ஒரு தேசத்தின் பொருளாதார வளர்ச்சி வணிகத்தின் மூலமே கணக்கிடப்படுகின்றது. இன்றைய நிலையில் பங்குச் சந்தை பற்றிஅறியா தவர்கள் மிகவும் குறைவு. ஆனால் பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்பவர்கள் அதற்கு நாளடைவில் அடிமையாகி விடுவதும் மறுக்க முடியாத உண்மை.

பங்குச் சந்தையால், மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர வர்க்கத்தினரே பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், இவர்கள் முதலீடு என்ற எல்லைக் கோட்டைத் தாண்டிப் பந்தயம் என்ற முறைக்கு வந்து விடுவதுதான். மேலோட்டமாக வணிகம் செய்யும் முறையைக் கீழ்கண்டவாறு ஐந்து வகைப்படுத்தலாம்.

1.பங்குகள் வாங்கி நீண்ட காலத்திற்குப்பின் விற்பவர்கள்

2.பங்குகளை வாங்கிக் குறுகிய காலத்திற்குப் பின் விற்பவர்கள்.

3.பங்குகளைச் சார்ந்த உரிமங்களைக் காப்பீடாகப் பயன்படுத்துபவர்கள்

4.பங்குகளை வாங்கி அதே நாளில் விற்பவர்கள்

5.பங்குகளைச் சார்ந்த உரிமங்களை மட்டும் வணிகம் செய்பவர்கள்

(பங்குகளைச் சார்ந்த வணிகம் என்பது ஆங்கிலத்தில் Derivatives / Option Trading என்று அழைக்கப்படுகின்றது. இந்த முறையில் பங்குகளை நேரடியாக வாங்காமல், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலைக்கு வாங்க அல்லது விற்க உரிமங்களை வணிகம் செய்யலாம்)

மேற்கண்ட 5 முறை வணிகத்தில் அனுபவமிக்க வசதி படைத்தோர் பயன்படுத்துவது முதல் 3 முறைதான். இவர்கள் பங்குகளை வாங்குவதோடு மட்டுமின்றி அதற்கான விற்கும் உரிமங்களையும் காப்பீடாக வாங்கிக் கொள்வர். இவர்களுக்குப் பங்குச்சந்தையால் பெரிய அளவு பாதிப்பு உண்டாகாது.

மாறாக நடுத்தர வர்க்கத்தினர் ஈடுபடுவது கடைசி 2 முறை வணிகத்தில்தான். அதாவது பங்குகளை வாங்கி ஒரே நாளில் விற்பது மற்றும் பங்குகளைச் சார்ந்த வணிகம். உதாரணத்திற்கு ஒரு வணிகர் 10,000 ரூபாய் வைத்து 25,000 ரூபாய் வரையிலான பங்குகளை ஒரே அளவில் வாங்கி விற்பார். இதன் மூலம் அந்த வணிகருக்கு அதிக லாபம் அல்லது அதிக நட்டம் கிடைக்கும். இந்த முறை வணிகத்தால் பங்குச் சந்தைத் தரகர்களுக்கு அதிகத் தரகு கிடைக்கும்.

இதற்கும் ஒரு படி மேலாக உள்ளதுதான் பங்குகளைச் சார்ந்த வணிகம். இந்த முறையில் வணிகர் முதலீடு செய்கிறார் என்று கூறுவதைவிட பந்தயம் கட்டுகிறார் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஒரு பங்கு, குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலையை வந்தடையும் என்பதற்காக உரிமங்களை பந்தயமாக வாங்கும்முறை இது. அந்தப் பங்குகள் அவர் குறிப்பிட்ட விலையைத் தாண்டி வந்தால் அவருக்கு நல்ல இலாபம் கிடைக்கும். மறான திசையில் சென்றால், அவரது பணத்திற்கு 100 விழுக்காடு நட்டம் ஏற்படும். இந்த முறை வணிகத்தில் ஒரே நாளில் 10 அல்லது 20 மடங்கு கூட இலாபம் கிடைக்கும். இந்த முறை வணிகம்தான் நடுத்தர வர்க்கத்தினரை முற்றிலும் தன் வசப்படுத்தி, அடிமையாகவும் ஆக்கி விடுகின்றது. பங்குச் சந்தைத் தரகர்களுக்கு வணிகர்களைப் பற்றிக் கவலை இருக்க முடியாது. அவர்களுக்கு வேண்டியது அவர்களுடைய தரகுப் பணம்தான்.

பங்குச் சந்தைக்கு அடிமையாகிவிட்ட மனிதர்களின் மனம், பங்குச்சந்தை நிலவரம் பற்றியே இருக்கும். நிம்மதியான உறக்கம் இருக்காது. வீட்டில் விடுப்பில் இருந்தாலும் பங்குச்சந்தை நிலவரம் பற்றி அறிய ஆவல் கொள்வர். இதற்குத் தடையாக ஏதேனும் இருந்தால் கோபமடைவர். மனைவி, மக்கள், உறவுகளையயல்லாம் தாண்டி, பங்குச் சந்தையே அவர்களை ஆட்கொள்ளும்.

குடி, சூதாட்டம் போல, இந்தப் பங்குச் சந்தை வெறியும் பல நடுத்தரக் குடும்பங்களைச் சிதைத்து வருகிறது. வணிகம் தவறில்லை. ஆனால் எதிலும் உடனடிப் பணம் என்னும் ஆசை மிகத் தவறானது.

( இணையம் : http:// www.softwareandfinance.com)

Pin It