1

கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை சம்பவம்பற்றி பலர் அறிந்திருக்ககூடும். கோட்டயம் நகரில் 19வயது கன்னியாஸ்திரி அபயா, 27 மார்ச் 1992 அன்று தான் தங்கியிருந்த கான்வென்ட் ஹாஸ்டலின் கிணற்றில் பிணமாகக் கிடந்தார். முதலில் விசாரித்த உள்ளூர் காவல்துறை, இதை தற்கொலை என்று சொல்லி 1993 ஜனவரியில் வழக்கை மூடிவிட்டது. ஆனால் அபயாவுடன் படித்துவந்த கன்னியாஸ்திரிகளின் தொடர் போராட்டத்தினால் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் சென்றது.
 
abhayaமார்ச் 1993இல் தாமஸ் வர்கீஸ் (Varghese P. Thomas, DSP, CBI ) என்ற சி.பி.ஐ அதிகாரி விசாரணையை துவக்குகிறார். வர்கீஸ் தன்னுடைய விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலை என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருடைய மேலதிகாரியோ அவரது விசாரணையில் குறுக்கிட்டு இதை தற்கொலை என்று பதிவு செய்யுமாறு உத்தரவிடுகிறார். இதனை ஏற்க மனமின்றி வர்கீஸ் 30 டிசம்பர் 1993’இல் தன்னுடையை வேலையை இராஜினாமா செய்கிறார். அப்போது அவருடைய பணி ஓய்விற்கு 7 ஆண்டுகள் இருந்தன. 19 ஜனவரி 1994இல் வர்கீஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து, அபயாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும், அந்த உண்மையை வழக்கில் பதிவு செய்ய தனது மேலதிகாரி அனுமதிக்கவில்லை என்பதனால்தான் இராஜினாமா செய்ததாக அறிவிக்கிறார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகுதான், இந்த வழக்கு அகில இந்தியாவின் கவனத்தையும் பெற்றது. இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கபட்டது. கேரள சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டது. வர்கீஸை நேர்மையாக செயல்படவிடாமல் தடுத்த, குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்த அந்த மேலதிகாரியின் பெயர் தியாகராஜன் (V. Thyagarajan, Superintendent of CBI Cochin Unit).
 
தியாகராஜனை சி.பி.ஐயின் கொச்சின் பிரிவிலிருந்தும், அபயா கொலை வழக்கு விசாரணையிலிருந்தும் விலக்குமாறும் அபயா கொலைவழக்கினை தொடுத்த பொதுமக்கள் இயக்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து 3 ஜூன் 1994இல், கேரளாவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தியாகராஜனை அபயா கொலைவழக்கிலிருந்து விழக்குமாறு சி.பி.ஐ இயக்குனரிடம் மனு கொடுத்தனர். இதன் விளைவாக தியாகராஜன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கினை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ துணை இயக்குனர் ஒருவரிடம் வழங்கப்பட்டது.

(DSP’s controversial resignation 
Surprisingly, on 30 December 1993, Varghese P. Thomas resigned from the service of CBI and from the investigation of Abhaya's death. He had seven more years in service to retire. Varghese P.Thomas was a brilliant and honest police officer and for his meritorious services he was awarded the prestigious President's National Medal. He had finally arrived at the conclusion that Abhaya's death was a clear case of murder and he had recorded it as such in the CBI Diary. Subsequently on 19 January 1994, he called a special press conference in Cochin and announced that he had resigned from CBI as his conscience did not permit him to comply with a strong directive given by his superior officer, V. Thyagarajan, the then Superintendent of CBI Cochin Unit, who had asked Varghese P. Thomas to record the death of Abhaya as suicide in the CBI Diary. With this press conference, the case of Sr. Abhaya caught media attention all over India and the matter was strongly debated in the parliament as well as in the Kerala state assembly on several occasions.
 
Moving to High Court
The Action Council filed another Writ petition in the Kerala High Court asking the court to remove V. Thyagarajan from Cochin Unit of the CBI as well as from the investigation. Further on 3 June 1994 all the MP's from Kerala State jointly submitted a passionate petition to K. Vijaya Rama Rao, the Director of the CBI requesting him to disallow Thyagarajan to continue in the Abhaya's murder case. As a result M.L. Sharma, the Joint Director of the CBI, was given charge of the investigation into Abhaya's death.
 
The role of V. Thyagarajan in the distortion of Abhaya's case was apparent in the High Court when Varghese P. Thomas produced an original copy of a report sent by V. Thyagarajan to the Joint Director of the CBI suggesting that further investigation into the death of Sr. Abhaya should be dropped, despite the death being recorded in the CBI Diary as MURDER by Varghese P.Thomas after due consideration of the material facts of the case. As a result, Thyagarajan was transferred to Chennai Unit of CBI.
 
