தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படும் என சட்டமன்றத்திலேயே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், அரசு நிலங்கள் ஆகியவை தலித் மக்களிடமிருந்து மிரட்டப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலங்களையும் தமிழக முதல்வர் மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர் எடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள்.

மதுரையில் உள்ள எவிடென்ஸ்(சாட்சியம்) என்ற அமைப்பு தமிழகத்தில் உள்ள மதுரை. திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், நாமக்கல், கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், ஆகிய 13 மாவட்டங்களில் நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித் மக்களை நேரடியாக சந்தித்து ஆய்வு நடத்தியுள்ளதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது நிலமுள்ள தலித்துகள்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலித்துகளில் தற்போது நிலம் உள்ள தலித்துகளின் எண்ணிக்கை 34 சதவீதமாகும். நிலமற்ற தலித்துகளின் எண்ணிக்கை 66 சதவீதமாகும். நிலம் இருக்கக்கூடிய தலித்துகளில் 10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர் 3 பேர் மட்டுமே. 6 லிருந்து 10 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே. 1 லிருந்து 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் 28 பேர். 51 சென்ட் முதல் 99 சென்ட் நிலம் வைத்திருப்பவர்கள் 7 பேர். அதிகபட்சமாக 10 சென்ட்டுக்குள் நிலம் வைத்திருப்பவர்கள் 48 பேர். நிலம் இருப்பவர்களில் 50 பேர் வீட்டுமனை வைத்திருப்பவர்கள். நன்செய் நிலம் உள்ளவர்கள் 13 பேர். புன்செய் நிலம் உள்ளவர்கள் 32 பேர். நிலம் வைத்திருக்கக்கூடிய 99 தலித்துகளில் 45 பேருக்கான நிலம் அரசால் வழங்கப்பட்டதாகும். இவற்றில் பஞ்சமி நிலம் வைத்திருப்பவர்கள் 12 பேர். தொகுப்பு வீட்டிற்கான நிலம் வைத்திருப்பவர்கள் 10 பேர். சிறப்பு திட்டங்களால் நிலம் பெற்றவர்கள் 12 பேர்.

தலித்துகளும் நிலஉரிமை மீறல்களும்

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளும் நில உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களில் 247 பேர் (82 சதவீதம்) சாதி இந்துக்களாலும், 7 பேர் (1.7சதவீதம்) சாதி கிறிஸ்துவர்களாலும், தனியார் நிறுவனங்களால் 21 பேரும் (7.5 சதவீதம்), திருச்சபையால் 5 பேரும் (1.7 சதவீதம்), அரசால் 19 பேரும் (6 சதவீதம்) பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 நபர்களில் 17 பேர் (5 சதவீதம்) 10 ஏக்கருக்கு மேல் நிலத்தை பறிகொடுத்தவர்கள். 170 பேர் (56 சதவீதம்) 1 - 5 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்தவர்கள். 10 சென்ட்டுக்குள் நிலத்தை பறிகொடுத்தவர்கள் 53 (18 சதவீதம்). நிலம் பறிக்கப்பட்ட ஆண்டு ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 தலித்துகளில் 1970க்கு முன்பு 80 தலித்துகளின் நிலம் பறிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. 1970 லிருந்து 1980 இடையே 59 தலித்துகளின் நிலமும், 1981 லிருந்து 1990 இடையே 44 தலித்துகளின் நிலமும், 1991 லிருந்து 2000 ஆம் ஆண்டு இடையே 41 தலித்துகளின் நிலமும் பறிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து 2010 இடையே 76 தலித்துகளின் நிலம் பறிக்கப்பட்டள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தலித்துகளின் நிலம் பறிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

நில உரிமையால் பாதிக்கப்பட்ட 300 தலித்துகளில் 195 தலித்துகளின் நிலம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. 90 தலித்துகளின் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. மற்றவர்களுக்கெல்லாம் நிலம் தானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

