1

இவ்வுலகம் என்னால் சபிக்கப்படுகிறது

நான் சபிக்கத் தொடங்கியிருக்கிறேன்...
எதிர்படும் யாவரையும்...

வாழிய... வாழியவென வாழ்த்துவதைவிடவும்...
இயல்பாக இருக்கிறது சபிப்பது.

மேலும்
சபிப்பதெல்லாம் நிகழ்ந்துவிடுவதால்
அது எனக்கு பெரும்பேறையும்...
நெடும்புகழையும் அளித்திருக்கிறது.

ஒவ்வொரு நாள் புலர்விலும்...
என் வாசலில் நீள் வரிசையில் நின்று
சொல்லிவிட்டுப் போகிறார்கள்
யாரையாவது சபிக்க... (நிறைய பணமளித்தும்)

உண்பதும் சபிப்பதுமின்றி வேறொன்றும்
அறியேன் என்பது போல்
வளர்ந்துவிட்டதென் சபிப்புத்தன்மை...

சபிக்கச் சபிக்க...
நொடிப்பொழுது ஆயிரம்பேரை சபிக்கும்
பேராற்றல் தோன்றி விட்டதெனக்கு...

இப்போது நான் கடக்கும் வீடுகளில்
வாழ்ந்து அழுபவர் யாவரும்...
என்னால் சபிக்கப்பட்டவர்கள்தான்...

இனி,
சபிக்க யாருமற்ற பெருவெளியில்...
ஒரு நெடுமௌனம் வளர்ந்து
பின் தெளிந்து...

சபிக்கத் தொடங்கியிருக்கிறேன்
எல்லாக் கடவுள்களையும்...

2

கடவுளை பேருந்து நிலையத்தில்
என்கவுண்டர் செய்தார்கள்


சிவப்புக் குணம் நிறைந்த தாடிக்காரரிடம்...
செருப்படி வாங்கியதொரு அற்புதக் கணத்தில்
ஞானம் கிடைத்தது
அடிமைகள் தொழும் கடவுள் ஒருவருக்கு

மங்கல கீதங்களை புறம்தள்ளிவிட்டு
புரட்சிக் கீதங்களை கேட்கலானார்...

விடுதலை வீரர்களை அறிந்தபோது
முதன்முறையாக அவருக்கு நெஞ்சு நிமிர்ந்தது

தேடிவரும் பக்தர்களை தவிர்த்துவிட்டு
மக்களைத் தேடிப்போனார் வீதிகளில்
அவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக இருந்தனர்

புரட்சி பேசினார்
பிரச்சாரம் செய்தார்
பட்டினி சமர் புரிந்து
விடுதலை விடுதலையென வெடிப்புற்றார்

மக்கள் முதன்முறையாக நம்பத் தொடங்கினர்...
கடவுளின் பெயர் பட்டியெங்கும்
பேசப்பட்டது

அவர் மக்களின் தலைவனாய்
மாறிமுடித்திருந்த ஒரு பொழுதில்

பேருந்து நிலையத்தில்
அவரை என்கவுண்டர் செய்துவிட்டார்கள்

- புன்னகை சேது

Pin It