அதிகம் வெயில் இல்லாத மாலைப்பொழுதில்

வீட்டுக்குப் புலிவந்தால் .................

.......................................................................

இதில் அனுகூலமென்னவென்றால்

அதுவரை பூச்சியைப்போல

என்னைப் பார்த்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்

இப்போதெல்லாம் எதிர்படுகையில்

மரியாதையோடு வணக்கம் சொல்லத்தவறுவதில்லை

 - கரிகாலன் 

"கி.பி. 2000த்திற்குப் பிறகான கவிதைகளை ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கு உணரத்தக்கப் பாடமாகக் கிடைப்பது ஒன்றுதான். கவிதையின் பயணம் கவிதையை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை. பராக்குப் பார்ப்பதில் தொடங்கி, கதை சொல்லத் தொடங்கி, இறுதியாக டைரியாகச் செயல்படுவது வரை நவீனகவிதை தன் பயணத்திலிருந்து பெரிதும் திசைமாறிவிட்டிருக்கிறது. இதற்கு சிறுபத்திரிக்கைகளின் - சிற்றிதழ்களின் - இன்மையை ஒரு பிரதானமான காரணம் என்று சொல்லமுடியும். சிற்றிதழ்கள் இட்டுத்தரும் தத்துவப் பின்னணியில் எழுதி உருவான கவிஞர்களுக்கும் இன்று நடுப்பத்திரிக்கைகளில் உருவாகி தொகுப்பைப் பார்த்துவிடத் துடிக்கும் புதிய கவிஞர்களுக்கும் துல்லியமான வேறுபாடுகள் உள்ளன." என்கிறார் பிரம்மராஜன்; தமிழச்சி தங்கபாண்டியனின் 'வனப்பேச்சி' முன்னுரையில். தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய அம்சப்ரியா சிற்றிதழ் சூழலால் வளர்க்கப்பட்டவர். சிற்றிதழ்கள் என்பவை உண்மையான மாற்றுப் பண்பாட்டு /அரசியல் செயற்பாடுகள் என நம்பும் 'தற்கொலைப் படையைச் சார்ந்தவர்.

யாரோ ஒருவருக்கான

விண்ணப்பத்தை உன் எழுதுகோலால்

இடைவிடாமல் எழுதியபடியிருக்கிறாய்

என்று தன் சொற்களால் தானே அடையாளப்படும் நவீன கவிஞர். புன்னகை என்ற சிற்றிதழை நம்பிக்கையுடன் மிக நீண்டகாலமாக நடத்திவருகிற 'தொடர் பயணி'. தொண்ணூறுகளிலிருந்து என்னோடு தோழமையிலிருக்கும் என் இனிய சகபயணி.

இத்தொகுப்பை நான் வாசித்து முடித்தபோது, என் தோழர் நவீன வாழ்வை நவீன சொற்களில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் கலாபூர்வமாக வென்றிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

பிரபஞ்சத்தை ஒரு முனையிலிருந்து ரசித்துத் தின்னும் தீயெனப் பற்றிக் கொள்ளும் குமரப் பருவத்தில் இளைஞரெல்லாம் தங்கள் உடல்களை, மனங்களை ரசித்துத் திளைத்துப் பேசி பொழுது குடித்துக் கிடக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல்களை, மனங்களை, மது குடித்துக் களிக்கிறது. எதிரே இருக்கும் கண்ணாடியில் தங்கள் முகம் தவிர பிற எவற்றையும் பார்க்க விரும்பாத இவர்களின், கொண்டாடிக் குதித்தோடும் மொழியின் திமில் பிடித்து நிறுத்தி சாக்கடைத் தண்ணீரோடு கலக்கும் எதிர்காலத்தை,

கசிந்திருக்கிறது ரத்தம்

சற்றுமுன் போதையில் தடுமாறி விழுந்தவனை

அவசரமாய் அள்ளிச் சென்ற வாகனம்

அன்றிரவு கனவில்

தீராத பாதையில் போய்க் கொண்டிருந்தது

எனக் காட்ட முயலும் அம்சப்ரியாவை முழங்கால்களும் முழங்கைகளும் நெஞ்சுச்சதையும் சிராம்பு கீற பனையேறி, 'கொண்டைக் கட்டை' சுற்றிக் கோர்த்து எழுந்து நின்று கீழே பார்த்து பிரமிக்கும் புதிய மரமேறியாக இல்லாது கூர்ந்து கவனிக்கும் பருந்தைப் போன்று தன் சக மனித வாழ்வைக் 'காணும்' பெருங்கருணை கொண்டவராக இத்தொகுப்பினூடே பார்க்கவியல்கிறது.

