22 டிசம்பர், 2022 அன்று மாநிலங்கள் அவையில் உறுப்பினர் கார்த்திகேய ஷர்மா “இராம சேது” பாலம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், 18,000 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வரலாறு என்பதால், அறிவியல் பூர்வமாக எந்த மாதிரியான கட்டுமானம் மன்னார் வளைகுடாவிற்கும், இந்தியாவுக்கும் இடையே இருந்தது என்பதை நிறுவ முடியவில்லை என்று கவலையோடு தெரிவித்திருக்கிறார். கட்டுமானம் ஒன்று இருந்திருந்தால்தானே சொல்வதற்கு? 18000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித வரலாற்றுக்குத் தரவுகள் ஏது? அதில் இராமர் வேறு!

செயற்கைக்கோள் ஆராய்ச்சியின் பயனால் சில சுண்ணாம்புத் திட்டுகள் இருப்பதையும், அது தொடர்ச்சியாக இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதைப் புதிதாகக் கண்டுபிடித்ததைப் போல பெருமை பட்டிருக்கிறார் அமைச்சர். இனி எப்போதும் இதை விடப் பெரிதாக அவர்கள் எதையும் கண்டுபிடித்துவிடப் போவதில்லை.

ஏன் எனில் தீவுகள், தீபகற்பங்களுக்கு இடையே இதுபோன்ற மணல் திட்டுகள் இயற்கையாகவே இருக்கும். மன்னார் வளைகுடாவில் இருப்பதைப் போல ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே இது போன்று பாலங்கள் நீண்ட நெடிய தூரத்திற்கு இருக்கின்றன. அவைகளையும் இராமர் கட்டினாரா என்று பேராசிரியர் தமயந்தி இராஜதுரை என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரி மைக்கேல் பிரவ்கசு, “விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட எந்தவொரு புகைப்படத்திலும் இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி மனிதர்களால் கட்டப்பட்ட எந்த ஒரு பாலமும் அந்த இடத்தில் இல்லை. அதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளதாக முரசொலியில் 29.12.2022 அன்று கட்டுரை தீட்டியுள்ளார் கவிஞர் தமிழ்தாசன்.sethu samuthiram projectநாசாவை மிஞ்சிய ஆய்வுகளைச் செய்து ஒருபோதும் இவர்கள் இராமர் பாலம் இருந்ததை நிறுவப் போவதில்லை. கற்பனைகளை வளர்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் மூலம் சேது சமுத்திரம் திட்ட நிறைவேற்றத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 57 கி.மீ. தொலைவு மட்டுமே இருக்கக்கூடிய மணல் திட்டுகளால், கடல் ஆழம் 10 அடிகள் மட்டுமே உள்ளது. அதனால் தூத்துக்குடித் துறைமுகம் மற்றும் மேற்கிலிருந்து வரக்கூடிய கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வந்தே கீழை நாடுகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்ல இயலும். மணல் திட்டுகளைத் தூர் வாரி, கடலை 12 மீட்டர் ஆழப்படுத்தினால், ஏறக்குறைய 350 கடல்மைல்கள் கப்பல் போக்குவரத்தில் குறையும். 44 விழுக்காடு எரிபொருள் சேமிப்பு, நேர சேமிப்பின் காரணமாக கப்பல் வர்த்தகம் பெருகி, அந்நியச் செலாவணி அதிகமாகி நாட்டின் வருவாயில் 10 விழுக்காடு அதிகரிக்கும் என அந்தத் திட்ட அதிகாரிகள் கணக்கிடுகிறார்கள். எதிர்காலத்தில் இந்த வருவாய் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

1860இல் பிரிட்டிஷ் அரசால் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. அப்போது அதன் திட்டச் செலவு ரூ.9 கோடிகள் மட்டுமே. அதிலிருந்து 1922 வரை எட்டு முறை குழுக்கள் அமைத்தும் திட்டம் நிறைவேறப்படவில்லை. விடுதலைக்குப் பின் மீண்டும் அந்தத் திட்டம் தூசி தட்டி எடுக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டுத் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியும், எந்த முன்னேற்றமும் இல்லை. 2005 இல் மன்மோகன் சிங் ஆட்சி அமைந்தபோது, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர்.பாலு அவர்கள் கலைஞரின் அறிவுரையை ஏற்று வேகமாகச் செயலாற்றத் தொடங்க, சில கி.மீ. தூரப் பணிகளே எஞ்சியிருந்த நிலையில், 2007ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமி மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வழக்கு போடப்பட்டு, இந்தத் திட்டம் முடக்கப்பட்டது.

அதுவரை ஆதம் பாலமாக இருந்த அந்தத் திட்டுகள் “இராமர் பாலம்” என புதிய பெயர் பெற்றன. பா.ஜ.க.வின் முரளி மனோகர் ஜோஷி என்ற பார்ப்பனரும் இவர்களோடு இணைந்து கொண்டார். அதன் பிறகு தடை விலக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் நிலையிலும், 2011இல் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தால், அந்தத் திட்டம் மீண்டும் கைவிடப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது மாநிலங்களவையில் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நிச்சயமாக எந்தத் தகவலையும் சொல்ல இயலவில்லை என, கை விரித்திரிக்கிறார். சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பா.ஜ.க. அரசு இதுவரை இந்தத் திட்டத்தை முடக்கி மக்களைக் குழப்பி வந்ததற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என முழங்கி உள்ளார்.

வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் பனாமா கால்வாயைப் போல, ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய நாடுகளையும் இணைக்கும் சூயஸ் கால்வாயைப் போல மனித உழைப்பால் உண்டாகப் போகும் ஒரு மாபெரும் வர்த்தக இணைப்புதான் சேது சமுத்திரக் கால்வாய்! தமிழர் மட்டுமல்ல மானுடத்தையே தலைநிமிர விடாத பார்ப்பனிய சூழ்ச்சியை, அதன் உள்ளும், புறமுமாகத் தோலுரிப்போம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டின் வருமானத்திற்கும், இந்தியாவின் கடல் மேலாண்மைக்கும் இன்றியமையாததாகும். அதுவே கலைஞரின் கனவும் ஆகும்!

- சாரதாதேவி

Pin It