சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்காலமாக இந்திய சமூகத்தைப் பாழ்படுத்தி அதன் இரத்தத்தை கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூடநம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கவழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டித் தங்கள் உயிர், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்யக்கூடிய பலரைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அறியாமையை அனுகூலப்படுத்திக் கொண்டு அவர்களைப் பல வகைகளில் அடிமைப்படுத்தலை ஒழித்து பகுத்தறிவை வளரச் செய்வதற்காகவே இவ்வியக்கம் பாடுபட்டு வருகிறது. அதன் பலன்களும் திருப்திகரமானவைகளாகவேயிருக்கின்றன. வெகுகாலமாக சுயநலவாதிகளால் அழுத்தப்பட்டு அறியாமையில் ஆழ்ந்திருந்த பாமர மக்கள் மனித உரிமையை உணர ஆரம்பித்துவிட்டார்கள். பரம்பரை வழக்கம் என்பதற்காகவோ “பெரியோர் வாக்கு” என்பதற்காகவோ விசேஷ மதிப்புக் கொடுப்பதில்லை. சுயநலமிகள் கொஞ்சங் கொஞ்சமாக ஒழிந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய மக்கள் தமது நிலையை உணர்ந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. காலப்போக்கும் சீர்திருத்தக்காரர்களுக்கே ஆதரவாயிருக்கிறது. பகுத்தறிவுக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயிருப்பவைகளெல்லாம் மடிந்து கொண்டே இருக்கின்றன.

யாவராலும் விரும்பப்படும் ஒரு பெரிய இலட்சியத்தைக் குறித்து இதுவரை தன்னந்தனியாகவும் புகழை இச்சிக்காமலும் தமக்குத் தோன்றிய முறையில் போராடி வந்த தொண்டர்களெல்லாம் முதன்முதலாக செங்கல்பட்டில் கூடப்போகிறார்கள். ஆகவே செங்கல்பட்டு மகாநாடானது சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் மிக முக்கியமானதாகும். இங்கு நம் முழு ஆற்றலையும் திரட்டி ஒருங்கே எதிர்க்க ஆயத்தமாக வேண்டும். இனி நாம் தனிப்பட்ட ஒரு மனிதனின் முயற்சியிலாவது சில்லரை வெற்றிகளிலாவது திருப்தியடைந்துவிடக்கூடாது. இனிச் செய்ய வேண்டிய காரியங்களை ஜாக்கிரதையாக ஓர்ந்து நமக்கிருக்கும் ஆள்வலி, தோள்வலி, பொருள்வலி ஆகியவைகளைச் சரியாகக் கணக்கெடுத்து எல்லா அம்சங்களையும் கொண்ட சரியான ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும். மகாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகளை, முரட்டுத்தனமான பயனற்ற விவாதங்களில் பொழுது போக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். வாய் வேதாந்தமானதும் வார்த்தைகள் நிரம்பியதுமான தீர்மானங்கள் செய்வதில் பயனில்லை. வாய் வேதாந்தங்களினாலும் இனிய வசனங்களினாலும் ஏமாந்து மோசம் போனவர்களைப் பார்த்து நாம் பயனடைவோம். நம் தீர்மானங்கள் எல்லாவித இயற்கை உணர்ச்சிகட்கும் தத்துவங்கட்கும் ஏற்ற முறையில் குறிப்பாகவும் துரிதமாகவும் நடைபெறக்கூடியவாறு வகுக்கப்பட்டு இருக்க வேண்டும். இக்காலத்தில் நம் நாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டில் இவ்வுணர்ச்சி தலைசிறந்து விளங்குகிறது. எனவே இவ்வுணர்ச்சியை முறையாகவும் சீராகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டிய வழிகளைக் கவனிப்போம்.

நம் லட்சியம் இன்னது என்பது வெள்ளிடைமலை. எனவே நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. நடைமுறையின் முற்போக்கு நடத்துவிப்பவருக்குத் தக்கபடியும் கால தேசவர்த்தமானங்களுக்கு ஏற்றபடியும் இருக்கும். எனினும் முன்னேற்றத்தின் போக்கு ஸ்திரமானதே. அதாவது ஜாதிபேதம், பிறவியினால் உயர்வு தாழ்வு, சமஸ்காரம், மறுபிறவி, அவதாரம், சிலை வணக்கம். அதன் அண்ணனான புரோகிதம், மதச்சின்னம், சடங்குகளாகியவைகளை நாம் சீர்திருத்தமாகிய புதுக்கட்டடத்தைக் கட்டுமுன்னரே இடித்துத் தள்ளிவிட வேண்டும். பிறவியினால் உயர்வு உண்டு என்னும் எண்ணம் மக்கள் மனத்தினின்று நீங்கினாலொழிய தீண்டாமையையொழித்தலும் பெண் மக்கள் முன்னேற்றமும் முடியாதவை. பிறவியினால் உயர்வு தாழ்வு என்னும் பொய்க் கொள்கையே ஜாதிப் பாகுபாட்டிற்கு இடங்கொடுத்தது. ஆண், பெண்ணிலும் மேம்பட்டவன் என்னும் அகம்பாவமானது பெண்களைக் கோஷாக்களாகவும் சொத்துரிமையற்றவர்களாகவும் ஆண்களுடைய சொத்துக்களாகவும் ஆக்கியிருக்கிறது.

