எப்படி
சமாதானப்படுத்துவது
தெரியவில்லை
எந்த பொம்மை
கேட்டாலும்
வாங்கித் தராமல்
அடம் பிடிக்கும்
அப்பா அம்மாவை

சொல்லத்தெரியாததை
கிறுக்கினால்
திட்டு
சொல்லித்தந்ததை
கிறுக்கினால்
பாராட்டு

இன்னொரு முறை
பேசாதீர்கள்
அப்பா போலவா
அம்மா போலவா
என்று
என்னைப் போலிருக்கும்
என்னைப் பற்றி

வாங்கப் பிடிக்கவில்லை
எனக்குப் பிடித்த
பொம்மையை விற்ற
குழந்தையின் வயது
என்னை விட
குறைவென்று
அறிந்த பொழுது

சிரித்துக் கொள்வதை
நிறுத்திக் கொண்டோம்
சித்தப்பா பையனும்
நானும்
சித்தப்பாவிற்கும்
அப்பாவிற்கும்
சண்டையென்றானதும்

பள்ளிக்குப் போகும் போது
அம்மாவும்
பள்ளிவிட்டு வரும் போது
டீச்சரும்
மறக்காமல் சொல்கிறார்கள்
“நல்லா படிச்சுட்டு வா”

கேட்காமலே எல்லாம்
வாங்கித் தரும்
அப்பா அம்மாவிடம்
கேட்டும்
கிடைப்பதில்லை
நேரம்

கானகத்தில் சுற்றியலைந்து
வண்ணத்துப் பூச்சியொன்றை பிடித்த
அதிகாலைக் கனவை
ஆர்வமாய் சொல்ல வருகையில்தான்
கைகாட்டப்படுகிறது
கடிகாரமும் குளியலறையும்

கௌதமின்
கணக்கு விடைத்தாளில்
விட்டுப்போன இரண்டு மார்க்கை
டீச்சரிடம் சொல்லி
வாங்கித்தந்ததை
சொல்லமுடியவில்லை
வீடு வந்ததும்
வீட்டுப்பாடத்திற்கான குறிப்பேட்டை
தேடும் அம்மாவிடம்

Pin It