'மதச்சார்பின்மை' - 'சோசலிசம்' ஆகிய இரண்டு சொற்களும் இந்திய அரசியல் சாசன முகவுரையில் முன்பு இல்லை, அவை பின்னர் சேர்க்கப்பட்டன. அவற்றை நீக்க வேண்டும் என்று அவசரநிலை பிரகடனம் 50ஆம் ஆண்டு நிகழ்ச்சியின் போது ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கூறியிருந்தார்.

இந்திய அரசியலமைப்பில், 1976 ஆம் ஆண்டு, 42 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ‘சோசலிச, மதச்சார்பற்ற’ என்ற சொற்கள் சேர்க்கப்பட்டன. இதற்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, பல்ராம் சிங் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் சஞ்வீவ் கன்னா, சஞ்சய்குமார் ஆகியோரின் அமர்வு, 42ஆம் சட்டத் திருத்தம் செல்லும் என்று 25-11-2024 அன்று தீர்ப்பளித்தது. ஆனாலும் அவர்கள் விடுவதாக இல்லை.

சோசலிசம், மதச்சார்பற்ற என்ற இருசொற்களின் ஆணிவேர், சமூகநீதி. இந்தச் சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியாரின் நெடிய போராட்டப் பாதையில், களத்தில் நாம் நின்று கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இனக்கலவரம், மதக்கலவரம், சாதிய மோதல்கள், வேல் ஊர்வலம், முருகன் மாநாடு என்று மதத்தை வைத்து சமூகநீதியைப் பிளக்கப் பார்க்கிறது காவிகள் கூட்டம்.

பல்வேறு இனங்கள், மொழிகள், பன்பாடுகள் கொண்ட மக்கள், வேற்றுமையில் ஒற்றுமையைப் பார்க்கிறார்கள் இந்திய ஒன்றியத்தில்.

இந்த ஒற்றுமையில் வேற்றுமையைத் திணிக்கத் தடையாக இருப்பவை மதச்சார்பு இல்லாமை, சோசலிசம்.

காந்தியடிகளின் கருத்துகளில் சில வேறுபாடுகள் இருந்தாலும், அவரின் மதச்சார்பற்ற தன்மையை மறுக்க முடியாது.

அவரைச் சுட்டுக் கொன்றவன் கோட்சே!

காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று நமக்கான பல வழிகள் இருக்கும்போது, மாணவர்கள் ஒருபோதும் ‘கோட்சே கூட்டத்தின்’ வழியில் சென்று விடக்கூடாது, என்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பேசியிருக்கிறர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

இது எதிர்காலச் சந்ததியரான மாணவர்கள் மீதுள்ள அக்கறை என்றால் மிகையில்லை!

- கருஞ்சட்டைத் தமிழர்