பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் செய்தியை அண்மையில் மத்திய நிதியமைச்சர் திரு.நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் (தமிழகத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சேவையாற்றி வரும் இந்தியன் வங்கி உட்பட) இணைக்கப்பட்டு, 4 பெரிய வங்கிகளாகச் செயல்படும் எனும் அரசின் கொள்கை முடிவினைத் தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்துப் பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன. பொருளாதார வல்லுநர்களும் இதன் மீதான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இதனை வேறு வழியின்றி ஆதரித்து ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் கூட இவ்வறிவிப்பை முழுமையாக வரவேற்கவில்லை.

indian banks 620இந்த வங்கி இணைப்பு, பொருளாதாரச் சரிவை எப்படி மீட்டெடுக்கும்? யாரைச் சரிவிலிருந்து மீட்டெடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? நிச்சயமாக சிறு குறு தொழில் செய்பவர்களை மீட்டெடுப்பதற்காக இந்த வங்கிகள் இணைப்பு நடைபெறவில்லை. கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்குப் பயன் படும் வகையில் இந்த வங்கிகள் இணைப்பு ஒருபோதும் இருக்காது.

“வங்கிகளை இணைப்பதன் மூலம் பெரிய வங்கிகள் உருவாக்கப்பட்டு, கடன் கொடுக்கும் அளவு உலகின் மற்ற பெரிய வங்கிகளுக்கு நிகராக வளரும்” என்று வங்கிகள் இணைப்பிற்கான காரணத்தை அரசே கூறுகிறது.

உலகின் பெரிய வங்கிகளுக்கு இணையாக கடன் வழங்கும் நிலைக்கு இந்திய வங்கிகள் வளருவதால் பயன்பெறப் போவது பெருநிறுவனங்களன்றி வேறு யார்? பெருநிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடும் என்று இந்த அரசு நினைக்கிறது. இது போன்ற பெரிய வங்கிகளில் பெருநிறுவனங்கள் பெருந்தொகையைக் கடனாக எளிதில் பெறுவதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் ஏழை மக்கள் சிறு தொழில், விவசாயம் போன்றவற்றிற்கு இந்த வங்கிகளிடமிருந்து எளிதில் கடன் பெற்றுவிட முடியுமா? 

பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பெருந்தொகையிலான கடன்கள் எல்லாம் வாராக் கடன்களாக மாற்றப்பட்டன. சிறு குறு தொழில் செய்வோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.

வங்கிகளின் கிளைகளை ஊர்கள் தோறும் அதிகப்படுத்தி மக்கள் கடன் பெறும் வசதியை எளிமைப்படுத்த வேண்டிய நேரத்தில், அதற்கு மாறாக அரசு செயல்பட்டிருக்கிறது. மீண்டும் கிராமப்புற ஏழை எளிய மக்களை, சுயதொழில் செய்வோரை கந்துவட்டிக்காரர்களிடம் சிக்க வைத்து அவர்கள் வாழ்க்கையைப் பறிக்கும் நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகளால் பெரும்பாலும் தென்மாநிலங்களே பாதிக்கப்படுகின்றன. 

“வடநாட்டாரிடம் பெரிய வங்கிகளின் சூத்திரக்கயிறு இருப்பதால் அவர்களால்தான் அந்த இயந்திரத்தை ஆட்டி வைக்க முடியும்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். அதன்படியே இப்போது தென்நாட்டில் பல்வேறு சிறிய வங்கிகளை ஒன்றிணைத்து அதனைப் பெரிய வங்கியாக மாற்றி அதன் சூத்திரக் கயிற்றை வடநாட்டவர் வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகவே இந்த இணைப்பு இருக்கிறது. 

தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியினைக் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள வடநாட்டு வங்கியுடன் இணைப்பதான அறிவிப்பு தமிழ்நாட்டு வங்கியின் சேவைப் பயன்பாட்டை பாதித்திடும் முயற்சியாகவே இந்த இணைப்பு கருதப்பட வேண்டி உள்ளது. இதே அச்சத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியும் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு உடனடியாகக் கடிதம் எழுதி இந்த முயற்சியைத் திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள், அவர்களின் பங்காளிகளாகப் பதவியையும் அதிகாரத்தையும் ருசித்து வருகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட பொதுத்துறையை ஒட்டுமொத்தமாகத் துடைத்து எறியும் மத்திய அரசு முயற்சிகளில் இதுவும் ஒன்று. சமூகநீதியை இந்த நாட்டில் ஓரளவுக்கு நிலைநாட்டுவது பொதுத்துறைதான். பொதுத்துறை இருக்கிற வரைக்கும் அவர்களால் சாணக்கிய நீதியை நிலைநாட்ட முடியாது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தனியார் வசம் அனைத்தையும் தந்துவிடத் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

நடிகர் சிலம்பரசன் திரைப்படம் ஒன்றில் 40,000 ரூபாய் கடன் பெறுவதற்காக 40,000 பேரிடம் ஒரு ரூபாய் பெற்றால் என்ன என்று சிந்திப்பார். அதைப் போலவே பெருநிறுவனங்களுக்குப் பெருந்தொகை தேவைப்படுகிறது. வங்கிகள் சின்னச் சின்னதாக இருந்தால் ஒவ்வொரு வங்கியிடமும் ஒவ்வொரு ரூபாயாகப் பெறுவது வேறு மாதிரி இருக்கும் அல்லவா? அதனால் எல்லா வங்கிகளையும் ஒன்றிணைத்து அரசே அவர்கள் கடன் பெறுவதை எளிமையாக்கி விட்டிருக்கிறது.

Pin It