மதச்சார்பின்மை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் இடம் பெற்று இருக்கிற, இந்திய அரசியல் கட்சிகளாலும் முன்மொழியப்படுகிற ஒரு கோட்பாடு! ஆனால் பிற மதத்தினரைத் தாக்குவதும், அழிப்பதும்தான் இன்று இந்தியாவை ஆளும் கட்சியின் நிலைப்பாடு!

அந்த நிலைப்பாடும், அதன் கோர முகமும் அவ்வப்போது இந்தியாவில் வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றன! அண்மையில், கிறித்துவ மக்கள் கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்து மத வெறியர்கள், தேவாலயங்களை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை விற்பனை செய்பவரைக் கூட தாக்கித் தங்களின் வீரத்தை வெளிக்காட்டி உள்ளனர்!hindutwa attack on christiansஎல்லாவற்றையும் தாண்டி, பார்வை இல்லாத ஒரு பெண்ணை அந்தக் கும்பல் அடித்து தாக்கும் கோர நிகழ்வை வலையொளிகளில் பார்க்கும்போதே நம் மனம் கலங்குகிறது! மதச்சார்பின்மையை விடுங்கள். ஜனநாயகக் கோட்பாட்டினைக் கூடப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், அடிப்படை மனித நேயமே இல்லாத ஒரு வன்முறைக் கூட்டம், இந்த நாட்டை ஆள்கிறது என்பதும், பல பகுதிகளில் பரவிக் கொண்டிருக்கிறது என்பதும் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்!

இந்த அராஜகக் கும்பலிடம் பாடம் கற்றதாலும், பணம் பெற்றதாலும்தான், இங்கே சில கைக்கூலிகள், கடப்பாரை கொண்டு திராவிடக் கட்டிடத்தை இடிப்பேன் என்றும், அண்ணா, கலைஞர் நினைவிடங்களைத் தகர்த்து விடுவேன் என்றும் கூச்சல் போடுவதைப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டை மட்டுமாவது இந்த மதவெறிக் கூட்டத்திடமிருந்து காப்பாற்ற வேண்டுமானால், பாஜகவும், அதன் கைக்கூலிகளும் தமிழ்நாட்டில் சிறு அளவில் கூட கால் ஊன்றி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது!

குறிப்பாக, வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது! பாஜகவை மட்டுமல்லாமல், அதனோடு கூட்டணி வைத்திருக்கும் அடிமைக் கட்சியையும், மறைமுகமாக திரள் நிதி வாங்கிக்கொண்டு சதித் திட்டம் தீட்டும் அழிவு சக்திகளையும் தேர்தலில் மக்கள் முற்றுமாகப் புறக்கணிக்க வேண்டும்!

இல்லையேல், தமிழ்நாட்டிலும் அடுத்த ஆண்டு, தேவாலயங்கள் நொறுக்கப்படும், பள்ளிவாசல்கள் தகர்க்கப்படும்!

- சுப.வீரபாண்டியன்