ஏப். 29 - கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழுவில் தீர்மானம்

kali poonkunran ezhil ilangovan sinnarasu02.04.2022 ஆம் நாள் காலை, திருச்சியில் நடைபெற்ற பேரவையின் செயற்குழுவில் 74 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவைத்துணைத் தலைவர் பொள்ளாச்சி மா உமாபதி தலைமையில், பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்துரையின் பின் மாநில செயற்குழு உறுப்பினர்களால் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

நீட் தேர்வின் தீமைகளை உணர்ந்து, அந்தத் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறைகள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குத் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி அவர்கள், எதேச்சதிகாரமாக அந்தத் தீர்மானத்தை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பாமல், காலம் தாழ்த்தி வருவது வருத்தத்திற்குரியதும், கண்டனத்திற்கு உரியதும் ஆகும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், ஆளுநரின் சர்வாதிகாரப் போக்கினைக் கண்டித்தும், எதிர்வரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி, சென்னையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 2:

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 29 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் திராவிட இயக்க வளர்ச்சிக்காக நீண்ட நாள்களாக செயல்பட்டு வரும் 3 மூத்த முன்னோடிகளுக்கு “கருஞ்சட்டை விருதும்” ரூபாய் ஒரு லட்சம் நிதியும் வழங்குவது என்று முடிவெடுத்து, அதன்படி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றனார் அவர்களுக்கும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொருளாளரும், தலைசிறந்த பவுத்த அறிஞருமான தோழர் எழில் இளங்கோவன் அவர்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தில் வெளியில் தெரியாத வேர் போலத் தொடக்க நாள் தொட்டு தொண்டாற்றி வருபவரும் மூத்த தொண்டருமான அய்யா கொளத்தூர் சின்னராசு அவர்களுக்கும் வழங்குவது என செயற்குழு முடிவு எடுத்துள்ளது.

தீர்மானம் 3

ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 30 வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கொடியினை ஏற்றி வைத்துக் கொள்கைப் பரப்புரை செய்வது என இச்செயற்குழு முடிவெடுத்துள்ளது.

தீர்மானம் 4:

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்கள் பிறந்த ஏப்ரல் 29ஆம் நாளை பேரவை நாளாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். அந்நாளில் பேரவைத் தோழர்களிடம் இருந்து பேரவை நாள் நிதியைப் பெற்று செயல்பட்டு வருகிறோம். அவ்வகையில் இந்தப் பேரவை நாளினையொட்டியும், ஏப்ரல் 20 முதல் 30 வரை பேரவைத் தோழர்கள் அனைவரும் தங்களால் இயன்ற ஒரு நிதியினை பேரவைக்கு வழங்க வேண்டும் என்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள பேரவை நிர்வாகிகள் அவர்களோடு தொடர்பில் உள்ள அனைத்துப் பேரவைத் தோழர்களிடமும் எடுத்துச்சொல்லி பேரவை நிதியினைப் பெருந்தொகையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

என்று செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Pin It