எனக்கு மேய்ப்பர்களைக் கண்டால்! நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. உலகில் மேய்ப்பர்களைத்தான் நான் அதிகம் சந்தித்திருக்கிறேன். மேய்ப்பர்கள் தேவையேயில்லாமல் வெயிலில் காய்கிறார்கள். நான்கு கால்கள் கொண்ட குட்டிகளை அவசியமற்று தோளில் சுமந்து திரிகின்றனர். அதள பாதாளங்களில் தவறி விழுந்துவிடாமலும் பெரு முள் பாதைகளில் / கொண்டல்களில் சென்று மாட்டிக் கொள்ளாமலும் காப்பாற்றுவதாய் சொல்லிக் கொள்ளும் அவர்களின் கூரிய அரிவாள்களின் முன் கொண்டு நிறுத்துகின்றனர். தாடிபோட்டு வேலி மேய்ந்தால் உடல் நீளுமென்பதால் கட்டைக் கம்பால் வீசிக் கண்டிக்கின்றனர். ஆக்ரோசமாக முட்டி வளர்ந்தால் வீரம் முகிழ்த்துவிடுமென்று செல்லமாய் முட்டப் பழக்குகின்றனர். பாய்ந்தோடித் தப்பும் பரம்பரையாயினும் மந்தைகளாக்கி மேய்ச்சல் நிலங்களுக்கு அழைத்துச் சென்று, பானை வயிற்றை வளர்த்தெடுத்து நடக்கப் பழக்குகிறார்கள். இத்தகைய மேய்ப்பர்களால் ஆனது / பேணப்படுவதுதான் அரசமைப்புகள். சாவதற்காய் வளர்க்கப்படும் உயிரினங்களாகத் தம் சொந்தக் குடிமக்களைப் பார்க்கும் அமைப்புகளைத்தான் நாம் அரசுகள் என்றழைத்து கொண்டிருக்கிறோம். நமது அன்றாடங்களைத் தீர்மானிக்கும் அவைகளின் சூட்சுமங்களை கட்டவிழ்க்கும் அம்சப்ரியா,

நியாயத்தின் தராசுகளை

முன்னோர்களிடமிருந்து பெற்ற உங்களை

இரக்கமற்றுத் தூற்றுகிறது நடைமுறை

ஒவ்வொரு எடைக்கல்லையும்

எண்ணியெண்ணிக் கடலில் எறிவதாக எண்ணி

வீசிக் கொண்டிருக்கிறீர்கள்

அது முதலில் உங்கள் வாழ்க்கைத் துணையைக் கொல்கிறது

.....

அரசோ உங்களைக் கொலை செய்துவிட்ட திருப்தியில்

இறப்புப் பட்டியலில் கூடுதல் பெயரை இணைக்கிறது

என்று நமக்கு விதிக்கப்பட்ட இந்த நடைமுறை வாழ்க்கையைக் காட்டுகிறார்.

எல்லார்க்கும் எல்லாவற்றையும் 'காட்டிவிட' முடியுமா என்ன? அத்தோடு காட்டுவதன் / முயலுவதன் அவஸ்தை எத்தனை கொடுமையானது என்பதனையும் அவரது சொற்கள் ;

இன்று இப்படியாய் கழிந்த பொழுதை

சடாயுப் பறவையாய்

உங்களுக்கு அடையாளப் படுத்துவது

என் கடமையென்றாயிற்று

என பளீரிடுகின்றன. என்ன கொடுமை எனில் சடாயுக்களாக இருக்க நேர்ந்தால் ராவணனிடம் ஒரு 'குவார்ட்டர்' பெற்றுக் கொண்டு "சீதையையோ, ராவணனையோ, இந்தக் காட்டிலோ இந்தப் பகுதியிலோ நான் ஒருபோதும் பார்க்கவில்லையே" என்று சொல்லி இராமனிடம் இளிக்கும் வாழ்வைத்தான் மனிதர்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம் எனச்சுட்டுரைப்பதில்தான் அம்சப்ரியாவின் வெற்றி திளைக்கிறது.

