1952 இல் ஆட்சியமைத்த யு.என்பி.யின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நியோ லிபரல் கொள்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு வழிசமைத்த இந் நிதியமைச்சர் (பின்னை நாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியும்) நாடு கண்ட மிக மோசமான வலதுசாரிகளிலொருவர். பொருளாதாரச் சரிவுவை ஏற்படுத்தியது, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை நிகழ்த்தியது, ஊழலை அதிகரித்தது, அரசியல் வன்முறைக் குழுக்களை வளர்த்தது, கோரமான இனவாதத்தை வளர்த்தது, தமிழ்பேசும் சிறுபான்மையருக்கு எதிரான கோர வன்முறையைத் தூண்டியது, யுத்தத்தை ஆரம்பித்தது என்று பல்வேறு அழிவுகளுக்கு வித்திட்ட நாசகார சக்திகளின் தலையாய பிரதிநிதியிவர். இடதுசாரிகள் மேல் இவர் காட்டிய காழ்ப்புணர்வும் வெறுப்பும் நாடறிந்தவொன்று. L.S.S.P யினர் பாராளுமன்றத்தில் அவருடன் அடிக்கடி சண்டை போட நேரிட்டது. L.S.S.P உறுப்பினர்கள் பேசும் போது ஒவ்வொரு முறையும் அத்துமீறிக் குறுக்கிட்டு அனாவசியமான தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வதும் கிண்டல் கதைகள் பேசுவதும் இவர் வழக்கம். தமது அரசியல் நலனைத் தக்கவைக்க வன்முறைக் குழுக்களைத் தமக்குப் பின்னால் செயற்பட வைத்த யு.என்.பி தலைவர்களின் முன்னோடியிவர்.
ஏகாதிபத்தியம் சார் கொள்கைகளை மும்முரமாக அமுல் படுத்தியவர்களிலும் முதலிடத்தை இவருக்கு வழங்கலாம். அமெரிக்க வலதுசாரிப் பொருளாதாரவாதியான ஜோன் எக்சடரின் உதவியுடன் இலங்கையின் முதலாவது மத்திய வங்கியை உருவாக்கி அதற்கு ஜோன் எக்சடரையே கவர்னராகப் போட்டதும் இவரது கைங்கரியமே. மேற்கத்தேய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டவர்களிலும் இவரே முதன்மையானவர். கொழும்பு விமானத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த வழியேற்படுத்திக் கொடுத்தவருமாவார். தனது கொள்கைகளை நிறைவேற்ற இடதுசாரிகள் பெருந்தடையாக இருந்தமையால் அவர்களை இவர் மனதார வெறுத்தார். அதனால் தன்னால் முடிந்த எல்லாக் குறுக்கு வழிகளிலும் அவர்களைத் தாக்கினார். ஒரு சர்வாதிகாரியின் அனைத்துக் குணாம்சம்களையும் கொண்ட இந்த நிதியமைச்சர் தன் வர்க்க நலனுக்காக நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்துக்குள் தள்ளினார். 1952இல் UNP வென்ற கையுடன் விவசாயிகளுக்கான நிவாரணம் நிறுத்தப்பட்டது. வறியவர்களுக்கான உணவுச் சலுகைகள் குறைக்கப்பட்டன. பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி குறைக்கப்பட்டு இறக்குமதி அதிகரிக்கப்பட்டமையால் வெளிநாட்டுச் சேமிப்பு நிதியம் வேகமாக வற்றத் தொடங்கியது. அமெரிக்க மேற்கத்தேய நியோலிபரல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன.
1950இல் தொடங்கிய கொரியா நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வரத் தொடங்கயிருந்தது. பனியுத்தத்தின் காரணமாக இலங்கையின் மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகம் மிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின், சோவியத் யூனியன் ஆதரவு காரணமாக அமெரிக்காவுக்குத் தெற்காசியாவில் இராணுவத்தளம் ஒன்றின் தேவை முக்கியமானது. இத்தருணத்தில் இலங்கை பண்டங்களுக்குக் கூடுதற் பணம் வழங்கிய சீனாவுடன் உறவை முறிக்கும்படி அமெரிக்கா, இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் வழங்கி வந்தது. சில பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தமக்குச் சாதகமான கொள்கைகளை அமுல்படுத்தும்படி தூண்டியது. அவர்களுக்கு அடித்த அதிஷ்டமாக ஜே.ஆர் ஜெயவர்த்தனா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகச்சிறந்த நண்பனாக இலங்கையைக் குதறிக் குலைக்க முன்வந்தார். பல அதிகாரங்களைச் ‘சுதந்திரத்துக்குப்’ பின்னும் தம் கைவசம் வைத்திருந்த இலங்கைக்கான பிரித்தானியக் கவர்னர் இடதுசாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தூண்டினார். அமெரிக்க- சோவியத் பனியுத்தம் இலங்கையிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது இலாபகரமாக இருந்த போதும், அதை நிறுத்தி மேற்கிலிருந்து அதிகூடிய விலையில் பண்டங்களை இறக்குமதி செய்ய UNP அரசு முடிவு செய்தது. இலங்கைப் பொருளாதாரம் ஜெயவர்த்தனாவின் கையில் ‘குரங்கின் கை பூமாலையானது’. வறிய விவசாயிகளின் நிவாரணத்தை நிறுத்திய அதே தருணத்தில் அரசு தனியார் வியாபாரிகளுக்குச் சலுகைகளை வழங்கியது. திடமாக இருந்த இலங்கைப் பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் தலைகீழானது.
