தொகுதி மறு வரையறைச் சட்ட முன்வடிவம் என்னும் பெயரில் தலைக்கு மேல் தொங்கிய கத்தி, நேற்று மாலை நாடாளுமன்றத்தில் அறுத்து எறியப்பட்டு இருக்கிறது!
1950களின் தொடக்கத்தில் குடும்பக் கட்டுப்பாடு என்னும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதை மிக நேர்மையாகவும், உறுதியாகவும் பின்பற்றிய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று! அதனால் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது குறைந்த விகிதாச்சார அளவிலேயே உள்ளது!
நாட்டின் நலன் கருதி, அத்திட்டத்தைப் பின்பற்றிய நமக்கு, இன்றைய இந்திய ஒன்றிய அரசு பரிசு தரவில்லை என்றாலும் குற்றமில்லை, தண்டனை தர முயற்சி செய்கிறது!
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றி அமைக்கும் திட்டம்தான் இந்தத் தொகுதி மறு வரையறை! இதன் காரணமாகக் குடும்ப நலத் திட்டத்தைப் பின்பற்றாத மாநிலங்கள் கூடுதல் எண்ணிக்கையில் நாடாளுமன்றத்தில் இடம் பெறப் போகும் வகையிலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவ உரிமையை இழக்கும் வகையிலும் இத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது!
இதனைத் தமிழ்நாடு, குறிப்பாகத் திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது! கழகத்தின் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அந்தச் சட்ட முன்வடிவைத் தீயிட்டுக் கொளுத்தினார். நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலித்தது! எதிர்க்கட்சிகள் எல்லோரும் இந்த மசோதாவிற்கு எதிராகக் கைகோத்து நின்றார்கள். நேற்றைக்கு அந்தச் சட்ட முன் வடிவம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, தேவையான பெரும்பான்மை (மூன்றில் இரண்டு பங்கு) கிடைக்கவில்லை. ஒன்றிய அரசின் தீர்மானம் தோல்வி அடைந்தது. நாட்டின்
ஜனநாயகத்திற்கும், உரிமைக் குரலுக்குமான முதல் வெற்றியாக அது அமைந்தது!
இப்போது புதிதாக ஒரு வியாக்கியானத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்த மசோதாவோடு சேர்த்து இன்னொன்றையும் அவர்கள் கொண்டு வந்தார்கள். பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதே அது!
இப்போது பெண்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு எதிர்க்கட்சிகள் குறுக்கே நிற்கின்றன என்று கூறுகிறார்கள். எடப்பாடியும் அதற்கு ஆமாம் போடுகிறார்!
பெண்களுக்கான அந்த இட ஒதுக்கீட்டை 96ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தியது திமுக ஆட்சி தான்! இன்றும், என்றும் அது நமக்கு இசைவான கொள்கைதான்!
இந்த இடத்தில் ஒன்றிய அரசு செய்திருக்கும் சூழ்ச்சியை நாம் அம்பலப்படுத்தி ஆக வேண்டும். 2023 ஆம் ஆண்டே பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும் விட்டது. ஆனால் அதனை மோடி அரசு நடைமுறைப் படுத்தவில்லை!
இப்போது திட்டமிட்டு, இந்தத் தொகுதி மறு வரையறைச் சட்ட திருத்தத்தோடு அதனையும் இணைக்கிறது! இதனை எல்லாம் மக்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இந்த வழியில் எல்லாம் இனி மக்களை ஏமாற்றி விட முடியாது என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்!
உரிமை மறுப்பும், தீமைகளும் எந்த வடிவத்தில் வந்தாலும், அவற்றைத் தமிழ்நாடு எதிர்த்துப் போராடும், தமிழ்நாடு வெல்லும்!
- சுப.வீரபாண்டியன்