கந்தசாமிப் பிள்ளை தான் நடத்தும் அதிநவீன இலக்கிய இதழான புதுஸரக்கு இதழுக்கு புரூஃப் பார்த்துக் கொண்டிருக்கும் புனிதமான வேளையில் பிரசன்னமாகிறார் மிஸ்டர் கடவுள்.

க.பி:வாரும் வாரும்! என்ன இது திடீர் விஜயம்?

கடவுள்:நான்தான் கீதையிலேயே சொல்லியிருக்கிறேனே "சம்பவாமி யுகே யுகே"

க.பி:புதுமைப்பித்தன் காலத்தில் சந்தித்து காஃபி சாப்பிட்டதும் ட்ராமில் பயணித்ததும் நேற்றுப் போல இருக்கு... ம்ம்! காலம்தான் எவ்ளோ வெகுவேகமாக ஓடிப்போச்சுது! அதெல்லாம் சரீ... இன்றைக்கு என்ன வரம் தரப்போகிறீர் எனக்கு.

கடவுள்:வரமா... சாபங் கொடுக்காமலிருந்தாலே உமக்கு நல்ல காலம் என்று நம்புவேன்...

க.பி:என்ன ஓய்! ரொம்பவும் காட்டமாக சீறுறீர்! என்னவாச்சு உமக்கு! அன்பே சிவமல்லவோ நீர்.

கடவுள்:ருத்ரனும்... நரசிம்மமும் நான்தான் ஓய்!

க.பி:அது சரி... இப்போ யாரைக் கிழிக்கப் போறீர்?

கடவுள்:ம்ம்! உம்மைத்தான்! உம்மைப் போல நவீன கவிதையின் பெயரால் பம்மாத்து பண்ணிட்டு இருக்கும் நாசகாரக் கும்பலைத்தான்...

க.பி:ரொம்பவும் உஷ்ணமாக இருக்கீர் போல... கொஞ்சமா காபி சாப்புடுவோமா... தஞ்சாவூர் டிகிரி காபி. க.நா.சுவுக்கும் தஞ்சை ப்ரகாஷ்-க்கும் பிடித்த டிகிரி காபி...

கடவுள்:பலே! காபி சாப்பிடற பழக்கம் மாறலையோ! வழக்கமா டாஸ்மாக் மலரைச் சுற்றுகிற வண்டுகளாச்சே நவீன புலவரெல்லாம்!

க.பி:கவிதையே போதை...ன்னா! கவிஞனுக்கு போதை தேவையன்றோ...

கடவுள்:போதை ஏறிட்டா புத்தி மாறிடுமோ... புலவர்காள்... நாகர்கோவில்காரருக்கு யாரைப்பத்திப் பேசுறோம்னு புரியாதா.. இல்ல. தென்காசிப் பிள்ளைவாளுக்குத்தான் "பட்டா பெட்டி''யோட ஒமக்குச்சி நரசிம்மன் மாதிரி டான்ஸ் ஆடுறது தெரியாதா...

க.பி:உணர்ச்சியில் மிகுவது கவிதை... உணர்ச்சி மிக்கவன் கவிஞன்....

கடவுள்:சிற்றிதழ்களில் படைப்புகள் வரவேண்டுமெனில் அல்லது வெளியிட்டதற்கு நன்றி செலுத்த பல்வேறு யுக்திகளை பிப்ரவரி உயிரெழுத்தில் சுதிர் எழுதியதைப் படிக்க வில்லையா... அதுவும் விஜயமகேந்திரன் டாஸ்மாக் விடுமுறை தினத்திலும் ஓடிஓடி சேவை செய்ததை நெகிழ்ந்து போய் உளறி... மன்னிக்கவும் எழுதியிருக் கிறாரே... அடடாவோ அடடா!

க.பி:தனி நபர்களின் பலவீனங்களை தாக்கலாமா... தாங்கள் கடவுள் அல்லவா...! பிழை பொறுக்கலாகாதா...

கடவுள்:ஆமாய்யா! கடவுள் கடவுள் என்று சொல்லியே எளிய மக்களிடமிருந்து என்னையும் அந்நியமாக்கிடாதீர்... கவிதையைச் செய்ததுபோல...

க.பி:இதென்ன புதுக்கதை!

