விபச்சாரிகள் என்றும், விலை மாதர்கள் என்றும், குறிப்பிட்ட பெண்களை இழிவாகக் கூறிய காலம் மாறி, ' பாலியல் தொழிலாளர் கள் ' என அவர்களை இன்று அழைக்கத் தொடங்கியுள்ளோம். பெயர்களில் மட்டும் மாற்றம் ஏற்பட்டால் போதுமா? அவர்களின் வாழ்விலும் மாற்றம் ஏற்பட வேண்டாமா? அதற்கான ஒரு முன்மொழிவை அண்மையில் உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, நீதிபதி சுதா மிஸ்ரா ஆகியோ ரைக் கொண்ட உச்ச நீதிமன்ற ' பெஞ்ச் ', பாலியல் தொழிலாளர் களைப் பற்றி, ஒரு வழக்கில், நாட்டு மக்களின் கவனத்தைத் திருப்பும் வகையில், சில குறிப்புகளைத் தந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் அனைவரும், நடத்தை கெட்டவர்கள், நாகரிகம், பண்பாடு அற்றவர்கள் என்று கருதிவிடக்கூடாது என்று கூறியுள்ள நீதிபதிகள், அப்பெண்களில் மிகப்பலர், கடுமையான வறுமை காரணமாகவும், குடும்ப ஆதரவின்மை காரணமாகவுமே இத்தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பதை உணர வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.

தங்கள் உடலை விற்றுப் பிழைப்பதில் யாருக்கு மகிழ்ச்சி இருக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்யியுள்ளனர். சட்டத்தை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல், சமூக அவலங்களையும் உள்வாங்கிச் சிந்திக்கும் இத்தகைய நீதிபதிகள் நம் வணக்கத்திற்குரியவர்கள். இந்தப் பார்வை, நாட்டு மக்களிடையே கொண்டு செல்லப்படவேண்டும். காலகாலமாக நம் மனத்தில் படிந்து கிடக்கும் பழைய, தவறான கருத்துகளைத் துடைத்தெறிந்துவிட்டு, ஒவ்வொன்றையும் புதிய பார்வையில் பார்க்கப் பழகிட வேண்டும்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை இழிவுபடுத்திப் பேசும் ஆண்கள், பெண்களில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்? வக்கிரமான பாலியல் சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும், எள்ளளவும் எம் வாழ்வில் இடமில்லை என்று எத்தனை பேரால், நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியும்? ஆதலால், பாலியல் ஒழுங்கின்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பதன்று நம் வாதம். சூழ்நிலைகளுக்குப் பலியாகித் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் தோழிகளுக்குக் கைகொடுக்க வாருங்கள் என்பதே நம் அழைப்பு.

தங்கள் கருத்துகளைச் சொன்னதோடு நின்றுவிடாமல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் இதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். பாலியல் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை வகுப்பதற்கு, மூத்த வழக்கறிஞர் பிரதீப் கோஷ் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்துள்ளனர். இது குறித்த அக்கறை கொண்ட நல்ல உள்ளத்தினர், கணிப்பொறி மூலம், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பகுதியினரையும் தோழமையோடு நோக்கி, ஆவன செய்து, ஒரு புதிய உலகை உருவாக்க இது போன்ற முயற்சிகள் உறுதியாய்ப் பயன் தருவன ஆகும்.

Pin It