ஆனால் ஆளும் வர்க்கம் இலங்கைத் தொழிலாளர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அரிசி நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக 1953ஆம் ஆண்டு யூலை 20இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர். இக்கூட்டம் ஐந்து மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. அடுத்தநாள் 12 000 க்கும் மேற்பட்ட கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். 23ஆம் திகதி யூலை வெள்ளவத்தை Spinning and waving தொழிலாளர்கள் அரைநாள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்தனர். கொண்டுவரப்பட இருக்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கெதிராக வாக்களிக்கும்படி 8760 பேர் கையெழுத்திட்ட பெட்டிசன் காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் நடேசனிடம் கையளிக்கப்பட்டது. கண்டி, யாழ்ப்பாணம், கோப்பாய், ருவானவெல்ல என்று பல இடங்களில் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை எல்லாக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டது.
இத்தருணத்தில் வலதுசாரி ஊடகங்கள் இடதுசாரிகளைத் தொடர்ந்து தாக்கின. ‘சிவப்புப்’ பயப்பீதி வதந்திகளைப் பரப்பினர். ஆகஸ்ட் 6ஆம் திகதி சோவியத்யூனியனின் தலைவர் தமது கொள்கை மாற்றம் பற்றி அறிவிக்க முடிவெடுத்திருக்கும் நாள் என்றும் அதனால் தான் இடதுசாரிகள் வேலை நிறுத்தத்துக்குத் தூண்டுகின்றனர் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. 1953 யூலை 26இல் சிலோன் வானொலியில் தொழிலாளர்களுக்குப் பின்வருமாறு ஒரு எச்சரிக்கை அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. ‘ அரசுக்கெதிரான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அல்லது அரசுக் கொள்கையை மாற்றக்கோரி ஊர்வலத்தில் , போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் அனைவரும் தாமாகத் தம் வேலையிலிருந்து விலத்தி விட்டார்கள் என்று கருதப்படுவர். அவர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்’. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த தொழிலாளர்கள் வலதுசாரி ஊடகங்களின் சிவப்பு பயப்பரப்பலைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இதை எதிர்க்க எல்லாக குறுக்கு வழிகளையும் நாடிய ஜெயவர்த்தனா ‘பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தமிழர்கள் எடுத்துக் கொள்வதால் தான் இந்தப் பிரச்சனை’ என்ற பிரச்சாரத்தையும் தூண்டிவிட்டார்.
வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஜெயவர்த்தனாவைப் புத்திசாலி என்று புளுகுவதையும் இலங்கைப் பாடப்புத்தகங்களில் அவர் மாபெரும் தலைவராகப் போற்றப்படுவதையும் நாமறிவோம். ஆனால் இலங்கைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ‘மாபெரும் முட்டாள்’. சமுதாயம் பற்றி ஒரு மண்ணும் தெரிந்திராத ‘மடையன்’. அவர்கள் 1953ஆம் ஆண்டு இதைத் தெட்டத் தெளிவாக ஜெயவர்த்தனவுக்கு விளங்கப்படுத்தினர்.
1947ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தை ஒடுக்கிய அதே வலதுசாரிக் குழு தான் இத்தருணம் ஆட்சியிலிருந்தது. வேலை நிறுத்தம் நடக்கும் பட்சத்தில் முன்பு போலவே இத்தருணமும் தாம் தொழிலாளர்களை முறியடிக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். இராணுவத்தைக் கொண்டு இலங்கைத் துறைமுகத்தைக் கைப்பற்றித் தொழிலாளர்களைப் பொலிஸ் பாதுகாப்பில் வேலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
வேலை நிறுத்த முன்னெடுப்புகள் பலப்பட அதிகாரவர்க்கத்தின் பயமும் வலுப்படத் தொடங்கியது. அதன் பலனாக UNP க்குள் பல முரண்பாடுகள் வெடித்தது. ஆர்.பிரேமதாச போன்றவர்கள் ஜே.ஆரின் பொருளாதார மொக்குத்தனத்தை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் பொருளாதாரப் பிரச்சனையை இடதுசாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்ட அவர் தயங்கவில்லை. போதாக்குறைக்கு அவர்கள், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மோசமான கேலிக்கிடமான வழி முறைகளைப் போதித்தனர். ‘மக்கள் செலவற்ற மற்றும் ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரேமதாசா கேட்டுக்கொண்டார்! விலைவாசி அதிகரிப்புக்குக் காரணமானவர்கள் தம் ‘மாளிகைகளில்’ ‘அனாவசிய செலவுகளில்’ ஈடுபட்டிருக்க வறிய மக்கள் செலவைக் குறைக்க வேண்டும் என்ற சில்லறைக் கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எடுபடவில்லை. பொது வேலைநிறுத்தத்துக்கு முதல்நாள் பிரேமதாச பின்வருமாறு ஒரு சவால் விட்டார்.