கணவனை இழந்தோர்க்குக் 'காட்டுவது' இல் என்கும் சிலம்பு. காலத்தை இழந்தோர்க்கும், தேசத்தை இழந்தோர்க்கும் அஃதே என்கிறார் அம்சப்ரியா.

தவறிப் போன ஆற்றின் பேரழகை

புறக்கணிக்கப்பட்ட கிணற்றின் சுடர்மிகு ஆழத்தை

மறுக்கப்பட்டக் குளத்தின் பெரும் அமைதியை

தேடித்தேடி நீந்துகிறாள்

சுற்றுலாத் தலத்தின் செயற்கை நீச்சல் தொட்டியில்

சிறகுகளைக் குறுக்கியபடி சிறுமியருத்தி....

என்று திருடுபோகும் சூழலின் அழகு குறித்தும், பறிக்கப்படும் குழந்தைமைக் காலங்கள் குறித்தும் விசனப்படும் அம்சப்ரியாவின் ஒளிச்சிறகுச் சொற்கள் பிள்ளைகளின் வண்ணமிகு குகைகளுக்குள் ஒரு வண்ணத்துப் பூச்சியென பயணிக்கின்றன இத்தொகுப்பின் பல கவிதைகளில்.

போலவே...,

வாழ்கின்ற மரங்களின்

நாடித்துடிப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது

வேர்கள் உணர்கின்றன உலகில் எங்காவது ஒரு மூலையில்

தன் இனமொன்று உயிர்விடும் அவலத்தை

என்று மண் இழக்கும் / பறிக்கப்படும் கொடுமை குறித்தும் துலக்குகிறார் தம் கவிதைகளில்.

ஒரு கவிதை வழங்குகிற நன்மையும் தீமையும் அது வாசகரை நாடிச் சென்றடைந்து அவர்க்கு நலம்புரியும் தன்மையால் ஆளப்படுகிறது என்று கருதுகிற சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவன் நான். வாசகர் மேற்கொள்வது மறுபடைப்பேயாயினும் வாழ்வுச் சூழல் ஒன்றேபோல விதிக்கப்பட்டிருப்பின் கவிஞரின் கருத்துநிலையை ஏதேனுமொரு சரடின் / சாளரத்தின் வழி சென்றடைய வாசகருக்கு ஆயிரம் சாத்தியக்கூறுகள் இருக்கவே செய்கின்றன.

அம்சப்ரியாவின் கவிதைகளை வாசிக்கும் எவர்க்கும் இந்த விதிக்கப்பட்ட வாழ்வின் மீதான மீளாய்வு என்பது துளிர்க்கவே செய்யும். வேறெந்த 'மொழியாலான படைப்புகளையும்' விட நுண்ணிய கூறுகள் பல கொண்ட கவிதைக் கலையானது சரியான சொற்களின் இறுக்கத்துடன் யாக்கப்படுமாயின் அது காலத்தை ஊடறுத்துப் பாய்ந்து பிறிதொரு வெளியைக் கண்டடையவே செய்யும். அம்சப்ரியாவின் இந்த சொற்களுக்கு அந்த வல்லமை முன்னினும் இப்போது கூடியுள்ளது.

பின் வாழ்வின் முதல் பலூனை

இந்தப் பூமியைப் போல

பெரிதாக்கிவிடும் பேராசையில்

ஊதிக்கொண்டேயிருக்கும் அம்சப்ரியாவின்

மூச்சுக் காற்றாய் அவரின் கவிதைகள்..

வெடிகனிகளைப் போல

வெடித்துச் சிதறுகையில் துயரம் குடித்து

காற்று வெளியெங்கும் பரவிக்கிடக்கும்

துளித்துளியாய் சூரியன்கள்...

என்பது என் மறுவாசிப்பு. நீங்களும் அவசியம் வாசிக்க வேண்டும்.

Pin It