கடவுள்:கவிதையை முதலில் சமூகத்திலிருந்து அப்புறப் படுத்தினீர்கள்... பிறகு இலக்கியத்திடமிருந்து அப்புறப்படுத்தினீர்கள். வெகுசீக்கிரம் கவிதையை மனிதனிட மிருந்தே அப்புறப்படுத்தி விடுவீர்கள்... நாசகார கும்பல்... உலக மகா யுத்தங்களுக்குப் பிறகு உலகின் பல பகுதிகளிலும் யுத்தங்களின் பெரும் விளைவாய் ஏற்பட்ட அந்நியமாதலில் சமூக மனிதன் தனி மனிதனாக திரிந்து போனது வரலாற்று சோகம்! அதை அப்படியே தயிர்சாத கும்பல் தமிழிலும் இறக்குமதி செய்து மேற்கின் நிழலில் அடைக்கலமானது அயோக்கியத் தனமல்லவோ. "நவீனவாதப் படைப்பாளர்கள் முதலாளித்துவச் சமூக நெருக்கடியிலிருந்து தப்பித்து அகவயவுலகிற்குள் அடைக்கலமானார்கள்''

மேற்குலக நவீனவாதப் படைப்புகள் மனிதனை அவனது வரலாற்றுச் சூழலில் இருந்தும் கத்தரித்துத் தனிமைத் துயரில் மிதப்பனவாகக் காட்டின'' என்கிறார் பா.ஆனந்தகுமார்.

ஆனால் இன்றைய சூழலென்ன! ஊழல்... வேலையின்மை, சுரண்டல், அரச பயங்கரவாதம், இனப் படுகொலைகள். இப்படி ஏதாவதொன்றுக்கு எதிராக எழுகிறதா உங்கள் நவீனப் புலவர்களின் எழுதுகோல்... இருண்மை... மனக்குகை... அக உலகம். புரியாத் தமிழ்... அறியாப் பழக்கம். கலைச்சுப் போட்ட வைக்கோல் போர் மாதிரி. புல்ஷிட்...

க.பி:இரும்... இரும்... ஆசுவாசப்படும்... ஏனிந்த வேகம்... யார்மீது கோபம்?

கடவுள்:கோபமில்லை பிள்ளைவாள்... வருத்தம் செம்மாந்த மொழியின் சிறப்பு வாய்ந்த கவிஞர்கள் சின்ன விஷயங்களுக்காக விலைபோவதும், சமூக பொறுப்பின்மையும் குறித்த ஆதங்கம்! தற்கொலை செய்து கொண்ட ஆத்மாநாமுக்கு இருந்த சுரணைகூட சமகால கவிஞர்களுக்கு இல்லையே என்கிற பொறுமல்!

"கவிதைகளின் பிறப்பு நிகழ்வது ஒரு சாதாரண கணத்தில்தான் கவிதைகளை உணர்ந்தவர்கள் கவிதைகளைப் பெற்றெடுக்கிறார்கள். எழுதுகோல் பிடிக்காத, எழுத்தின் வளைவுகளைத் தெரியாத எத்தனையோ மகாகவிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் கவிதை போல்.

வாழ்க்கைக்கு தவமிருப்போர் மத்தியில் கவிதையாகவே, கவிதைக் காகவே வாழ்ந்த வர்களும் உண்டு. கவிதை என்பது ஒரு விண்மீனை செதுக்கி விண்ணில் செலுத்துவது போன்ற தாகும். ஆனால் இதனை வியர்வையை வழித்து வீசும் ஒரு சிறு பொழுதில் செய்துவிடும் வித்தகக்

கவிஞர்களின் வீர்யத்தை என்னவென்று வியப்பது.'' என ஆதங்கப்படும் மதியழகன் சுப்பையாவை உணரமுடியுமோ உங்கள் நவீனப் புலவர்களால்...

அவசரநிலையை விமர்சித்த ஆத்மாநாமின் ஆண்மை உண்டா இன்றைக்கு எழுதுகிற நவீன கவிஞர்களிடம்...? மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைகளின் தரம் குறித்து பிரஸ்தாபிப்பவர்கள் அவருடைய வீரத்தை தைர்யத்தை கண்டுகொள்வதில்லை. துப்பாக்கி புலி வால்டர்

தேவாரம் பதவியிலிருந்தபோதே அவரைக் கவிதைச் சாட்டையால் விமர்சித்த இன்குலாப்போடு மப்டி யில் வந்து "உங்க பேர் என்னவென்று கேட்டால்கூட.. அய்யய்யே... நான் கவிதையே எழுதுவதில்லை'' எனப் பயந் தோடி பாட்டிலுக்குள் பதுங்கும் இன்றைய நவீனக் கவிஞர்களை ஒப்பிடவும் கூடுமோ...

என்ன பிள்ளைவாள்... ஏனிந்த மவுனம்...?

க.பி:மவுனம் ஓர் வசதியான மறைவிடப் புகலிடமென்பது தாங்கள் அறியாததா ஆண்டவனே...!

