்டமா? அதனால்தான் ஆணையம் அமைக்க முயற்சி செய்ய முடியவில்லையா?

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வில்லை என்றால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆணையம் அமைக்காத காரணத்தினால் உரிய நீர், உரிய நேரத்தில் சாகுபடிக்காக விவசாயிகளின் நிலங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இதுவரை ஏற்படவில்லை.

இவையெல்லாம் முதல்வர் எடப்பாடிக்கும், அவரின் அரசுக்கும் தெரியாதா?

பொதுப் பணித்துறை பொறுப்பு வகிக்கும் எடப்பாடி, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து இதுவரை வாய் திறக்கவே இல்லை.

அதற்கான காலக்கெடு 31 மே மாதத்துடன் முடிந்தும், வாயை முடிக்கொண்டிருக்கிறார் முதல்வர்.

மத்திய மோடி அரசுக்குத் துணையாக தமிழக எடப்பாடி அரசு துணைபோவது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகம்.

மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்!

விரைவில் தூக்கி எறிவார்கள்!

Pin It