“கொறமுழி” யென்றும் “கொறச்சாலம்” என்றும் குன்றத்துக்
குறவரின் வரலாறு அறியா அறிவுக் குருடர்கள்
குறைத்துக் கூறும் பேச்சுக்கள் எங்கள்
உள்ளத்துள் உண்டாக்கும் ஊமை வலிதனை இந்த
உலகிற்கு உணர்த்த உகந்தவர் யாருமில்லை.

சாதிகள் அனைத் திற்கும் பொது வுடைமையே
சமுதாயக் கேடான திருட்டுக் குற்றம் - ஆனால்
ஏதோஅது எமக்கென்றே ஏற்பட்டது போல
எள்ளி நகையாடி ஏளனமாய்ப் பேசுமிச் சமூகம்
எம்நெஞ்சைப் பிளக்கிறதே வேற்கூர்மை வார்த்தைகளால்

வம்சாவளித் திருடராய் வக்கிரமாய் வகைப்படுத்தி
வைத்ததுவே போலீசில் வாழ்நாள் அடமானம்
தமிழனின் தொடக்கமாய்த் தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம்
தாழ்த்தப்பட்ட சாதி வடிவில் தரந்தான் குறுகியதே !

அட்டவணைச் சாதியாய், அட்டவணைப் பழங்குடியாய்ப்
பிற்படுத்தப் பட்டோராய், மிகப் பிற்படுத்தப் பட்டோராய்த்
தப்புத்தப்பாயத் தரம்பிரித்துத் தத்தம்பங் காற்றியதால்
அல்லோல கல்லோலமாய் அலைகிறோமே அநாதைகளாய்
போலீசின் பொய்வழக்கு, அரக்கத்தன அடக்குமுறை
பெண்களுக் கெதிரான பாலினத் தாக்குதல் களால்
நாதியற்றுப் போன நாங்கள் சாதி சொல்ல அச்சப்பட்டு
நாடெல்லாம் ஓடியோடி நாடோடி களாகிப் போனோம்.

பேசிவந்த மொழி மறைத்துப் பிறசாதிப் பெயர் கூறி
ஊருக்கு ஒருவீடாய் ஒளிந்தொளிந்து வாழு மின்னிலை
பாருக்குள் படர்ந்திருக்கும் எச்சாதிக்கும் வரவேண்டாம்.

எழுச்சிமிகு தமிழினத்தை ஈன்றெடுத்த தாயினம்
எங்களது “குன்றத்துக் குறவரினமே” யெனும்
என்றோ மறந்துபோன என்றும் மாறா உண்மைதனைத்
தரணி புகழ் “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” தனில்
தரணிக்கே பறை சாற்றித் தமிழர்தம் தாயினத்தைத்
தனயனாயக் காத்து நிற்கும் கருஞ்சட்டைப் பெருந்தகையீர் !
குன்றத்துக் குறவர் இனத்தின் நன்றிகள் பலகோடி !

- மு.சுந்தரராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), கோவை - 42.

Pin It