கடவுள்:சமநிலை தமிழின் நவீனர்கள் எழுதுவதெல்லாம் தமிழ்க் கவிதைகள்தானா என்ற சந்தேகமிருக்கு... எங்கேயும் தமிழ்ச் சூழலில்லை... பண்பாடில்லை... தமிழ் அழகியல் இல்லை... வடிவத்தை மட்டும்தானே இறக்குமதி செய்தோம்! உள்ளடக்கத்தைக்கூடவா...

கூடவே ஜாதிப் பெருமைகள் வேறு... ஒருத்தன் கவிதையில்கூட "சக்கிலியன்'' என எழுத றான். இன்னொருத்தனோ சைவப் பிள்ளைக்கு கவிதை எழுதவரும்னு புலம்பறான்... எழுதற மத்தவனெல்லாம்... இந்த ஸ்டேட்மெண்ட்க்கு பதில் தர சுரணையுமில்லாமலிருப்பதுதான் சோகம்! தமிழ்ல அக உணர்வு... புற உணர்வு என நவீனக் கவிதைப் போக்கில் இரண்டு வகை இருப்பதை நீர் அறிவீர்தானே! அகம் பாடுபவர்கள் புறம் பாடுபவர்களைப் பொருட்டாக மதிப்ப தில்லை! அதெல்லாம் சப்தமிடுகிற கவிதைகளாம்... கவிதைகள் மவுன வாசிப்புக்கு மட்டுந்தானாம். என்னய்யா கூத்து இது! கவிதை கவிதையா இருக்கணும்! அதில் நவீனத் தன்மை / செய்தி இருக்கணும்! என்ன ஓய்! சரிதானே நான் சொல்றது!

க.பி:அனைத்துமுணர்ந்தவரல்லவா தாங்கள்! தாம் பிழையாகவா பேசிவிடப் போகிறீர்கள்?

கடவுள்:கவிதையை புனிதப் பசுவாக்கிய அம்பிகள் கவிதை யென்பது உபதேசம் செய்வதல்ல... அது கலை! கலைக்காகவே என்ற கயிறால் கட்டிப் போட்டது குறித்து விமர்சகர் இந்திரன் எழுதுவதிது :

"கவிதையின் நோக்கம் கவிதைதான் என்று பேசுபவர்கள் கவிதையின் செயல்பாட்டை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக்கி அதாவது கை, கால்களை முடக்கி அதனை ஒரு "போன்சாய்'' நிலைக்கு ஆளாக்கி விடுகிறார்கள். இதனால் கவிதை என்பதின் சமூகச் செயல்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது...''

விடுதலைப் போராட்ட காலத்தில் எளிய மக்களின் கலை வடிவங்களையும், மொழியையும் கவிதைக்குள் கொண்டு வந்து அதைக் கூர்தீட்டி ஆயுதமாக்கினானே பாரதி, அவன் கவிஞனில்லையா...?

உள்ளூர் கொட்டேஷன் உமக்குப் புரியாதெனில் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்த ஒன்றையும் இங்கே குறிப்பிடுவேன் :

"மொழி, குறிப்பாக இலக்கியம் மிகவும் பழமையான தவிர்க்க முடியாதபடிக்கு, சமூகத்தின் வேறு எந்த நிறுவனத்தைக் காட்டிலும் பயன்பாட்டுத் தன்மை கொண்டது.'' கலையை ஓர் ஆயுதமாகக் கருதிய நோபல் கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி-யின் சொற்களிவை.

இன்னொருபுறம் குழுமனப்பான்மை கொடிய வியாதி யாய்! தென்காசி விக்கி-க்கு லக்ஷ்மி மணிவண்ணன்தான் சோடா. சங்கரராமசுப்ரமணியன் ஊறுகாய்!

கரிகாலனுக்கோ கண்டிப்பாக தபசி, ஞானதிரவியம் புகழ் பாட வேண்டும்...

காலச்சுவடுக்கு சுகிர்தராணி. உயிரெழுத்துக்கு சக்திஜோதி. முழுபாட்டிலும் சிகரெட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டால் முன்னுரையிலேயே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யும் மூத்த படைப்பாளிகளை என்ன சொல்ல...?

இது நடுவில் சிற்றிதழ்கள் அடிக்கிற கூத்து தனிக்கதை! இலக்கியம் வளர்ப்பதற்காக (!) நல்லி, தினமலர், லலிதா ஜுவல்லரி வகையறாக்களிடம் மடிப்பிச்சை கேட்கிற கவிதை கனவான்களில் கோவை ஞானி, விஜயபாஸ்கரன் என்ற பெயர்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்!

க.பி:ஆம்பிளையாள்களை மட்டுமே போட்டுத் தாக்கினா எப்படி...? பெண் கவிஞர்கள் பக்கமும் வாரும்...

