ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் மக்களைச் சந்திக்கிறேன் பேர்வழி என்று வெளியில் வரும்போது, சில உயிர்ப் பலிகள் நடந்து கொண்டே இருக்கின்றன!

vijay 372கூட்டத்தை ஏற்பாடு செய்கிற முறை, கூட்டம் நடத்தப்படுகிற நேரம் இவைகளே, கூட்டத்திற்கு வருகின்றவர்கள் இறந்து போவதற்குக் காரணங்களாக இருக்கின்றன!

பொதுவாக, மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவதுதான் வழக்கம். ஆனால் வசதியாக வாழ்ந்து பழகிய விஜய், படப்பிடிப்பிற்கு வந்து போவது போல, காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு, மாலை வீட்டிற்குத் திரும்பி விட வேண்டும் என்று நினைக்கிறார் போலும்! எனவே பகல் 12 மணி, 2 மணி என்றுதான் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற ஒரிருவரைத் தவிர்த்து, அந்தக் கட்சியில் வேறு யாருக்கும் கூட்டங்களை எல்லாம் ஏற்பாடு செய்து பழக்கம் இல்லை என்று தெரிகிறது! எனவே வந்தவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் கூட இல்லை. மூன்று மணி நேரம், வெயிலில் அவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள். அந்தச் சூழலில் மயக்கம் வருவது இயல்பு தானே!

சேலத்தில் நடைபெற்ற கூட்டத்திலும், மூன்று பெண்கள் உள்பட ஐவர் மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்களுள் சுராஜ் என்னும் வடநாட்டு இளைஞர் ஒருவர் இறந்தே போய்விட்டார்! இனிமேல் அவருடைய இல்லத்தினரை ஆறுதல் பெற்றுச் செல்வதற்காகப் பனையூருக்கு வரவழைப்பார்கள். அவ்வளவு தூரம் போய் அவர்கள் ஆறுதலை வாங்கி வர வேண்டும். அந்தச் சிரமம் வேறு இருக்கிறது!

இந்த நிலையில், திமுக அரசின் நிர்வாகம் சரியில்லை என்று அவர் குறை சொல்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால்,நிர்வாகத்தை அப்படியே கிழித்துத் தொங்கப் போட்டு விடுவாராம்!

முதலில் தன்னுடைய வரி பாக்கியைக் கட்டிவிட்டு அடுத்த கூட்டத்திற்கு அவர் வந்தால் நாமும் பாராட்டலாம். தான் திரைப்படத்தில் வாங்கிய தொகையில் கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்று பிரித்துச் சொல்லிவிட்டால், அவரைப் போற்றி ஒரு மாநாடு கூட நடத்தலாம்!

காசு கொடுத்தால் ஓட்டு வாங்கி விடலாம் என்னும் எண்ணத்தை அவர் முற்றாக அழிக்கப் போகிறாராம். நல்ல செயல்தான். அதே மாதிரி, திரைப்படத்தில் நடித்து விட்டால் போதும், அவரைப் பார்க்க நாட்டில் கூட்டம் கூடும், அரசியலில் உள்ளே நுழைந்து அவர் கட்சி தொடங்கி விடலாம் என்பன போன்ற நிலைகளையும் சேர்த்து அழித்து விடுவார் என்றால், அது சிறப்பாக இருக்கும் !

பனையூரை விட்டு வெளியில் வா வா என்று தன்னை அழைக்கிறார்கள் என்கிறார் விஜய். வேண்டாம், இனி யாரும் அவரை அழைக்காதீர்கள். ஒவ்வொரு முறை அவர் வெளியில் வரும் போதும் எத்தனை இறப்புகள் நேரும் என்று சொல்ல முடியவில்லை. மக்கள் அஞ்சுகிறார்கள்!

- சுப. வீரபாண்டியன்