Reference :  http://www.insidekerala.com/n/index.php?mod=article&cat=specials&article=28454&page_order=1&act=print )
 
பல ஆண்டுகளுக்கு பிறகு 2008இல், இரண்டு பாதிரியார்களும் ஒரு கன்னியாஸ்திரியும் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணை இன்னும் கேரள நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

2008இல் CNN IBN தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த தாமஸ் வர்கீஸ், தன்னுடைய மேலதிகாரி தியாகராஜன் இந்த வழக்கினை தற்கொலை என்று முடிக்க நிர்பந்தித்ததை மீண்டும் பதிவு செய்கிறார். அதற்கான அழுத்தம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்தில் இருந்து வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.   
 
2

இராஜிவ் கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு இன்று தூக்கு கொட்டடியில் நிற்கிறார் அண்ணன் பேரறிவாளன். வெடிகுண்டை செயல்படுத்த இரண்டு 9 வோல்ட் பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி.  பேரறிவாளன் காவல்துறை விசாரணையின்போது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான் இதற்கு அரசுதரப்பு சாட்சி. கொடுமையான ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடந்த விசாரணை என்பதை நினைவில் கொள்க. பொதுவாக நீதிமன்ற விசாரணையின்போது கொடுக்கப்படும் வாக்குமூலமே ஏற்றுக்கொள்ளப்படும், காவல்துறை விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலம் செல்லாது. ஆனால் தடா சட்டத்தில் காவல்துறை விசாரணையில் கறக்கப்படும் வாக்குமூலமே போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த வழக்கில் வினோதம் என்னவென்றால், தடா சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், காவல்துறை விசாரணையில் கொடுக்கப்பட்ட வாக்குமூலமே போதுமான ஆதாரம் என்ற தடா சட்டத்தின் ஒரு விதியை மட்டும் ஏற்றுக்கொண்டது. அதுவே இன்று பேரறிவாளன் கழுத்தில் தூக்குக்கயிறாக நிற்கிறது. 
 
தடா சட்டத்தின்படி, காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of police) அந்தஸ்த்தில் இருப்பவர் ஒருவர் முன்னிலையில் கொடுக்கப்படும் வாக்குமூலம் மட்டுமே போதுமான சாட்சியாக கோர்ட் ஏற்றுக்கொள்ளும். அந்தவகையில் பேரறிவாளனிடம் வாக்குமூலத்தைப் பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் வேறுயாருமல்ல, அபயாவைக் கொன்றவர்களை காப்பாற்ற துடித்த தியாகராஜனே தான். பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, இந்த வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த மொத்தம் 17 பேரின் வாக்குமூலத்தையும் "கறந்தவர்" இவரே. இராஜிவ் கொலைவழக்கில் முக்கியமான் அரசுதரப்பு சாட்சி எண்.52: தியாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர், சி.பி.ஐ.  
 
காவல்துறை விசாரணை என்பது என்ன, அதில் பெறப்படும் வாக்குமூலம் என்பது எத்தகையது எனபதை நாம் அறிவோம். அறியாதவர்கள் பேரறிவாளன் எப்படி விசாரிக்கப்பட்டார் என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

"எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் (DECE) என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
 
கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.
 
அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.
 
ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன். 
 
perarivalan_360காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.
 
ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.
 
சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.
 
இதை ஏன் கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.
 
மல்லிகையின் கீழ்தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குத்தான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல்ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.
 
ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.
 
குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.
 
இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.
 
இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது."
 
                                         *************************** 

உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடும் தியாகராஜன் போன்ற நேர்மையற்ற அதிகாரிகள், காவலர்களின் துன்புறுத்தல்களினால் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மடியப்போவது மூன்று உயிர்கள் மட்டுமல்ல; மனித உரிமையும் நீதியும்தான். இந்த நிரபராதிகளைக் காப்பாற்ற நாம் என்ன செய்யப்போகிறோம்?

References :
1. Ex-CBI man alleges Cong hushed up nun murder
http://ibnlive.in.com/news/excbi-man-alleges-cong-hushed-up-nun-murder/70344-3.html
 
2. Frontline - 20-dec-2008 - Twists & turns : The Abhaya case gets a fresh lease of life 16 years after the young nun’s death with the arrest of two priests and a nun.
http://www.hindu.com/fline/fl2526/stories/20090102252604100.htm
 
3. Wikipedia - Sister Abhaya murder case
http://en.wikipedia.org/wiki/Sister_Abhaya_murder_case
 
4. உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி : பேரறிவாளன்
http://perarivalan.blogspot.com/2007/01/blog-post.html
 
5.Judgement by Supreme Court (Justice Quadri)
http://cbi.nic.in/dop/judgements/quadari.pdf
 
6. Judgement by Supreme Court (Justice D P Wadhwa)
http://cbi.nic.in/dop/judgements/wadwa.pdf
 
7. Judgement by Supreme Court (Justice K T Thomas)
http://cbi.nic.in/dop/judgement/thomas.pdf

Pin It