கடவுள்:சரியாகக் கேளும் ஓய்! பெண் கவிஞர்களா... பெண்ணியக் கவிஞர்களா...?

ஏனென்றால் குட்டிரேவதி தீராநதி பேட்டியில் ஒருமுறை கூறினார் : "நாங்க நாலுபேர் மட்டுந்தான் கவித எழுதறோம் (குட்டிரேவதி, சல்மா, கனிமொழி, சுகிர்தராணி) அது ஒரு நகைச்சுவை வரியென்றாலும் அதற்கேகூட பிற பெண் கவிஞர்கள் பதிலேதும் தரவில்லை!

சண்டைக் கோழி படத்தில் "குட்டிரேவதி'' என்று பெயரைக் குறிப் பிட்டதற்காக சண்டைக்கோழியாய்க் கிளம்பியவர்கள் கயர்லாஞ்சியிலும் பிற இடங்களிலும் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானபோது அதையெல்லாம் எவருக்குமே எழுத நேரமில்லாமல் போனது!

கவிதையில் அந்த நிகழ்வை பதிவு செய்தவர்கள் அரங்க மல்லிகாவும், புதியமாதவியும். (அவர்களும் தலித் சமூகத்தைச் சார்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

மணிப்பூர் போராட்டம் குறித்து உரையில் வாஸந்தி, கவிதையில் புதியமாதவி தவிர வேறுயாரும் பதிவு செய்துள்ளார்களா? உண்மையில் பெண்(ணிய) படைப் பாளிகளுக்கு சமூக உணர்வு என்ற ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறி!

எப்படியோ கவிதையும், கவிதை நூலும் வெளி வந்துவிடுகிறது. ஆசைதீர ஆண்களைத் திட்டி எழுதி விடுகிறார்கள்! உடல்மொழியை எழுத வேண்டியது தான்! அதற்காக எல்லாக் கவிதைகளிலும் கண்டிப்பாக யோனி, முலை, தூமை குறித்தெல்லாம் பதிவு செய்திட வேண்டுமா... ஊடகத்தின் அதிர்ச்சி அலைகளை ஏற் படுத்தும் அற்ப முயற்சில்லவா இது!

க.பி:ரொம்பவும் பேசாதேயும்! சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்!

கடவுள்:நவீன தமிழ்க் கவிதையில் தற்போது இன்னொரு நாடகம் நடக்கிறது! கிராமங்களின் புனிதத்தை ஊர் உலகத்துக் கெல்லாம் சொல்வது! நகரங்களிலும், பெருநகரங்களிலும் வசதியாக வாழ்ந்து கொண்டு கிராமங்களைப் பற்றி புகழ்ந்து எழுது பவர்களுக்கோர் கேள்வி! உண்மையில் இன்னமும் கிராமங்களில் ஜாதியப் பார்வையும், நிலவுடைமைச் சிந்தனைகளும் மாறிவிட்டனவா? கிராமக் காதலர்கள் ஏன் வசதியாக திண்ணியத்தையும், உத்தரப்புரத்தையும், மேலவளவையும் (மறைத்து) மறந்துவிடுகிறீர்கள்,

க.பி:சரி முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்?

கடவுள்:நவீனத் தமிழ்க் கவிதை (கவிஞர்) என்று சொல்லித் திரியும் அழுகுணி சித்தர்களிடம் ஆரோக்யமான சிந்தனை இல்லை என்கிறேன்!

வெற்று வார்த்தை அடுக்குகளை கவிதைகளென நம்பச் சொல்லாதீர்கள்

இத்தனை நாட்கள்
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
சொல்லாமலே (அழகியசிங்கர்)

புதிர் முடிச்சுக்களை நவீனத் தமிழ்க் கவிதையென அழைக்காதீர்கள்.

ஏன், எதற்கு
என்பது தெரியாது
எனினும் நிகழ்ந்துவிட்டது
ஏன் எதற்கு
என்பது விளங்காது
எனினும் நிகழ்கிறது
ஏன் எதற்கு
என்பது புரியாது
எனினும் நிகழும் (மாலினி புவனேஷ்)

நல்ல கவிஞர்களை, நல்ல கவிதைகளை, நல்ல நூல்களை "குழுவில்'' இல்லை. "டாஸ்மாக் ஜமாவில்'' இல்லை என்ப தற்காக புறக்கணிக்காதீர்கள்... மறைக்காதீர்கள்...

சரீ... இதெல்லாம் இருக்கட்டும் பிள்ளைவாள்! உங்க இலக்கிய இதழுக்கு சந்தா ஒன்று நம்ம பேர்ல எழுதும் ஓய்!

க.பி:அட! தோ பார்றா....!

Pin It