இந்தியாவின் வரலாற்றையும், கலாச்சாரப் பெருமையையும் கண்டறிய எவ்விதம் ஐரோப்பியர் உதவினரோ, அதுபோலவே, திராவிடக் கலாச்சார மேம்பாட்டை எடுத்து வைக்கவும் அவர்களே பெரிதும் உதவினர்.
குறிப்பாக கிருத்துவ பாதிரியார்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தபோது, அவரவர்கள் தாய்மொழியில் மதத்தைப் போதிக்க வேண்டும் என்கிற குறிக்கோள் காரணமாகத் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் காட்டிய ஆர்வம் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்றதொரு ஆதாரச் சூழ்நிலையை உருவாக்கிற்று.
தமிழில் அதிகம் ஈடுபாடு காட்டிய கிருத்துவப் பாதிரியார் இராபர்ட்-டி-நோபிலி (Robert Di Nobili, 1577 - 1656) ஆவார். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைப் பகுதியில் வாழ்ந்த இவர், கிருத்துவ மதப் பிரச்சாரத்திற்காக தமிழில் உரைநடை நூல்களை இயற்றினார். தமிழையும், வடமொழியையும் கற்ற முதல் ஐரோப்பியர் இவரே.
அடுத்துக் குறிப்பிட்டுக் கூறவேண்டியவர், வீரமாமுனிவர் என்று தன்பெயரை மாற்றிக்கொண்ட, மதப்பணியோடு தமிழ்ப்பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி (Constantius Beschi, 1680-1743) ஆவார். 1711ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் மதுரையை வந்தடைந்த இவர் பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கணம், இலக்கியம் கற்றார்.
நொபிலி போல் அல்லாது தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை. அக்காலத்தில் எ- ஏ, கெ-கே, கொ-கோ என்று எழுதும் வழக்கமில்லை. எ, ஒ எனும் உயிர் எழுத்துகளையும், இவ்வுயிர் எழுத்துகள் ஏறிய மெய்யெழுத்துகளையும் எழுதி, அவற்றின்மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும், புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது. இவர்தான் அதை மாற்றி எ-ஏ, கெ-கே, கொ-கோ என்று எழுதும் மரபைப் புகுத்தித் தண்டமிழ் மொழிக்கு அதுவரை யாரும் செய்யாதப் பெருந்தொண்டு செய்து அழியாப் புகழ்பெற்றார்.
அதுமட்டுமின்றி தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல்நூலாக விளங்கும் "சதுரகராதி" இயற்றித் தமிழகராதியின் தந்தை என்ற புகழையும் பெற்றார்.
திருக்குறளின் அறத்துப் பாலையும், பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார். ஐந்திலக்கணங்களைக் கூறும் "தொன்னூல்", தமிழ்ப் பேச்சு மொழியைப் பற்றிய "கொடுந்தமிழ் இலக்கணம்" ஆகியவை இவர் இயற்றிய நூல்கள்.
அவர் அன்று உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர் பலர் தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் தொடர்ந்து ஆய்வு நடத்திடப் பேருதவியாய் இருந்தது.
அயர்லாந்தில் பிறந்த அன்னிபெசன்ட் அம்மையார் எப்படித் தென்னிய நலவுரிமைச் சங்கம் தோன்றுவதற்கான உடனடிக் காரணங்களில் ஒன்றாக இருந்தாரோ, அதுபோலவே அயர்லாந்தில் பிறந்த இராபர்ட் கால்வெல் (Robert Galdwell, 1819-1891) வேறு எந்த ஐரோப்பியரையும் விட திராவிட மறுமலர்ச்சிக்கு ஆதார சுருதியை தனது ஆய்வின் மூலம் உருவாக்கிக் கொடுத்தார்.
1838இல் சென்னை வந்திறங்கி, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் நடத்தி, தமிழ்மொழியில் மூழ்கி, நமது மொழியிலும், வரலாற்றிலும் நிபுணர் என்கிற பெயரைப் பத்தாண்டுகளில் பெற்றார்.
அவர் 1855 இல் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" ( A Comparative Grammar of the Dravidian South Indian Family of Languages) எனும் அவரது ஒப்பற்ற ஆய்வு நூல் மொழியியலுக்குத் தரப்பட்ட உயர்ந்த காணிக்கை மட்டுமல்ல, திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய மாமருந்து மட்டுமல்ல, தூங்கிக் கிடந்த திராவிட மக்களுக்கு அளிக்கப்பட்ட கண்திறப்புச் சிகிச்சையாகும்.
அது வெறும் மொழி இயல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, தமிழ்-திராவிட இனவரலாறும் அதில் கூறப்பட்டிருந்தது.
திராவிட மொழிகளின் தொன்மை, ஆரியர் வருகைக்குப் (அதாவது கி.மு.1600 இக்கும்) பல நூற்றாண்டு கட்கு முன்னென்று தெளியலாம்" என்று அவர்தனது ஆராய்ச்சி முடிவினைக் கூறினார்!
(முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு" (பக்கம்: 171-173))