குறைந்த விலை கொடுத்து நிலத்தை பறித்தவர்கள் 93 பேராவார்கள். பொருளுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 42. கடனுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 98. வட்டிக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 40. நிலத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து வழி தடங்கலை மறித்து அதன் மூலம் நிலத்தை விற்க நிர்பந்திக்கப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 78. அரசு நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 16. தனியார் நிறுவனங்களுக்காக நிலத்தை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 19 பேராவார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் 30 தலித்துகள் கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானியங்களுக்காக நிலத்தை பறிகொடுத்துள்ளனர். சாராயம், கள் போன்ற மதுபானங்களுக்காக 5 தலித்துகள் நிலத்தைப் பறிகொடுத்துள்ளனர். உணவுக்காக 5 தலித்துகள் தங்கள் நிலத்தை பறிகொடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், தேவிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதனுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம் ரூ.300 கடனுக்காக பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு வேடசந்தூர் நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவருக்கு 1985ம் ஆண்டு தமிழக அரசு 3 ஏக்கர் 40 சென்ட் நிலம் கொடுத்துள்ளது. இந்நிலத்தை கடந்த 1994ம் ஆண்டு 8 படி கம்புக்காக சாதி இந்து ஒருவர் ஏமாற்றி பறித்துள்ளார். இம்மோசடி குறித்து தற்போது பழனி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விழுப்புரம், மேல்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேனி. இவருக்கு தமிழக அரசு கடந்த 1965ம் ஆண்டு 4 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. இந்நிலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாராயத்திற்காக பறிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் என்று கூறப்படுகிறது.

விழுப்புரம், குதிரைசந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாயி. இவரது 4 ஏக்கர் நிலத்தை 5 படி தானியம் மற்றும் ரூ.100 கொடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்டுள்ளது. இதே போன்று முருகன் என்பவரது நிலமும் இதே கிராமத்தில் சாதி இந்துக்களால் பறிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல், சின்னகரட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான அரசு கொடுத்த 60 சென்ட் நிலத்தில் 15 சென்ட் நிலத்தை ஒரு பஞ்சாயத்து தலைவர் 2005 ஆம் ஆண்டு பறித்துள்ளார். தற்போது இந்த நிலம் சாதி இந்துக்களின் பொதுப் பாதைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலப்பறிப்பு தொடர்பான வழக்கு பழனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாமக்கல், குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாத்தாவிற்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தை அப்பகுதி சாதி இந்துக்கள் ஊர் மயானம் அமைப்பதற்காக இலவசமாக கேட்டு மயானம் அமைத்துள்ளனர். இவரது நிலம் மட்டுமல்லாமல் சிலரது சாதி இந்துக்களின் நிலம் ஊர் மயானம் அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்மயானத்தில் தலித்துகளுக்கு பிணம் புதைக்க அனுமதியில்லை. 65 சென்ட் நிலத்தை கொடுத்த ராஜேந்திரனின் உறவினர்களோ சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிணம் புதைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுங்குன்றம் தாலுகா, பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் உள்ளிட்ட 50 பயனாளிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலத்தினை தமிழக அரசு கடந்த 1963ம் ஆண்டு வழங்கியுள்ளது. இந்நிலங்கள் அனைத்தும் சாதி இந்துக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த 2009ம் ஆண்டு நியாயம் கேட்கச் சென்ற இப்பகுதி தலித் மக்கள் மீது தாக்குதல் நடந்தது மட்டுமல்லாமல் போலீசாரால் பொய்வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் பெண்ணான காட்டேரியம்மாளுக்குச் சொந்தமான 50 சென்ட்டுக்கு மேலான நிலம் குறைந்த விலைக்கு பறிக்கப்பட்டுள்ளது.. இவ்வழக்கு தற்போது தில்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி, பெரியகுறவக்குடி கிராமத்தைச் சேர்ந்த 74 தலித் மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு வீடு கட்டுவதற்கான நிலம் வழங்கியுள்ளது. ஆனால் இதுநாள் வரை தமிழக அரசு வழங்கிய நிலத்தில் தலித் மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதி சாதி இந்துக்கள் தத் மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் அம்மக்களை மிரட்டியும் தாக்கியும் வருகின்றனர். இதேபோன்று உசிலம்பட்டி அருகில் உள்ள சொக்கதேவன்பட்டி கிராமத்தில் 51 தலித் குடும்பத்தினருக்கு 2002ம் ஆண்டு தமிழக அரசு நிலம் வழங்கியிருக்கிறது. இப்பகுதி சாதி இந்துக்களும் தலித்துகளுக்கு நிலத்தை கொடுக்காமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், வள்ளியம்மை நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோரும் கடனுக்காக சாதி இந்துக்களிடம் நிலத்தை பறிகொடுத்துவிட்டு இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மாத காலம் டீ சாப்பிட்ட கடனுக்காக தலித் ஒருவரின் இவரது 1 ஏக்கர் நிலம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சாதி இந்து ஒருவரிடம் காதணி விழா நடத்துவதற்காக தலித் ஒருவர் கடன் கேட்டிருக்கிறார். சுமார் 20 ஆயிரம் செலவழித்த சாதி இந்து தலித்துக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தை எழுதி வாங்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நடந்துள்ளது.