"இந்த ஆண்டின் மிகப்பெரிய பகிடியாக இந்தக் கர்த்தால் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்தச் சிவப்புச் சட்டைகாரர்களுக்கு ஒன்றைத் துணிந்து சொல்வேன். உங்களின் கதையை மக்கள் செவிமடுக்கலாம் ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதில் ஒரு சொட்டையும் நம்பப்போவதில்லை."
பிரேமதாசவின் இந்தத் ‘தீர்க்க தரிசனம்’ நிறைவேறவில்லை. அதற்கு மாறாக ஆயிரக்கணக்கில் மக்கள்-தொழிலாளர்கள் வந்தனர். செவிமடுத்தனர். செயலில் இறங்கினர். கம்யூனிச கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சில தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட சிறு தாமதத்தின் பின் பொது வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 12இல் நிகழவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்டு 12ல் நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.
தொழிலாளர்களின் ஒற்றுமையும் பலமும் LSSP தலைமைகளுக்குக் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். போக்குவரத்தைத் தொடர அரசு இராணுவத்தை வரவழைத்து சாரதிகளாகப் பணியாற்ற விட்டது. கொழும்புத் துறைமுகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இதையும் மீறி நாடு காணாத அளவில் பொது வேலை நிறுத்தம் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளரும் LSSPயின் முக்கிய தலைமை உறுப்பினருமான பாலத்தம்பு இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தார்.
‘முதலாளித்துவ அரசை எதிர்ப்பது மட்டுமல்ல அதை உடைத்து விழுத்த முடியும் என்ற பாடத்தை இந்தப் பொது வேலை நிறுத்தம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்கும் கற்றுக்கொடுத்தது. தாம் நேரடி போராட்டத்தில் இறங்கும்போது ஆளும்வர்க்கத்தால் அவர்களை அசைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்தனர். ஆகஸ்ட் 12 ஒரு மறக்க முடியாத நாள். மகரகாம, பேரளகாமுவ என்று பல இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ந்த நாளிது. பொலிஸ், இராணுவம் மட்டுமல்ல ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் கூட அவர்கள் பலம் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் பலத்துக்கு நிகராக முடியாது என்று நிறுவிய நாளது. வேலை நிறுத்தத்தைக் காப்பாற்ற இராணுவ-பொலிசை எதிர்கொள்ளவும் தொழிலாளர் தயாராகிய – அதற்கு உயிரைக் கொடுக்கக்கூட முன்வந்து ‘கர்த்தால் கதாநாயகர்களாக’ மாறத் தொழிலாளர்கள் தயாரான நாளது.
ஆனால் அதே நாள் வலதுசாரி ஊடகங்கள் கற்பனைக் கதைகளைப் பிரசுரித்தன. ‘வழமைபோல் தொழில் நடந்தேறியது’ என்று சிலோன் டெய்லி நியூஸ் தலையங்கம் எழுதியது. ‘வழமையான சூழல் நிலவியது’ என்ற தலைப்பில் அவர்களது ஆசிரியர் தலையங்கம் எவ்வாறு வேலை நிறுத்த நாள் ஒரு சாதாரண நாளாக இருந்தது என்று வர்ணித்தது. இந்தச் ‘சாதாரண நாளில்’ அசாதாரண முறையில் UNP அமைச்சரவை அவசர அவசரமாகக் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற HMS Newfound land கப்பலில் கூடியது! பயக்கெடுதியில் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய அமைச்சரவை, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் அமுலுக்குக் கொண்டு வந்தது.
வேலை நிறுத்த நாளைச் ‘சாதாரண நாள்’ என்று வர்ணித்த அதே பத்திரிகைகள் அடுத்த நாள் அவசர காலச் சட்டம் என்றால் என்ன என்று விளக்கவுரைகள் எழுதின. அடுத்தடுத்த நாட்களில் வலதுசாரி பத்திரிகைகள் முழுவதும் எவ்வாறு அவசரகாலச் சட்டத்தையும் மீறி நாடெங்கும் வேலை நிறுத்தம் தொடர்கிறது என்ற செய்திகளை வெளியிட்டன. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தும் புறக்கணித்துப் பிரச்சாரம் செய்வது அவர்களுக்கு முடியாத காரியமாகிப்போனது.
வேறு வழியின்றி அரசு ஆகஸ்டு 15இல் இராணுவத்தின் முழு உதவியையும் நாடியது. வேலை நிறுத்த நாளைச் சாதாரண நாள் என்று தலையங்கம் எழுதிய அதே பத்திரிகை லண்டன் ரைம்சை மேற்கோள் காட்டி 19 ஆகஸ்டில் தொழிலாளர்களின் அதிருப்தியைச் சரியாக பாவித்த LSSP மிக வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்திருந்தது’ என்று எழுதவேண்டியதாயிற்று.
- சேனன்