1

மனப்பிறழ்வுற்ற பெண்ணின்
உடல் வசீகரம் தேடும்
தீ பழுத்த பார்வையைப் போல்
விழுகிறது புன்னகைச் சிரமேறும் பார்வை
ஒரேயரு ஆப்பிள் கேட்டபோது...

நூற்றுப் பதினைந்து கிராம்
காட்டிய மெசினில்
வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே
ஆப்பிள் நறுக்குகள் உண்ட
வணிகப் பெண் விலை பார்த்துத் தந்த பின்னர்
ஓடிப்போய் ஏறிய பேருந்தில்
நிலவிய தற்காலிக உடல் வனத்தின்
அசைவுகளுக்கேற்ப கைமாற்றி விரல் மாற்றி
நெற்றி, பிடரி மோதியதற்கு
மன்னிப்புகள் யாசித்து
சயனைட் தோய்ந்த சொற்களால் தைக்கப்பட்டு
காப்பாற்றிக் கொணர்ந்த ஆப்பிளைத்தான்
ஃபைவ்ஸ்டார் கேட்டு
வீசியெறிகிறான் பிள்ளை...

அப்பாவின் கனவுகளுறைந்தவொரு
பொதிபோல் போய் விழுந்துடைகிறது
தெருவிலது...

2

மார்கழிப் பனிக் காலையில்
அப்போதறுத்த வாழையிலை வேகக்
கொட்டப்பட்ட இட்டிலியில்
தேங்காய்ச் சட்டினி பிசைந்து
வலது பக்கம் மென்று
இடது பக்கம் மென்று
நாக்கில் அதக்கி கண்கள் செருகி
ருசிக்காது விழுங்கி வைத்துவிட்டேனோ...

இன்னொரு முறை
இட்டிலி வைப்பார்களா...
தொண்டைக்குக் கீழிறங்கினால்
மலம்தானே விடு...

இல்லை இன்னொரு முறை
சுவைக்க வேண்டும்...
சரி...
சதை பெருத்துச் சாவோம்
வா.

Pin It