இதுபோன்ற பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருவது ஆய்வில் தெரிய வருகிறது. தலித் மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்டு சாதி இந்துக்கள் ரூ.14 முதல் 6 அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை தத் மக்களிடம் பணத்தை கொடுத்து நிலத்தை பறித்திருப்பது தெரிய வருகிறது. ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 300 சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது பல கோடி சொத்துக்களை தலித்துகள் இழந்திருக்கிறார்கள். சாதி இந்துக்களின் தந்திரத்தால் நிலத்தை பறிகொடுத்த 300 தலித்துகளில் 27 தலித்துகள் பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கிடைத்துள்ளது. பறிக்கப்பட்ட நிலங்களில் தற்போது 182 தலித்துகளின் நிலம் சாதி இந்துக்களின் விளைநிலமாக உள்ளன. 48 தலித்துகளின் நிலம் குடியிருப்பாக மாறியுள்ளது. 5 பேருக்கு சொந்தமான நிலங்கள் தொழிற்சாலையாகவும், 4 பேருக்கு சொந்தமான நிலங்கள் அரசு அலுவலகங்களாகவும், 3 பேருக்கு சொந்தமான நிலங்கள் சாலைகளாகவும், 5 பேருக்கு சொந்தமான நிலங்கள் கோவில்களாகவும், 62 பேருக்கு சொந்தமான நிலங்கள் தரிசுகளாகவும், 4 பேருக்கு சொந்தமான நிலங்கள் வர்த்தக மையங்களாகவும், ஒருவருக்கு சொந்தமான நிலம் விமான நிலையத்திற்கும் மற்றொருவருக்கு சொந்தமான நிலம் மருத்துவமனைக்கும் பயன்பட்டு வருகிறது.

நிலங்களும் வன்கொடுமைகளும்

தலித்துகள் நிலம் வைத்திருந்தபோது சாதி இந்துக்களால் 240 தலித்துகள் தங்கள் மீது வன்கொடுமை நடந்துள்ளது. நிலஉரிமையால் 5 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு தலித் பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 146 தலித்துகள் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு இழிவாகப் பேசப்பட்டுள்ளனர். 45 தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நிலத்தை விற்க 124 தலித்துகள் மிரட்டப்பட்டுள்ளனர். குடியிருக்க முடியாமல் அவதிப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 59. நில உரிமையால் கல்வியைப் பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 68, வேலையை பறிகொடுத்த தலித்துகளின் எண்ணிக்கை 35. நில உரிமையால் 38 தலித்துகள் கட்டப்பஞ்சாயத்தால் தண்டனைக்கு உள்ளானவர்கள்.

நிலஉரிமை மீறலுக்கு எதிரான சட்டத் தலையீடு

பல்வேறு கொடுமைகளை தலித்துகள் சந்தித்தாலும் 65 சம்பவங்களுக்கு மட்டும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்கப்பட்ட 65 சம்பவத்தில் கூட 15 சம்பவத்தில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வழக்குகள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, 2 வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டள்ளனர். தற்போது நிலம் குறித்து நீதிமன்றத்தில் 38 வழக்குகள் நடந்து வருகின்றன. இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக 2 வழக்குகளும், 5 ஆண்டுக்குள் 18 வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.

தமிழகத்தில் எங்கலெல்லாம் பஞ்சமி நிலங்கள் உள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதுடன், பஞ்சமி நிலம், தலித் மக்களுக்கு அரசு கொடுத்த நிலம், தலித் மக்களின் சொந்த நிலங்கள் போன்றவற்றை பறித்த நிலைகள் குறித்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் குறைதீர்ப்பு கமிட்டி மூலமாக உண்மைகளை கண்டறிந்து அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த நீதி வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளையும் ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)