1
குறுக்கும், நெடுக்குமாய்
அலைபாயும்
”செல்’’ கதிர் வீச்சுகளில் சிக்கி
சின்னாபின்னாமாயிருக்குமோ...?

விளைநிலங்கள் எல்லாம்
வீட்டு மனைகளான போது
மூடப்பட்ட கிணறுகளில்
மொத்தமாய் புதையுண்டதோ...?

மரங்களெல்லாம்
வெட்டப்பட்டதால்
மறைவிடம் இல்லாது
மாண்டு போயிருக்குமோ...?

கதை சொல்லும் பாட்டி இடத்தில்
கார்ட்டூன்கள்
வந்துவிட்டதால்
ஒளிந்து கொள்ள கதைகளின்றி
ஒழிந்து போயிருக்குமோ...?

பிஞ்சுகள்கூட தமக்கு
அஞ்சுவதில்லையென
பேதலித்துப் போய்
தற்கொலை பண்ணியிருக்குமோ...?

என்னதான் ஆயின...?
எங்கேதான் போயின...?
நம் பேய்கள்.

2
பள்ளிப் பேருந்தில்
இருந்து
பறக்கும் முத்தம்
விட்டது குழந்தை.
சட்டென
வசந்த மழைத்துளி
ஆனந்தமாய்
வாங்கிக் கொண்டது...
அம்மாவிற்கு முன்னே.
இன்னமும்
முத்தங்களை வேண்டியபடி
இரையத் தொடங்கியது
பெருமழை.
முத்தம் அருந்திய
முதல் துளி மட்டும்
பின்னொரு
நாள் ஆகும்.
செடியில் பூவாய்.
சிப்பியில் முத்தாய்.

3

நகரத்து வீதிகளில்
நடந்து, நடந்து மகிழ்கிறான்...
சேரியிலிருந்து வந்தவன்
செருப்பணிந்த கால்களோடு.

4
புழுக்கமாய்
இருந்தாலும் பரவாயில்லை...
பூட்ஸ்-ஐ காலில்
போட்டுக்கொள்.
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை...
மேலத்தெரு வழியே
பள்ளிக்குப் போ...!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து உதைத்தார்கள்
உன் பாட்டனை.

5

”இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று
சொல்லுவதில்லை”
பாடியபடியே
ரயிலில் ஏறினான்...
பார்வையற்ற யாசகன்.
அங்கு
யாருமே இல்லையென்பதை
யாருமே சொல்லவில்லை.

6
”பிளாஸ்டிக் பூவொன்றை
பற்களால் கடித்தபடியே
உறங்கிப் போனாள்...
லட்சுமிக் குட்டி.
எப்போதும்
வாடியபடியே திரும்பிப் போகும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இனிமேல்
கிடைக்கும்... தேன்.

7
உணவருந்தும்...
உதவிகள் செய்யும்...
ஆசீர்வதிக்கும்...
அரவணைக்கும்...
கைகுலுக்கும்...
கவிதைகள் எழுதும்...
வரவேற்கும்...
வழியனுப்பும்...

வரிசையாய்
சொல்லிவிட்டு
ஆசிரியர் கேட்டார்

வலது கை
வேறென்ன செய்யும்...?

வகுப்பறையே
மௌனமாய் யோசிக்க
இயல்பாய் சொன்னான் அவன்.

”மலம் அள்ளும்’’


8
இந்தக் கவிதையிலிருக்கும்
எல்லாச் சொற்களும்
நீங்கள் அறிந்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
எல்லாப் பொருளும்
நீங்கள் உணர்ந்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
துயரச்சம்பவம்
நீங்கள் பார்த்தவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
ஓயாத அழுகுரல்
நீங்கள் கேட்டவைதான்

இந்தக் கவிதையிலிருக்கும்
ஆயுதங்கள்
நீங்கள் தெரிந்தவைதான்

பின்னெப்படி...?
பின் எப்படி...?

இந்தக் கவிதைக்கு
வந்த கோபம் மட்டும்
உங்களுக்கு வராமல் போனது...,

 

9
நீ
முள்வேலிக்குள் கிடந்தாய்
நான்
சொல்வேலிக்குள் கிடந்தேன்.

செந்நீர் காயாத
உன் பொழுதுகள் பற்றி
இன்னமும்
சேதிகள் வரத்தான் செய்கின்றன...

இருந்தும்...

கண்ணீர் கசியும் - இக்
கவிதையொன்றைத் தவிர
உன்னிடம்
கையளிக்க வேறெதுவுமில்லை
என்னிடம்.

ஆனாலும் சோதரனே...!

நாளை எழும்
உன் வரலாறு.
அதில்...
தோட்டாக்களால்


நீ வீழ்ந்ததைப் போலவே
துரோகத்தினால்
நான் வீழ்ந்ததைப் பதிவு செய்...

ஏனெனில்
நீ இறையாண்மைக்காக போராடினாய்
நான் இறையாண்மையோடு போராடினேன்.

10

மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அடிபணிவதால் வரும்
ஆதாயங்கள் பற்றி
அறியாதவன் நக்கீரன்... 
ஆகவே
 பாடிவிட்டான்
 "குற்றம் குற்றமே'' என
மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அதிகார உறவின்
அனுகூலங்கள் பற்றி
அறியாதவன் கம்பன்...
ஆகவே
 பாடிவிட்டான்
 "மன்னவனும் நீயோ
 வளநாடும் உனதோ'' என.

மன்னிக்க வேண்டும் மகாபிரபு

அனுசரித்துப் போவதன்
பலன்கள் அறியா
பைத்தியக்காரன் பாரதி
ஆகவே
 பாடிவிட்டான்
 "அச்சமில்லை
 அச்சமில்லை'' என

ஆனால்... பிரபோ!

அடியேன் அப்படியல்ல

கடைக்கண் பார்வை போதும்
உங்கள்
 காலடியில் கவிழ்ந்து கிடப்போம்
 நானும்
 என் கவிதைகளும்.

11

அநீதி நடந்தால்
கண்களை மூடு
அவலக்குரல் கேட்டால்
காதுகளை மூடு
பொதுப்பிரச்சனையா...?
பஜனையைத் தொடங்கு
போராட்டமா...?
பூசையில் மூழ்கு

தேசமே எரிந்தாலும்
திரும்பிப் பார்க்காதே
மயானமாய் போகட்டும்
தியானம் கலையாதே...!

சாதிக் கொடுமையா... சாட்சாத் பகவான் செயல்
சமூக ஏற்றத்தாழ்வா... ஐயோ! முன்வினைப்பயன்
இனப்படுகொலையா... இரங்கல் தீர்மானம் போதும்

ஏனிந்த கொடுமையென எதற்கும் பதறாதே
"ஆனந்த அலை'' அம்புட்டும் உனக்கே

பாழும் சமூகம் பாழாய் போகட்டும்
"வாழும் கலை'' இது அறிவாய் குழந்தாய்!

(கண்மணிராசா - இராசபாளையத்தில் தனியார் நூற்பாலைத் தொழிலாளி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர். கவிதையாவது கழுதையாவது கவிதைத் தொகுப்பு இவரின் கவியாளுமைக்குச் சான்று. களம், புன்னகை, நீலநிலா, நாளை விடியும், கல்கி, ஆனந்த விகடன், தீம்தரிகிட, இறக்கை, செம்மலர், தாமரை ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன.)

Pin It