நாக்பூர், காளிதாஸ் சமஸ்கிருத கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், 'இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதம்' என்று பேசியிருக்கிறார். இது சரியா? தவறா? பார்ப்போம்.
சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழியென்று சொன்னாலும்; அது, அவர்களின் நேரடித் தாய் மொழியில்லை. இந்துகுஷ், கைபர், போலன் கணவாய்களின் வழியாக, சிறுசிறு கூட்டங்களாக மாடுகள் மேய்த்துக் கொண்டு சிந்துநதிப் பகுதிகளுக்குள் நுழைந்தவர்கள் ஆரியர்கள். அப்போது அவர்கள் பேசிய மொழி 'ஆர்ய' என்பதாகும்.
ரிக்வேதத்தில் 'அர்ய' என்ற சொல் 88 இடங்களிலும், 'ஆர்ய' என்ற சொல் 31 இடங்களிலும் வருவதாகச் சொல்லும் டாக்டர் அம்பேத்கர், அச்சொல் அம்மக்களின் மொழியடிப்படையில் இருந்ததாகக் கருதுகிறார்.
"குருதித் தொடர்பைப் பொறுத்தவரை ஆரிய இனம் என்று எதுவும் இல்லை. ஆரிய என்பது மொழியைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை" என்று மார்க்ஸ் முல்லர் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ஆக, ஆரியர்கள் சிந்துநதி நிலப்பகுதிகளில் நுழைந்து வந்த போது அவர்கள் பேசிய மொழி 'ஆர்ய' என்பதுதானேயொழிய, சமஸ்கிருதம் இல்லை. இவர்கள் சிந்து சமவெளியில் நுழைந்த ஆண்டு கி.மு.1500 என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
சமஸ்கிருதம் என்ற மொழியை இலக்கண அடிப்படையில் செப்னிமிட்டவர் 'பாணினி' என்று சொல்கிறார்கள். பாணினி என்ற பெயர் சொல்லப்படும் போதுதான் சமஸ்கிருதம் என்ற சொல்லே முன்வருகிறது. அவர் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த போது அதை எழுத்து வடிவில் எழுதியதாகத் தெரியவில்லை. வேதங்களை மனப்பாடம் செய்து அடுத்தவர்களுக்குச் செவிவழி சொல்லும் முறையில், 'அஷ்டாத்தியாயீ' என்ற சமஸ்கிருத இலக்கண நூலை அவர் உருவாக்கியிருக்கிறார். இவரின் வரலாறு, வாழ்ந்த காலம் போன்றவை தெரியவில்லை. ஆனால் அவர் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது.
இப்போது இங்கே ஒரு குழப்பம் ஏற்படுகிறது. சாகுந்தலம், மேகதூதம், ரகுவம்சம் போன்ற காவியங்களைப் படைத்த சமஸ்கிருதப் புலமைமிக்க காளிதாசர் வாழ்ந்த காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். அப்படியானால், சமஸ்கிருதத்திற்கு இலக்கண வளமை செய்த பாணினி கி.மு.4 இல் வாழ்ந்தார் என்றால், அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (கி.மு.5) எப்படி காளிதாசர் இலக்கணப் புலமையோடு காவியங்கள் பாடினார், என்ற கேள்விக்கு விடை வேண்டும்.
அடுத்து கிரந்தம் என்பது ஒரு மொழியல்ல, அது வடமொழி எழுத்து வடிவம் பெறுவதற்கான ஒரு வரிவடிவம். குறிப்பாக சமஸ்கிருதத்தைத் தமிழில் எழுத கிரந்தம் பயன்பட்டது. பல்லவ கிரந்தம் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. இதன் காலம் கி.பி.5 என்பர். இன்னொன்று 'தேவநாகிரி' எனும் எழுத்து வடிவம். சமஸ்கிருதத்தில் இருந்து இந்தி மொழிக்கு வரிவடிவம் கொடுத்தது இந்த தேவநாகிரி எழுத்து வடிவம்தான். இதன் காலம் கி.பி.7 என்று வரையறை செய்கிறார்கள். இன்று கிரந்தம் பின்தள்ளப்பட்டு தேவநாகிரி மூலம் சமஸ்கிருதம், இந்தியை முன்னிலைப் படுத்த நினைக்கிறார்கள்.
ஆரியர்கள் இங்கே வரும்போது சமஸ்கிருதம் பேசவில்லை. அவர்கள் பேசிய ஆரிய மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. பாணினி சமஸ்கிருதத்தைத் தருவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் காளிதாசர் காவியங்கள் பாடிவிட்டார் என்பது புதிராக இருக்கிறது. சமஸ்கிருதத்தின் கிரந்தம்/தேவநாகிரி ஆகிய எழுத்து வரிவடிவம் கி.பி. காலத்தவை எனும்போது எப்படி சமஸ்கிருதம் எழுத்துரு பெற்ற தொன்மையான மொழி, மொழிகளுக்கெல்லாம் தாயாக இருக்க முடியும், என்பது நம்முடைய கேள்வி!
இனி தமிழின் தொன்மை குறித்துப் பார்ப்போம். தமிழின் முதல்நூல் 'தொல்காப்பியம்'. இதன் காலத்தை கி.மு 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சாமி.சிதம்பரனார் கூறுகிறார். வெள்ளைவாரணார், மறைமலையடிகளார் போன்ற அறிஞர் பெருமக்கள் தொல்காப்பியம் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்னது என்று கணிக்கிறார்கள். கீழடியில் கிடைத்த பானை ஓடுகளின் 'தமிழி' என்ற 'தமிழ்பிராமி'யின் தமிழ் எழுத்து வடிவத்தால் தமிழர்களின் எழுத்தறிவின் காலம் கி.மு.6ஆம் நூற்றாண்டுகளைக் கொண்டது என்று கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
இப்போது நாம் தொல்காப்பியத்தைக் கீழடி கால எல்லையில் வைத்தாலும்கூட, தொல்காப்பியர் தன்நூலில் 'என்ப’ ‘என்மனார்’ 'என்மனார் புலவர்' ‘மொழிப’ ‘யாப்பென மொழிப' 'யாப்பறி புலவர்’- ‘தோலென மொழிப' 'தொன்மொழிப் புலவர்’ என்று அவர் தமக்கு முன்புள்ளோர் கூறியதாகக் குறிப்பு தருகிறார். தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டு, மறைந்து போன முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, பெருங்கலி, வெண்டாளி, கூத்து, சிற்றிசை, பேரிசை நூல்களின் பெயர்களை 'இறையனார் அகப்பொருளுரை'யில் காண முடிகிறது.
இதன்மூலம் தொல்காப்பியத்திற்கு முந்தைய காலங்களில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது உறுதிபெறுகிறது. இதன் காலம் கி.மு.5000 ஆண்டுகள் என்பது மிகையில்லை. ஐயனாரிதனார் சொல்வதுபோல 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய' மூத்தகுடியும், மொழியும் தமிழ்தான்.
நிறைவாக, சமஸ்கிதம் மொழிகளுக்கு எல்லாம் தாய், அது எல்லா வீடுகளுக்கும் போகவேண்டும் என்று பசப்பித் திரிவதெல்லாம் மொழி ஆதிக்கம், வடபண்பாட்டுத் திணிப்பு என்பதனால், தமிழே காலத்தால் மூத்த, முதன்மையான மொழி என்ற பெருமையுடன், வள்ளுவர் சொல்வழி நிறைவு செய்வோம் 'கனியிருப்பக் காய்கவர்ந் தற்று'!
- எழில்.இளங்கோவன்