சம்ஸ்காரங்கள் கலியாணத்தைக் கேலிக்கூத்தாக்கி இளமையின் சிறப்பை நாசமாக்கிவிட்டது. மறுபிறவி, அவதாரங்கள் என்னும் கொள்கைகள் மக்களை நிரந்தரமான சோம்பேறிகளாக ஆக்கிவிட்டன. எனவே நம் மக்களுக்குள் மனித உணர்ச்சியை எழுப்ப வேண்டுமானால் நாம் அக்குருட்டு நம்பிக்கைகளின் மூலகாரணங்களை வேரோடு களைய வேண்டும். நம் மக்கள் பழைய சின்னங்களையும் சடங்குகளையும் மந்திரங்களையும் பின்பற்றி நம்பிக்கொண்டிருக்கும் வரை எந்த இந்தியனும் பிற நாட்டாருடன் சம உரிமைக்குப் போராட முடியாது. இந்த அறிவு ததும்புங் காலத்திலுங்கூட வெட்கமின்றித் தம் நெற்றிகளில் மதச்சின்னமணிவதைப் பார்க்க விந்தையாயிருக்கின்றது. உயர்வைக் குறிப்பதாகச் சொல்லப்படும் தோள்களில் தொங்கும் பூணூலானது அணிந்திருப்பவனின் மனிதத்தன்மை அற்றத்தன்மையைத் தெளிவாய்க் குறிக்கிறது. ஓமம், திவசம், பிறப்பு இறப்பு முதலிய காலங்களில் சொல்லப்படும் மந்திரங்களும் மனக் கண்ணைக் கெடுத்து மனிதனை அஞ்ஞான இருளில் ஆழ்த்துகிறது. ஒரு நாகரிகமுற்ற சமூகமென்றால் சடங்குகளுக்குத் தண்டனை விதித்தாக வேண்டும். இந்த மாதிரிக் கொடிய மோசம் செய்கிறவர்களைத் தீயிலிட்டுக் கொளுத்தினாலும் தக்க தண்டனையாகாது. நம் உற்சவக் காலங்களில் நடக்கும் குடிகாரக் கலகங்களும், அசிங்கங்களும், ஆபாசங்களும் எந்தக் காலத்திலும் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. திருவிழாக்கள் தொலைந்து உடல்நலத்திற்கும் மனோநலத்திற்கும் வேண்டிய வசதிகள் ஏற்பட வேண்டும்.

சிலை வணக்கந்தான் எல்லாத் தீமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது. நாட்டின் மதிப்பைக் காப்பாற்ற எண்ணமுடைய ஒவ்வொருவனும் கற்சிலைகளைத் தகர்த்துச் சிலைகளையுருக்கி அவ்வுலோகத்தைக் கொண்டு ஆயுதங்களும் இயந்திரங்களும் செய்விக்க வேண்டும். மத சம்பந்தமாக விடப்பட்ட சொத்துக்களெல்லாம் நாட்டின் நலத்திற்கு உபயோகப்படுத்தப்பட வேண்டும். மடங்களைப் பள்ளிக்கூடங்களாகவும் கல்லூரிகளாகவும் மாற்ற வேண்டும். கோவில்கள் ஆஸ்பத்திரிகளாக வேண்டும். புரோகிதரை நீக்க வேண்டும். ‘நரகத்திற்கு’ அஞ்சக் கூடாது. சோதிடர், குறிக்காரர், மந்திரவாதி முதலியவர்களைத் தண்டிக்க வேண்டும். சமஸ்கிருதத்தையொழித்து வேதங்களையும் புராணங்களையும் படிப்பதைத் தடுக்க வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ள மொழிகளை விருத்தி செய்து விஞ்ஞான அறிவையும் தொழில் ஞானத்தையும் பெருக்க வேண்டும். சோம்பேறிப் பாப்பானுக்குச் சோறு போடுவதைத் தடுத்து, வேலையற்றவருக்கு வேலை கொடுத்து, கிழவர்களுக்கு ஜீவனோபாயம் அளித்துக் காப்பாற்ற வேண்டும். ஒருவனே உழைப்பது என்பதை நீக்கி நாட்டின் வருவாயை நீதியாக அனைவருக்கும் பங்கிட வேண்டும். ஏகபோக உரிமைகளையொழித்துத் தன்னாட்சி முறையில் கைத்தொழில்கள் தாராளமாக விருத்தியாக ஏற்ற சாதனம் ஏற்படும்படியான பொருளாதார நிலையையொட்டியே ஒரு திட்டம் நிறுவ வேண்டும்.

இதில் குறிப்பிட்டுள்ளவை மட்டும் போதுமானதென்று நான் சொல்லவில்லை. ஆனால் நம் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள முக்கியமான அம்சங்களை மட்டும் இங்குக் குறிப்பிட்டிருக்கிறோம். நம் முன்னேற்றத்திற்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் அனைத்தையும் தடுத்து ஓங்கக் கூடிய தைரியமும் உறுதியுமுள்ள ஒரு அமைப்பை உண்டுபண்ணுவோமானால் தான் இச்செங்கற்பட்டு மகாநாட்டின் நோக்கம் பயன்பெற்றதாகும்.

“குடிஅரசு” - “ரிவோல்ட்” தலையங்கம் - மொழிபெயர்ப்பு, 17.02.1929

Pin It