கடந்த மே மாதம் திருப்பத்தூரில் நடைபெறுவதாக இருந்த ஆம்பூர் பிரியாணித் திருவிழா, மாட்டுக்கறி தொடர்பாக எழுந்த ச்ர்ச்சையினால் ஒத்தி வைக்கப்பட்டது. பிரியாணித் திருவிழாவில் மாட்டுக்கறி கூடாது என்று திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தினால் கொடுக்கப்பட்ட அறிவிப்பே சர்ச்சைக்குக் காரணம். இதனையடுத்து தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையத்தால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அது தொடர்பாக, தற்போது, அரசால் நடத்தப்படும் பிரியாணித் திருவிழாக்களில் மாட்டுக்கறியைத் தடை செய்யக் கூடாது என்ற அறிவுரையை ஆணையம் ஆட்சியருக்கு வழங்கியுள்ளது. அவ்வாறு மாட்டுக் கறியை விலக்கி வைப்பது, உணவு தொடர்பாகப் பாகுபாடு காட்டுவதாக ஆகிவிடும் என்றும் ஆட்சியருக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், பல ஆண்டுகளாக பாதுஷா மைதீன் என்பவர் நடத்தி வந்த மானா சில்லி கடையினை இந்து முன்னணி அமைப்பினரின் அராஜகப் போக்கிற்கு அடிபணிந்து, சில நாட்களுக்கு முன்னர் கடையை மூடி சீல் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் அவர்கள், “ஆட்சிக்கு வர முடியாதவர்கள், ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாதவர்கள், ஆன்மிகத்தின் பெயரால் அரசியல் செய்கின்றனர். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், மதவெறியைத் தூண்டி, ஆட்சியின் மீது பொய்யான அவதூறுகளை பேசி வருகின்றனர். எவரது பக்திக்கும், வழிபாட்டுக்கும் நான் தடையாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. பக்திப் பிரச்சாரம் ஒருபுறம் நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒருபுறம் நடக்கும் என்பதுதான் கலைஞரின் கொள்கை. ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது” என்று பேசினார்.

முதலமைச்சர் அவர்களின் அறிவுரையைச் செவிமடுத்து அனைவருக்குமான சமூக நீதி ஆட்சியை வழங்குவதே திராவிட மாடலுக்குப் பெருமை சேர்க்கும். அலுவலர்களின் அலட்சியப் போக்கு அண்ணா வழியில் நடக்கும் அரசுக்குக் களங்கம் கற்பிப்பதாக அமைந்து விடக் கூடாது.

மாட்டுக் கறியின் பெயரால் வட நாட்டில் ஆர். எஸ். எஸ். செய்து வரும் அரசியலை இங்கும் அரங்கேற்றப் பார்க்கின்றன சில சமூக விரோத அமைப்புகள். அதற்கு அரசு அலுவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் துணை நின்றுவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை.

- வெற்றிச்செல்வன்

Pin It