இந்தியாவின் மிகப்பெரும் திறந்த வெளிக் கலைப் பண்பாட்டுத் திருவிழா சென்னை சங்கமம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை பறை சாற்றும் கிராமியக் கலைவிழா சென்னயில் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை சங்கமமாக நடத்தப்பட்டு வருகிறது. நான்காம் ஆண்டுக் கலைவிழாவாக இந்த ஆண்டு ஜனவரி 10 ஆம்தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஒரு வாரம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் மையமும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிப் பண்பாட்டுத்துறையும் இணைந்து வழங்கும் சென்னை சங்கமம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை நகரில் இருக்கும் முக்கிய பூங்காக்கள் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கிராமியக் கலைஞர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் காண்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் நாட்டுப் புறக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சென்னை சங்கமம் அமைந்திருந்தது எனலாம்.
தமிழகத்தில் எண்ணற்ற நாட்டுப்புற ஆட்டங்கள் உள்ளன. நாட்டுப்புற மக்களோடு மக்களாகவும், மக்களின் உறைவிடமாகவும் இருந்த இவ்வாட்டங்கள் குக்கிராமம், ஊராட்சி, பேருராட்ச, மாவட்டம் என்றளவில் மட்டுமே பல்வேறு விழாக்களில் நிகழ்த்தப்பட்டு வந்தன. இவ்வாட்டங்கள் தற்போது கிராமப்புறச் சூழலைத் தாண்டி, சென்னை போன்ற மாநகரச் சூழலில் நிகழ்த்தப்படுகின்றபோது நகர்ப்புற மக்களும், கிராமியக் கலைஞர்களும் இணைந்து உறவாடி மகிழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னத்திரை, சினிமாத்துறை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக கிராமியக் கலைகளைப் பார்த்திருந்த நகர்ப்புற மக்கள், சென்னை சங்கமம் விழாவின் மூலமாக, நம் நாட்டின் தொன்மைக் கலைகளைக் கண்கூடாக, நேருக்கு நேர் பார்வையாளர்களாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெருக்கூத்தும், மதுரைப் பகுதிகளில் கரகாட்டம், நையாண்டி மேளம், ராஜாராணி ஆட்டம் போன்ற ஆட்டங்களும் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கணியான் கூத்து, வில்லுப்பாட்டு போன்ற தொன்மக் கலைகள் பங்குனி சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் கோயில் விழாக்களில் நிகழ்த்தப்படுவதைப் பார்க்கலாம்.
நம் நாட்டின் மண்ணுக்குரிய பாரம்பரியக் கலைகள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அக்கலைகளை மீ ட்டுருவாக்கம் செய்வதே சென்னை சங்கமத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. முதலாளி தொழிலாளி வர்க்கம் தோன்றிய காலத்திலிருந்தே உயர்ந்த குடிமக்கள் நிகழ்த்தும் கலை, செவ்வியல் கலையாகவும், தொழில் மாந்தர்கள் நிகழ்த்தும் கலை எனவும் வரைமுறைப்படுத்தி வைத்துள்ளனர். ஆனால் சென்னை சங்கமம் விழாவின் மூலமாக செவ்வியல் கலையும், நாட்டுப்புற நிகழ்த்து கலையும் ஒரே மேடையில் அரங்கேறி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
ராஜாராணி ஆட்டம் சமூக மக்களுக்கு தகவல்கொடுக்கும் ஆட்டமாக உள்ளது. 2 ராஜபார்ட், 2 ராணி வேடம், 1 கோமாளி, 1 தவில் கலைஞர், 1 குறவன் வேடக் கலைஞர், இப்படி ஏழு பேர் கொண்ட குழுவினர் ராஜாராணி ஆட்டத்தை நடத்துகின்றனர். ஆண்கள் இயற்கையிலேயே முடிவளர்த்துக் கொண்டு, ராணியைப் போன்றும், ராஜாவைப் போன்றும் ஒப்பனைகளை செய்து கொண்டு நிகழ்த்துவதே ராஜாராணி ஆட்டமாகும்.
இவ்வாட்டத்தையே எனது குடும்பம் மூன்று தலைமுறையாக நிகழ்த்தி வருகிறோம். தற்போது ராஜாராணி ஆட்ட ஆற்றுகை முறைகளும், அதன் சமூக நிலைகளும் என்ற தலைப்பில் நான் ஆய்வு செய்து வருகிறேன். எனவே நான் ஒரு கலைஞராகவும், முனைவர்பட்ட ஆய்வாளராகவும் இக்கலைகளைப் பார்க்கிறேன்.
கடந்த 3 வருடங்களாக என்னுடைய சகோதரர்களோடு எங்களுடைய ஸ்ரீ ஆதிபராசக்தி கிராமியக் கலைக் குழுவினர் சென்னை சங்கமத்தில் பங்கெடுத்துச் சிறப்பாக நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கச் செய்யவும் விழைகின்றோம்.
