நாற்புறமும் எழும்பி நிற்கும் சுவற்றின்
சிறு வாயில் வழி உள்நுழைந்து
ஒலியை விசிறி எறிவதும்
அது எதிரொலித்துத் திரும்புகையில்
குதூகலிப்பதுமாய் விளையாடுகிறான் திலீபன்

அண்ணனின் விடுமுறை கழிக்க
அண்ணனோடு திலீபன் ஊருக்குச்
சென்றிருக்கையில்
அவனின் ஒலிவிளையாட்டை
அப்பா ஆட ஆரம்பித்திருந்தார்

இருபத்தெட்டு வயதான ஒலி
எதிரொலித்துத் திரும்புகையில்
ஒண்ணே முக்கால் வயதாயிருந்தது

வாழ்ந்துகெட்ட சாவி

எடுத்ததும் முதலில் சட்டைப் பையிலும்
பிறகு சுவற்றின் ஆணியிலும்
கனத்துத் தொங்குகிறது
வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்
மனசில் ஆழ்ந்து கிடக்கும்
சோகத்தைப் போல

யாரோ நழுவவிட்டு
தெருவில் என் கைசேர்ந்த
வீட்டுச் சாவி

சத்யாகாலம்

புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
தலைக்கு ஊற்றும் நிசிகளால்
நடுக்கமுறுகின்றன இரவுகள்

- கதிர்பாரதி

Pin It