ஜிம்பலா மேளம், தப்பாட்டம், ராஜாராணி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, தெருக்கூத்து, வேடம் தரித்த ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பெரியமேளம், ஜிக்காட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், நையாண்டி மேளம், மயிலாட்டம், மாடாட்டம், புலி ஆட்டம், காவடி ஆட்டம் களறிச் சண்டை, கை சிலம்பாட்டம், செண்டை மேளம், கொண்ட தண்டி ஆட்டம், பம்பை யாட்டம், போர் பறை, கும்மி ஆட்டம், சாவு மேளம், தாரை தப்பட்டை, கோமாளிக் கூத்து, கானா பாடல், நாடகம், குரும்பன்ஸ் ஆட்டம், கிழவன் கிழவி ஆட்டம், கரடி ஆட்டம், கொக்கலிக் கட்டை ஆட்டம், மண்ணின் பாடல்கள் இது போன்ற ஆட்டங்களும் கர்நாடாக குரலிசையும், ராஜஸ்தான சூபி இசையும் சென்னை சங்கமத்தில் சங்கமமாயின. நாட்டுப்புறக் கலைஞர்கள் சுமார் 2 ஆயிரம் பேர்கள் இதில் பங்கு பெற்றனர்.
வீட்டிலே முடங்கிக் கிடந்த மக்கள் இந்நிகழ்வைக் காணக் கூட்டுத் தன்மையோடு வருவதைக் காண முடிகிறது. கலை என்பது கூட்டமாக, குழுவாகச் சேர்ந்து கொண்டு நிகழ்த்துவதும், கூட்டுமனப்பான்மையை உருவாக்குவதே ஆகும்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் சந்திக்கும் வாய்ப்பு சென்னை சங்கமத்தில் ஏற்பட்டது. எண்ணற்ற கிராமியக் கலைஞர்கள் யார், எவர் என்று தெரியாது இருந்த முகங்கள், கடந்த 3 ஆண்டுகளாக அறிமுகமாகி ஒரு கலைக்குடும்ப உறவை ஏற்படுத்தியது இந்த சென்னைச் சங்கமத்தின் நிறைந்த பயன்களில் ஒன்று என்பது முற்றிலும் உண்மை.
கடந்த ஆண்டு எங்களுடைய ஸ்ரீஆதிபராசக்தி கலைக் குழுவினரோடு இதே சென்னை சங்கமத்திலிருந்து என்ற இடத்திற்கு நிகழ்த்தப் போயிருந்தோம். அங்கே வந்திருந்த அனைத்துக் கலைஞர்களும் வியப்பில் ஆழ்ந்தோம்.
ஏனெனில் அந்தக் கட்டிடம் செங்கற்களால் கட்டப்படவில்லை. முழுக்க முழுக்க கண்ணாடிகளால் வானுயர கட்டப்பட்டிருந்தன. அந்த இடத்திற்குள் சென்றதும் எல்லோரும் தங்களை மறந்து போயினர். அமெரிக்காவிற்கு போய் வந்தது போல் இருக்கிறது எனறு கலைஞர்கள் கூறினார்கள். மண் குடிசை வாழ் ஏழைக் கலைஞர்களை மகத்தான மாடங்களுக்கு அழைத்துச் சென்ற சென்னை சங்கமத்தை எப்படி மறப்பார்கள் இந்தக் கலைஞர்கள்? அங்குள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர் என்பதுடன் பார்வையாளர்களும் கூட வந்து இணைந்து ஆடி மகிழ்ந்தது கண்கொள்ளாக்காட்சி.
அதே இடத்தில் எங்களை அழைத்துச் சென்ற பொறுப்பாளர் வில்லுப்பாட்டு, குரும்பன்ஸ் போன்ற கலைகளை நிகழ்த்த ஏனோ அனுமதி தரவில்லை! எனவே 2 குழுக்களும் அங்கே தயார் செய்து கொடுத்த சாப்பாட்டைக் கூட சாப்பிட மறுத்தனர். இது மறக்க முடியாத சம்பவம் ஆகும்.
வடித்தெடுத்துச் சொன்னால், நம் மண்ணின் மாண்பைக் கூறும் மக்கள் கலையாம், கிராமியக் கலைகள் வாடி வதங்கி அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதை மீண்டும் உயிர்ப்பித்து மீட்டுருவாக்கம் செய்ததில் சிதறிக் கிடக்கும் மக்கள் கலைஞர்களை ஒரே இடத்தில் சந்திக்க வைத்து, அந்தச் சந்திப்பின் ஊடாக கலைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததில், கலை மக்களுக்காக என்பதை முத்திரை பதித்து கிராமியக் கலைகளுக்கு மகுடமாகத் திகழ்ந்தது சென்னை சங்கமம் என்றால் மிகையில்லை, முற்றிலும் உண்மையே!
- பி.சென்றாய பெருமாள்